எரிபொருள் விலையில் மாற்றம் இடம்பெறாது

ஒரு வருடத்திற்கு நிலையான விலையைப் பேண அரசு தீர்மானம்

எரிபொருள் விலையில் ஒருவருட காலத்திற்கு எவ்வித மாற்றமும் செய்யப்படாது. எரிபொருள் விலை அதிகரித்தாலும் குறைவடைந்தாலும் நிலையான விலை தொடர்ந்து சீராகப் பேணப்படும் என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார். எரிபொருள் நிலைப்படுத்திய நிதியம் ஒன்றையும் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் இங்கு மேலும் கருத்து வெளியிடுகையில்,

எதிர்வரும் ஒருவருட காலத்திற்கு எரிபொருள் விலையில் அதிகரிப்போ விலைகுறைப்போ மேற்கொள்ளப்படாதென அரசாங்கம் கொள்கை ரீதியாக தீர்மானமொன்றை எடுத்துள்ளது. எரிபொருள் விலையில் மாற்றமில்லாது சீராக பேண முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதற்காக எரிபொருள் நிலைப்படுத்திய நிதியத்தை அமைக்கவும் முடிவுசெய்யப்பட்டுள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்தால் அதன் பயன் இந்த நிதியத்தில் சேர்க்கப்படும். ஆறுமாத காலப்பகுதியில் 200 மில்லியன் நிதியை சேர்ப்பது இதன் நோக்கமாகும்.

இலங்கை மின்சார சபையால் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு செலுத்தவேண்டிய தொகையை குறைக்கக்கூடிய வகையில் நிதியத்தில் சேமிக்கப்படும் நிதியில் 50 பில்லியன் ரூபாவை மின்சார சபைக்கு வழங்கி அதன் மூலம் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் மக்கள் வங்கிக்கும் இலங்கை வங்கிக்கும் செலுத்தவேண்டிய கடன் நிலுவைக்கு தீர்வை வழங்குவதும் அரசாங்கம் எடுத்துள்ள கொள்கை ரீதியான முடிவாகும்.

கடன்கள் செலுத்தப்படும் பட்சத்தில் மின்சார சபைக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கக் கூடியதாகவிருக்கும்.

முழு பொருளாதாரத்தையும் ஒரே பார்வையில் நிர்வகிக்கவே அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன்மூலம் மசகு எண்ணையின் விலை அதிகரித்தால் அதனையும் அரசாங்கம் பொறுப்பேற்கும். இத்தீர்மானம் எரிபொருளை நுகர்வோருக்கு மட்டுமன்றி அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும்.

தனியார் பெற்றோலிய நிறுவனங்களுக்கு சிறப்பு வரியை அறவிடவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மசகு எண்ணையின் விலை குறைவடையும் போது தனியார் நிறுவனங்கள் அதிக இலாபத்தை ஈட்டுகின்றன. ஆகவே, அதற்காக சிறப்பு வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்


Add new comment

Or log in with...