கொரோனாவை கட்டுப்படுத்தவென திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள்

நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள கொவிட் 19 தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தினால் முன்னுரிமை அடிப்படையில் முன்னெடுக்கப்படுகின்றன. இதன் நிமித்தம் இத்தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிகளவில் பதிவாகும் பிரதேசங்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டிருக்கின்றது. அத்தோடு ஏனைய பிரதேசங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது பரவும் கொவிட் 19 வைரஸ் முன்பை விடவும் வேகமாகப் பரவுவதோடு ஒரு மாதத்திற்குள் மாத்திரம் ஏழாயிரத்திற்கும் மேற்பட்டோர் இத்தொற்றுக்கு உள்ளாகி, ஒரு மாதத்திற்குள் எட்டு பேர் மரணமடைந்துமுள்ளனர். இந்நிலை பல மட்டங்களதும் அவதானத்தைப் பெற்றுள்ளது. இது தொடர்பில் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், தற்போது நாட்டில் பரவும் கொவிட் 19 வைரஸானது ஏற்கனவே பரவிய வைரஸ் அல்ல என்பதும் இது கொவிட் 19 வைரஸின் புதிய பிரிவு என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இவ்வைரஸ் பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை விரிவாகவும் துரிதமாகவும் பரந்த அடிப்படையிலும் முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜானதிபதி வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் இத்தொற்று தொடர்பில் எவ்வித முன்னனுபவமும் இல்லாத சூழலில் பரவிய இத்தொற்று விரைவாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மக்கள் பாதுகாக்கப்பட்டனர். அதனால் அந்த அனுபவங்கள், வழிமுறைகளைக் கையாண்டு தற்போது தலைதூக்கியுள்ள இத்தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான ஆலோசனைகளையும் அவர் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்கியுள்ளார்.

அந்த வகையில் இத்தொற்றின் பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஏற்கனவே மேல் மாகாணம் உள்ளிட்ட சில பொலிஸ் பிரிவுககளில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருக்கின்றது. அதாவது இத்தொற்றுக்கு உள்ளானவர்கள் அதிகம் பதிவாகும் கம்பஹா, கொழும்பு, களுத்துறை ஆகிய மாவட்டங்கள் அடங்கிய மேல் மாகாணத்திலுள்ள 112 பொலிஸ் பிரிவுகளிலும் குருநாகல், குளியாப்பிட்டிய மற்றும் எஹலியகொடை உள்ளிட்ட ஆறு பொலிஸ் பிரிவுகளும் அடங்கலாக 118 பொலிஸ் பிரிவுகளிலும் இந்த ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம் பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த மாவட்டங்களுக்கிடையிலான பயணங்களும் மறுஅறிவித்தல் வரை தடை செய்யப்பட்டிருக்கின்றது. இந்த ஊடரங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களில் முன்பு போன்று ஊரடங்கு சட்ட அனுமதிப் பத்திரங்களை வழங்கும் நடவடிக்கையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கொவிட் 19 தவிர்ப்புக்கான வழிகாட்டல்களில் ஒன்றான முகக்கவசம் அணியாத 70 க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்திருக்கின்றார்.

அத்தோடு தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதும் அவர்கள் வாழும் பிரதேசங்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கைகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்போது சுமார் 67 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் இத்தொற்று தொடர்பிலான சந்தேகம் மிக்கவர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டு செல்வதற்கு பதிலாக வீடுகளிலேயே அவர்களைத் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தனிமைப்படுத்தப்படுபவர்கள் தனிமைப்படுத்தப்பட்டது முதல் 10 வது நாளில் பி.சி.ஆர் பிரசோதனைக்கு உட்படுத்தப்படுவர். அப்பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாதவர்களை 14 நாட்களில் பொதுவாழ்வில் ஈடுபட அனுமதிக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஏற்பாடுகளின் ஊடாக இத்தொற்று பரவுதலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அதேநேரம் இந்நடவடிக்கைகளின் விளைவாக மக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்படுவதையும் பொருளாதாரத்திற்கு பாதிப்புக்கள் ஏற்படுவதையும் தவிர்ப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டபடி இப்போதும் அத்தியாவசியப் பொருட்களை விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு முதியோர் கொடுப்பனவுகளை முன்பு போன்று வீடுகளுக்கு சென்று விநியோகிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவை இவ்வாறிருக்க, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெறுமதியான பொருட்கள் அடங்கிய பொதியை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இவ்வாறு இத்தொற்றின் பரவுதலைத் திட்டமிட்ட அடிப்படையில் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆனாலும் மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்படும் இத்தொற்றுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மக்களின் ஒத்துழைப்பும் ஆதரவும் இன்றியமையாததாகும். இவ்விடயத்தில் ஒவ்வொருவரும் கவனம் செலுத்த வேண்டும். அதுவே இதன் பரவுதலை முறியடிப்பதற்கான முக்கிய வழியாகும்.


Add new comment

Or log in with...