பாரிய தேர்தல் வன்முறைகள் இதுவரை பதிவாகவில்லை

தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் தெரிவிப்பு

தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்திற்கு இதுவரை 70ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவை எதுவுமே பாரியளவிலான தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் அல்ல. சாதாரணமான சம்பவங்களாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கினைப்பாளர் மஞ்சுள கஜநாயக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு அதிகமான பொருட்களை விநியோகிப்பதனை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. அத்துடன் நாடுபூராகவும் பல்வேறு தந்திரோபாயங்களை பயன்படுத்தி அபேட்சகர்கள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவதனை அவதானிக்க முடிகிறது. எவ்வாறாயினும் தேர்தலுக்கு இன்னும் இருப்பது ஒரு மாதத்தை விட குறைந்த அளவு காலமே.

இம்முறையும் தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையம் அபேட்சகர்களின் செலவுகள் குறித்து ஒரு பரந்த ஆய்வினை மேற்கொள்கின்றனர்.

குறிப்பாக சென்றமுறை தேர்தலின் போதும் நாங்கள் அவ்வாறானதொரு கணிப்பினை மேற்கொண்டிருந்தோம். எனவே அதன் அடிப்படையில் அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மற்றும் மொத்தமான செலவுகள் பற்றிய ஒரு அறிக்கையை இம்முறையும் நாங்கள் வெளியிடவுள்ளோம் என்றார்.

ரி.விரூஷன்


Add new comment

Or log in with...