சுற்றுலா பயணிகளுக்கு 3 PCR பரிசோதனைகள்

எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி முதல், இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள், 03 கட்டங்களில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என, கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு,  சுற்றுலா மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.

நாட்டில் பரவும் கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.

நேற்று (17) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச சுற்றுலா பயணிகளுக்காக எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதி, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை மீளத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, சுற்றுலா பயணிகள் புறப்படுவதற்கு முன்னர் தங்களது நாடுகளில் பெற்றுக்கொண்ட PCR பரிசோதனையை சமர்ப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.  சுற்றுலா பயணிகள் இலங்கையை வந்தடைந்தவுடன், விமான நிலையத்தில் இரண்டாவது  PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவது கட்டாயம் எனவும், அவர் தெரிவித்தார்.

இச்சுற்றுலா பயணிகளின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை அவர்கள், விமான நிலையங்களுக்கு அருகில், இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அனுமதி வழங்கியுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து, அவர்கள் இலங்கையில் தங்கியிருக்கும்போது மூன்றாவது PCR  பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும், அமைச்சர் தெரிவித்தார்.

பெரும்பாலான நாடுகள் எதிர்வரும் ஜூலை 15ஆம் திகதி முதல், விமான நிலையங்களை மீளத் திறக்க தீர்மானித்துள்ளதாகவும், அமைச்சர் சுட்டிக்காட்டினார். வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்து வரும் நடவடிக்கை காரணமாக இத்தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓகஸ்ட் முதலாம் திகதிக்கு முன்னர் அதனை நிறைவுக்கு கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும், அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...