ஸ்பூன் மசாஜ்

வயதாகும்போது சருமத்தின் மிருதுத்தன்மை மாறத்தொடங்கும். சருமத்தின் நெகிழ்வுத்தன்மையும் பலவீனமடையும். அதனால் முகத்தில் சுருக்கங்கள் எட்டிப்பார்க்கும். ஹோமோன்களினால் ஏற்படும் மாற்றமே இதற்கு காரணமாகும். முகத்தில் மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தை மென்மையாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்கலாம். 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் முறையாக முகத்தில் மசாஜ் செய்வது அவசியம். வீட்டின் சமையலறையில் உபயோகிக்கும் ஸ்பூனை கொண்டே எளிமையாக மசாஜ் செய்துவிடலாம். இது சரும அழகையும், இளமையையும் தக்கவைக்க உதவும்.

ஸ்பூன் மசாஜ் செய்வதற்கு இரண்டு ஸ்பூன்கள், ஒரு டம்ளர் தண்ணீர், சிறிதளவு ஐஸ் கட்டி, தேங்காய் எண்ணெய் சிறிதளவு போன்றவை போதுமானது. முதலில் டம்ளரில் இருக்கும் நீரில் ஐஸ்கட்டியையும், ஸ்பூன்களையும் போட்டு நன்றாக குளிர்வித்துக்கொள்ள வேண்டும். முகத்தை கழுவிவிட்டு ஈரப்பதத்தன்மை கொண்ட லோஷன் அல்லது கிரீம் ஏதாவது ஒன்றை தடவிக்கொள்ள வேண்டும். டம்ளரில் இருக்கும் நீரில் குளிர்ந்திருக்கும் ஒரு ஸ்பூனை எடுத்து கண்களின் அடிப்பகுதியில் இமையையொட்டி லேசாக அழுத்தி தடவி மசாஜ் செய்ய வேண்டும். ஸ்பூனில் இருக்கும் குளிர்ச்சி நீங்கும் வரை கண் இமைகளில் தேய்த்து மசாஜ் செய்யலாம்.

பின்னர் டம்ளரில் குளிர்ந்திருக்கும் மற்றொரு ஸ்பூனை எடுத்து கண்களின் மேல் இமைகளில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து எண்ணெய்யை சூடாக்கி அதில் ஸ்பூனை வைக்க வேண்டும். கன்னத்தில் வைக்கும் பதத்திற்கு ஸ்பூன் சூடானதும் அதை கண் இமைகள் மேல் வைத்து அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். இரு கண்களின் இமைகளிலும் குறைந்தது 10 முறையாவது இவ்வாறு மசாஜ் செய்ய வேண்டும். அதுபோல் மிதமான சூட்டில் இருக்கும் ஸ்பூனை கன்னம் முழுவதும் தடவி மசாஜ் செய்யலாம். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். அடிக்கடி ஸ்பூனை கொண்டு மசாஜ் செய்து வருவதன் மூலம் சருமத்தை இளமையாகவும், பொலிவுடனும் வைத்துக் கொள்ளலாம்.

சருமத்தில் இருக்கும் சுருக்கங்களை குறைப்பதற்கும் ஸ்பூன் மசாஜ் உதவும். மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெய்யில் ஸ்பூனை நனைத்து கன்னத்தில் வட்ட வடிவத்தில் அழுத்தி தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அப்படி செய்துவந்தால் சருமத்தில் இருக்கும் சுருக்க கோடுகள் அகலும்.

கண்கள் வீங்கிப்போய் இருந்தாலும் இந்த மசாஜை செய்யலாம். குளிர்ந்த நீரில் நனைத்து மூடிய கண்கள் மீது ஐந்து நிமிடங்கள் அப்படியே வைத்திருப்பது கண்களுக்கு நல்லது.


Add new comment

Or log in with...