தமிழகத்தில் சூடு பிடித்தது சட்டசபை தேர்தல் களம்!

தி.மு.க, அ.தி.மு.க அணிகளுக்கு பலப்பரீட்சையாக கமல், ரஜினி கட்சிகள்

தமிழ்நாடு மாநில சட்டசபைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் நடைபெறப் போகின்ற தேர்தல் தொடர்பான பரபரப்பு இப்போதே தீவிரமடைந்து விட்டது. தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகியவற்றைத் தவிர பலம் வாய்ந்த மாற்று அணிகள் களத்தில் இறங்கியுள்ளதால் தமிழக மாநில தேர்தல் களம் இம்முறை பரபரப்பாக அமையப் போகின்றது.

இதேவேளை தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.கவுடன் கூட்டணி தொடரும் என்று கூறிய பா.ஜ.க மாநில தலைவர் எல். முருகன், எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக ஏற்பது குறித்து பா.ஜ.க தேசிய தலைமை முடிவு செய்து அறிவிக்கும் என்றார்.

தமிழகம் முழுவதும் நேற்று (16ம் திகதி) முதல் 21ம் திகதி வரை ஆயிரம் சிறப்பு கூட்டங்களை நடத்தி, மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களின் நன்மைகள் என்னென்ன என்பது குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்க போகிறோம் என்றார் முருகன்.

இதுஒருபுறமிருக்க, தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரத்தில் பங்கேற்பதற்காக நடிகர் ரஜினிகாந்துக்கு ‘ஹை டெக்’ முறையில் பரப்புரை முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. ‘ஹோலோகிராபிக்’ எனப்படும் முப்பரிமாண காட்சி வடிவில் பரப்புரை, ஹெலிகொப்டரில் பறந்து சென்று பரப்புரை, எல்.இ.டி. திரைகள் கொண்ட வாகனங்கள் மூலம் பரப்புரை என திட்டமிடல்கள் மும்முரமாக இருக்கின்றன. எதிர்வரும் ஜனவரி மாதம் இறுதியில் இருந்தே ரஜினிகாந்த் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விடுவார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

முதல் முறையாக நடிகர்கள் கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கியுள்ளனர். இதனால் இந்த முறை போட்டி சற்று கடினமாகவும் தேசியளவிலான கவனத்தையும் ஈர்த்துள்ளது. ரஜினிகாந்தை பொறுத்தவரை தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கத்தான் விரும்பினார்.

இருப்பினும் அவரது நலன் விரும்பிகளும், அன்பர்களும், ரசிகர்களும் விடுத்த அன்புக்கட்டளை காரணமாக வேறு வழியின்றி அரசியல் பிரவேச முடிவுக்கு வந்துள்ளார். இதனிடையே மருத்துவர்கள் அறிவுரைப்படி மிகுந்த கவனத்துடன் அவரது அரசியல் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் பிரசாரம் என்பது தேர்தலுக்கு இன்றியமையாதது என்பதால் அதில் ரஜினியை எப்படி பங்கேற்க செய்வது என்பது பற்றியும் அவரால் நியமிக்கப்பட்ட பிரத்தியேக குழு ஆலோசித்து வருகிறது.

மாலை நேர பிரசாரங்களை தவிர்த்து ஜெயலலிதா பாணியில் பகல் நேர பிரசாரம் மேற்கொள்ளலாம் என்றும் அந்தப் பிரசாரத்துக்கு சென்னையில் இருந்து ஹெலிகொப்டரில் சென்று விட்டு அன்றைய தினமே ரஜினி சென்னை திரும்பும் வகையிலும் திட்டமிடல்கள் நடந்து வருகின்றன.

மேலும், தமிழகத்தின் முக்கிய நகரங்களான மதுரை, கோவை, திருச்சி,சேலம், நெல்லை, என இந்த ஊர்களுக்கு மட்டும் ரஜினியை நேரடியாக பிரசாரத்துக்கு அனுப்பி வைத்து விட்டு ஊரகப் பகுதிகளில் முப்பரிமாண காட்சி வடிவில் ‘லைவ் ரிலே’ செய்யவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதைத் தவிர வழக்கம் போல் டிஜிட்டல் ஊடகம் வழியாகவும் பரப்புரை நிகழவுள்ளது. ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ளார் ரஜினி.

மக்கள் சேவை கட்சி, என்ற பெயரில் புதிதாக பதிவு செய்யப்பட்ட கட்சி கிடையாது. ஏற்கனவே, ‘அனைத்திந்திய மக்கள் சக்தி கழகம்’ என்ற பெயரில் ஒரு கட்சியின் பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை பதிவு செய்த நபர், ‘மக்கள் சேவை கட்சி’ என்ற பெயரில் அதை மாற்றம் செய்ய இரண்டரை மாதங்கள் முன்பு கோரிக்கை விடுத்து, அது தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் நடந்துள்ளது. இந்த கட்சிக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

1995ஆம் ஆண்டில் வெளியான ‘பாட்ஷா’ திரைப்படத்தில் ஆட்டோ ஓட்டுநராக நடித்தார் ரஜினிகாந்த். ரஜினிகாந்த்தின் திரை உலக வாழ்வில் மிகப்பெரிய ஹிட் திரைப்படம் ‘பாட்ஷா’. அதன் பிறகு அவரது மசாலா படங்களின் போக்கு மாறிப் போனது என்று சொல்லலாம். ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் ரஜினிகாந்தை கொண்டு சேர்த்ததில் மிக முக்கிய பங்கு வகித்தது அந்தப் படம். எனவே ஆட்டோ சின்னம் மிகவும் பொருத்தமானது என்று பல ரசிகர்கள் கருதுகிறார்கள்.

இருப்பினும், ரஜினிகாந்த் விருப்பம் என்பது வேறு ஆக இருந்துள்ளது. அவர் விரும்பியது இரட்டை விரல் சின்னம் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள். இதை ‘ஹஸ்த முத்திரை’ என்றும் சொல்கிறார்கள். 2002ஆம் ஆண்டு வெளியான ‘பாபா’ திரைப்படத்தில் இந்த முத்திரையை ரஜினிகாந்த் கதாபாத்திரம் பயன்படுத்தியது. இமயமலையில் உள்ள பாபா தனக்கு வழிகாட்டி என்கிறார் ரஜினிகாந்த். எனவே இந்த பாபா முத்திரையை பயன்படுத்தினால் வெற்றி உறுதி என்று அவர் நம்புகிறார்.

ஆட்டோ ரிக்ஷா என்பது வருங்காலத்தில் நடைமுறையில் இருக்குமோ இல்லையோ என்பது தெரியவில்லை. உதாரணத்துக்கு சைக்கிள் ரிக்ஷா இப்போது வழக்கொழிந்து போய் விட்டது. அதே போன்ற நிலை ஆட்டோரிக்ஷாவுக்கு ஏற்பட்டால் எதிர்காலத்தில் கட்சி சின்னத்தின் நிலைமை என்ன என்பது ரஜினிகாந்தை சுற்றியிருப்பவர்கள் கேள்வியாக இருக்கிறது.

தமிழகத்தின் இருபெரும் கட்சிகள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க. இவற்றில் தி.மு.க சின்னம் உதயசூரியன். அ.தி.மு.கவின் சின்னம் இரட்டை இலை. இரண்டும் இயற்கையுடன் தொடர்புடையது. இதற்கு மாற்றம் கிடையாது. இதே மாதிரிதான், இரட்டை விரல் என்றால், ஒரு பக்கம் சென்டிமெண்ட், மறுபக்கம் எப்போதும் மாற்றமில்லாத கைவிரல் போன்ற அறிவியல் காரணமும் இதன் பின்னணியில் இருக்கிறது.

இருப்பினும், இரண்டு காரணங்களுக்காக, தேர்தல் ஆணையம் இந்த சின்னத்தை ஒதுக்கீடு செய்ய யோசிக்கின்றது. ஒன்று… ஏற்கனவே இதே போன்ற கை சின்னத்தை காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது. இரண்டு சின்னங்களுக்கு இடையே குழப்பம் ஏற்பட்டு விடக் கூடாது என்பது முக்கியம் என்பதால் தேர்தல் ஆணையம் யோசிக்கிறது. மேலும், ஆன்மீகம் தொடர்புடையது என்றால் அந்த சின்னத்தை தேர்தல் ஆணையம் அனுமதி கொடுப்பது கிடையாது. எனவேதான் யோசித்து வருகிறது தேர்தல் ஆணையம்.

தேர்தல் ஆணையத்திற்கு யோசனைகள் பல இருந்தாலும், ரஜினிகாந்த்தின் முழு விருப்பமும் இரட்டை இலை பாணியில் இரட்டை விரல் என்கிறார்கள். எனவே, தேர்தல் ஆணையத்திடம் எப்படியாவது வேண்டுகோள் விடுத்து இரட்டை விரல் சின்னத்தைப் பெற்று விட வேண்டும் என்பதில் ரஜினி தரப்பு மிகத் தீவிரமாக இருக்கிறது. இப்போது வெளியாகியுள்ள ஆட்டோ சின்னம் என்பது ஒரு வேளை ரஜினிகாந்து விரும்பியது கிடைக்காவிட்டால் பயன்படுத்தக் கூடிய இரண்டாவது தெரிவு சின்னமாக இருக்க கூடும் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் திருவிழா இப்போதே களைகட்டத் தொடங்கியிருக்கும் சூழலில், பிரசாரக் களமும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தி.மு.கவும், ‘வேல் யாத்திரை’ என்ற பெயரில் பா.ஜ.கவும், ‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற முழக்கத்துடன் கமல்ஹாசனும் தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டார்கள். இந்நிலையில் தி.மு.கவுக்காக தேர்தல் பிரசாரம் செய்ய நடிகர் சத்யராஜ் மற்றும் இயக்குநர் கரு.பழனியப்பன் ஆகியோர் களமிறங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா.ஜ.க மற்றும் அ.தி.மு.கவில் ஏராளமான நட்சத்திரப் பட்டாளங்கள் உள்ளதால் அதற்கு சற்றும் சளைக்காத வகையில் தி.மு.கவிலும் நட்சத்திரங்களை களமிறங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தி.மு.க முன்னாள் அமைச்சரின் பேரனும், நடிகருமான நந்தாவும் தி.மு.கவுக்காக தேர்தல் பரப்புரை மேற்கொள்வார் எனத் தெரிகிறது.


Add new comment

Or log in with...