சமூக நலனை மறந்த பொறுப்பற்ற செயல்!

கொரோனா தொற்றுக்கு உள்ளான வர்களென்ற சந்தேகத்தின் பேரில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்படுகின்றவர்களில் பலர் சட்டவிதிகளை மீறும் வகையில் நடந்து கொள்வதாக நாடெங்கும் இருந்து தகவல்கள் வந்த வண்ணமுள்ளன. பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்கள், பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் போன்ற கொரோனா கட்டுப்பாட்டுப் பணியில் ஈடுபட்டு வருகின்ற அதிகாரிகள் தரப்பில் இருந்து இவ்வாறான குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

கொவிட் 19 வைரஸ் தொற்று நாட்டில் தீவிரமடைந்திருக்கின்ற இவ்வேளையில், சமூகப் பொறுப்பை மறந்த நிலையில் பலரும் நடந்து கொள்வது கவலை தருகின்றது. நாட்டில் கொரோனா தொற்று மேலும் தீவிரமாகப் பரவுமானால் எவ்வாறான நெருக்கடி நிலைமை ஏற்படுமென்பதை மறந்த நிலையில் இவ்வாறானவர்கள் நடந்து கொள்கின்றனர் என்றே நினைக்கத் தோன்றுகின்றது.

நாட்டில் இவ்வருட ஆரம்பத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் முதலாவது அலை உருவெடுத்த வேளையில், அரசாங்கம் அதனை தீவிரமான முயற்சியினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அதன் பின்னர் இரண்டாவது அலை கந்தக்காடு போதைப்பொருள் பாவனையாளர் புனர்வாழ்வு முகாமில் இருந்து கொத்தணியாக உருவெடுத்த போது, மீண்டும் அரசாங்கம் அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. அவையெல்லாம் அரசாங்கத்தின் வினைத்திறனான நடவடிக்கைகளாலும், எமது அதிகாரிகளின் பூரணமான ஒத்துழைப்புகளாலும் கிடைத்த பலன்கள் ஆகும்.

ஆனால் அன்றைய நிலைமையை இன்றைய நிலைமையுடன் ஒப்பிட்டு விட முடியாது. முன்னைய நிலைமைகளைப் பார்க்கிலும் இன்றைய நிலைமை மிகவும் பாரதூரமானதாகும். சமூகத் தொற்று என்ற ஆபத்தான கட்டத்துக்குள் எமது நாடு இன்னும் சென்று விடவில்லை. ஆனாலும் முன்னரைப் போலன்றி இம்முறை நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளதனால் எமது நாடு மிகவும் அவதானமாகவே செயற்பட வேண்டியுள்ளது. சமூகத் தொற்று என்னும் அபாயகரமான நிலைமைக்குச் சென்று விடாமலிருக்கும் வகையில் நாம் ஒவ்வொருவரும் மிகவும் அவதானமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகின்றது.

பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் கூறுகின்ற எச்சரிக்கைகள் மற்றும் அறிவுறுத்தல்களை மக்கள் அலட்சியம் செய்வார்களாயின் கொரோனா பரவுதலானது கட்டுப்பாட்டை மீறிச் சென்று விடுமென்பதை மறந்து விடலாகாது. கொரோனா பெருந்தொற்று மேலும் பரவாமல் அதனை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான ஒரேவழி தனிமைப்படுத்தல் மற்றும் சமூக முடக்கம் ஆகியவைகளே என்பதுதான் உலகெங்குமுள்ள மருத்துவ அறிவியலாளர்களின் ஆலோசனையாகும். இவ்வாறான நடவடிக்கைகளின் பயனாக ‘கொரோனா பரவுதல் சங்கிலி’ துண்டிக்கப்படுகின்றது. புதிய தொற்றாளர்கள் உருவாகும் ஆபத்து கட்டுப்படுத்தப்படுகின்றது.

ஆனால் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து முழு நாட்டையுமே நீண்ட நாட்களுக்கு முடக்கி வைத்திருப்பது கொரோனா பரவுவதை பெருமளவில் கட்டுப்படுத்தி விடுமென்பது உண்மைதான். ஆனால் முழுமையான முடக்கத்தின் பிரதிகூலமான விளைவுகள் பற்றியும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது. நாட்டின் முழுமையான முடக்கத்தினால் குடும்ப வருமானம் இழக்கப்பட்டு அக்குடும்பத்தின் பொருளாதாரம் பாதிக்கப்படுகின்றது. குடும்பங்களின் வாழ்வாதாரம் முடக்கப்படுகின்றது. அது பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அது ஒருபுறமிருக்க, நாட்டின் ஒட்டுமொத்த தேசிய வருமானத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டு விடுகின்றது. தேசிய வருமானம் பாதிக்கப்படுகின்ற போது மக்களுக்கான சேவைகளை வழங்குவதில் நெருக்கடியான நிலைமை தோன்றக் கூடும். இவ்வருட ஆரம்பத்தில் உலகில் கொரோனா தீவிரமடைந்திருந்த வேளையில் உலகில் பொருளாதார பலம் வாய்ந்த மேற்கு நாடுகளே நிலைமையை சமாளிக்க இயலாமல் திண்டாடியதை நாமறிவோம்.

ஆனாலும் இலங்கை அன்றைய நெருக்கடி நிலைமையை இலாவகமாகக் கையாண்டது. முழு நாடுமே ஊரடங்கு உத்தரவினால் முடக்கப்பட்ட போதிலும், மக்களுக்கான சேவைகள் தங்குதடையின்றி முன்னெடுக்கப்பட்டன. மக்களுக்கு உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டு விடாமலிருப்பதற்காக ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐயாயிரம் ரூபா வழங்கப்பட்டதும் அரசின் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

கொரோனா தொற்று காரணமாக இலங்கை பாரதூரமான நிலைமைக்குச் சென்று விடக் கூடாதென்பதில் அரசாங்கம் அவதானமாகவே செயற்பட்டு வருகின்றது. கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களென்று சந்தேகிக்கப்படும் அத்தனை பேரையும் தனிமைப்படுத்தல் முகாம்களுக்குக் கொண்டு சென்று அவர்களைப் பராமரிப்பதற்குப் பதிலாக, அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தி வைத்திருப்பதென்பது இன்றைய நெருக்கடி நிலைமையில் சிறந்ததொரு ஏற்பாடு ஆகும்.

ஆனால் இவ்வாறு அவரவர் வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டோரில் பலர் சட்டவிதிகளை மீறும் விதத்தில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி சமூகத்திற்குள் ஊடுருவித் திரிவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இது மிகவும் ஆபத்தான செயற்பாடாகும். கொரோனாவை வலிந்து மற்றையோருக்குப் பரப்புவதற்கு ஒப்பானதாகும். இவர்கள் தங்களையும் சமூகத்தையும் மறந்த நிலையில் செயற்படுவது பொறுப்பற்ற செயலாகும்.


Add new comment

Or log in with...