பாராளுமன்றுக்கு செல்ல அனுமதி கோரி பிரேமலால் ஜயசேகர மனு

- திங்கட்கிழமை முடிவு

பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக அனுமதி தருவதற்கு  சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இதில் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய, வெலிக்கடை சிறைச்சாலையின் அத்தியட்சகர், பாராளுமன்ற பொதுச் செயலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

தன் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, தனக்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும்,  அத்தண்டனைக்கு எதிராக தான் மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மேன் முறையீடு செய்துள்ளதாகவும், மனுதாரரான பாராளுமன்ற உறுப்பினர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்தார்.

இந்நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட தன்னை, பாராளுமன்ற அமர்வுகளுக்காக அழைத்துச் செல்ல, சிறைச்சாலை அதிகாரிகளினால் மறுக்கப்பட்டு வருவதாக, பிரேமலால் ஜயசேகர குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பான முடிவை எதிர்வரும் திங்கட்கிழமை (07) அறிவிப்பதாக, மேன் முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

 


Add new comment

Or log in with...