இலங்கையின் பெறுமதிமிகு வளம் அழிவடைந்து செல்லும் ஆபத்து

சிங்கராஜா வனத்தினுள் விஷமிகளின் அத்துமீறல்

சிங்கராஜ வனம் இலங்கையில் உள்ள பாதுகாக்கப்பட்ட தேசிய வனமாகும். இது கடல் மட்டத்தில் இருந்து 300 மீற்றர் முதல் 1170 மீற்றர் உயரத்தைக் கொண்ட அயனமண்டல மழைக் காடாகும்.

இந்தக் காட்டின் மொத்த பரப்பளவு 18,900 ஏக்கர் ஆகும். கிழக்கு மேற்காக 21 கிலோ மீட்டர் தூரத்தையும் வடக்கு தெற்காக 7 கிலோ மீற்றர் தூரத்தையும் கொண்டுள்ளது.

இக்காட்டின் உயிரினப் பல்வகைமை மிக அதிகமானதாகும். இதன் உயிரியல் முக்கியத்துவம் காரணமாக 1988 ஆம் ஆண்டு இது உலக மரபுரிமை பிரதேசமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிங்கராஜ வனம் இலங்கையின் தாழ்நிலை ஈரவலயத்தில் அமைந்துள்ளது. இந்த வனப் பகுதியின் சராசரி வெப்பநிலை ஆண்டுக்கு 23.6 செல்சியஸ் ஆகும். மே மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தென் மேற்கு பருவக் காற்று மூலமும், ஒக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வட கிழக்கு பருவக் காற்று மூலமும் ஆண்டுக்கு சராசரியாக 2500 மில்லி மீற்றர் மழை இங்கு பெய்கிறது.

சர்வதேச இயற்கை பாதுகாப்பு சங்கத்தின்படி சிங்கராஜா காட்டில் உள்ள 60 சதவீத மரங்கள் இலங்கைக்கு உரித்தானவையாகும். அத்துடன் அவற்றில் சில மிகவும் அரிதானவையாகும்.

அடர்ந்த காடாக இருப்பதால் இங்கு வனவிலங்குகளை எளிதில் காண முடிவதில்லை. ஆனால் காட்டின் இறக்குவானை பகுதியில் யானைகள் மற்றும் சிறுத்தைகள் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் சிங்கராஜா காட்டில் காணப்படும் 120 க்கு மேற்பட்ட பறவை இனங்களில் 25க்கு மேற்பட்ட பறவை இனங்கள் இலங்கைக்கு மட்டுமே உரித்தானவையாகும். அதேநேரம் இங்கு காணப்படும் ஏராளமான முலையூட்டிகள் குறிப்பாக அணில் வகைகள் இலங்கைக்கு மட்டுமே உரியவை.

உலகப் பிரபல்யம் பெற்ற மழைக்காடுகளில் ஒன்றாக உள்ள சிங்கராஜா காட்டில் அண்மைக் காலமாக இடம்பெறுகின்ற மரங்கைள வெட்டும் சட்டவிரோத செயற்பாடுகள் இக்காடு பெரிதும் அழிவுக்கு உள்ளாகி வருகின்றது. காட்டுக்குள் இருந்து மரங்களை வெட்டி எடுத்துச் செல்வற்காக தனியாக பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேற்படி மரம் வெட்டுதல் மற்றும் இலங்கைக்கு மட்டுமே உரித்துடைய பறவைகள் மற்றும் முலையூட்டிகளை வெளிநாடுகளுக்கு திருடிச் செல்லுதல் போன்ற செயற்பாடுகளால் சிங்கராஜா காடு அதன் தனித்தன்மையை பெரிதும் இழந்து வருகிறது.

இச்செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தடுத்து நிறுத்தாது போனால் எங்கள் நாட்டின் இயற்கையான தேசிய சொத்தான சிங்கராஜா வனத்தையும் நாம் இழந்து விடும் அபாயம் உள்ளது.

 


Add new comment

Or log in with...