கைவிடப்பட்ட நிலையில் மொனராகலை தமிழர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள்

வைப்பக படம்

மொனராகலை மாவட்டத்தில் காணப்படும் பெருந்தோட்டங்களில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டங்கள் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் தமிழ் மக்கள் மிக நீண்டகாலமாக அரசியல் அநாதைகளாகவும் ஓரங்கட்டப்பட்டவர்களாகவும் வாழ்கின்றனர். ஆடிக்காத்துப் போன்று எப்போதாவது தமிழ் அரசியல் தலைவர்கள் இங்கு வந்துச் செல்வது மற்றுமே வாடிக்கையாகும்.

இவ்வாறான பின்புலத்தில் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சராகவிருந்த பழனி திகாம்பரம், சில வீடமைப்புத் திட்டங்களை மொனராகலை மாவட்டத்தில் உள்ள பெருந்தோட்டப் பகுதிகளில் ஆரம்பித்திருந்தார்.

கும்புக்கனை, பாராவிலை, வெள்ளச்சிக்கடை, நக்கல, மரகலை மற்றும் முப்பனவெளி போன்ற தோட்டப்பகுதியில் வீடமைப்புத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன. ஏறத்தாழ 80 வீடுகள் இந்த வேலைத்திட்டங்களில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்ட போதும் அதில் 30 வீடுகள் மாத்திரமே இதுவரை நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அந்த வீடுகளும் முழுமையாக பூர்த்திசெய்யப்பட்டவையாக இல்லை.

மொனராகலை தமிழ் மக்களுக்கு கிடைக்கப் பெற்ற முதல் சலுகையாகவும் அபிவிருத்தித் திட்டமாக இது கருதப்பட்டபோதும் இன்று அந்த விடயமும் முழுமைப்பெறாமையால் இந்த மக்கள் கவலலையடைந்துள்ளனர். 

பாதியில் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் இவ் வீடமைப்புத் திட்டங்களுக்கு பொறுப்புக்கூறப் போவது யார்? என்ற வினாவுக்கு விடை தெரியாது மக்கள் புலம்புகின்றனர். இங்கு வாழும் தோட்டத் தொழிலாளர்கள் 200 வருடம் பழமை வாய்ந்த அதே லயன் அறைகளிலே இன்றுவரை வாழ்ந்து வருகின்றனர். எந்த வித அடிப்படை வசதிகளும் இவர்களுக்கு செய்துகொடுக்கப்படுவதில்லை. இங்குள்ள தோட்டங்களுக்கான பாதைகள் புனரiமைப்பு செய்யப்படாமல் காணப்படுவதால் பல கிலோ மீற்றர் கால்நடையாகவே தங்களது பயணங்களை இவர்கள் மேற்கொள்கின்றார்கள்.  இது பாடசாலை  மாணவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அல்ல.

ஆகவே துறைசார்ந்தவர்கள் மொனராகலை மாவட்ட தமிழ் மக்களின் நலனில் அக்கறை கொள்ளுமாறும் கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த வீடமைப்புத் திட்டங்களை முழுமைப்படுத்தி தமக்கு வழங்குவதற்கான நடவடிக்கைகளை தற்போதைய தோட்ட உட்கட்டமைபபு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

(மொனராகலை நிருபர்)


Add new comment

Or log in with...