தப்பிக்க முயற்சித்த 6 கைதிகள் பிடிபட்டனர்; ஒருவர் பலி

சிறைக் காவலர்கள் இருவருக்கு காயம்

மஹர சிறைச்சாலையிலிருந்து தப்பியோட முற்பட்ட கைதி ஒருவர்  உயிரிழந்துள்ளதோடு, சிறை அதிகாரிகள்  இருவர் காயமடைந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது. 

இன்று (03) அதிகாலை 2.30 இற்கும் 3.00 மணிக்கும் இடையில் மஹர சிறைச்சாலையிலிருந்து கைதிகள் 07 பேர், கயிறு மற்றும் கட்டில் விரிப்பு (பெட்சீட்) ஆகியவற்றை பயன்படுத்தி சிறைச்சாலை மதில் வழியாக தப்பியோட முற்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதிகள் தப்பியோடுவதை தடுப்பதற்காக, சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் வானை நோக்கித் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது கைதிகள் எவராலும் தப்பியோட முடியாமல் போயுள்ளதோடு, அவர்களை காவலர்கள் மடக்கிப் பிடித்துள்ளனர். இதன்போது கைதி ஒருவர் பாய்ந்து செல்ல முற்பட்ட வேளையில் மதிலில் இருந்து தவறி வீழ்ந்த நிலையில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இவர்  சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ராகமை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்வாறு தப்பியோட முற்பட்ட சிறைக் கைதிகளை தடுக்க முற்பட்டபோது, சிறைக் கைதிகள் மற்றும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு இடையில் ஏற்பட்ட கைகலப்புக் காரணமாக சிறைச்சாலை அதிகாரிகள் இருவர் காயமடைந்து, சிகிச்சைக்காக ராகமை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த கைதி தொடர்பான மரண விசாரணை வத்தளை நீதிமன்ற நீதவானால் மேற்கொள்ளப்படவுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ராகமை பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 


Add new comment

Or log in with...