இயற்கை வள அழிப்பு பேரழிவின் ஆரம்பம்

இயற்கை வளங்களை அழிப்பதன் காரணமாக நாட்டின் இயற்கைச் சூழல் மோசமாக பாதிக்கப்படுவதோடு காலநிலைகள்கூட மாற்றங்கண்டு நாடு பேரழிவின் பக்கம் நகர்ந்து கொண்டிருப்பதை வெளிப்படையாகவே அவதானிக்கக்கூடியதாக உள்ளது. இதில் மிக மோசமான காரணியாக காடழிப்புகள் அமையப்பெற்றுள்ளன. வீட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், விறகுக்கும் பெருமளவிலான மரங்கள் தறிக்கப்படுவதனால் மழை வீழ்ச்சி பாதிக்கப்பட்டு வரட்சி நீடிக்கின்றது. இதன் விளைவாக நோய்களும் பரவுகின்றன. காடழிப்பைத் தடுக்க சரியான நடவடிக்கை எடுக்கத் தவறியதாலும் மரம் வளர்ப்புத் திட்டம் வெற்றியளிக்காமையாலும் தேசம் வெற்றுத் தரையாக மாறிவருவதைக் காண முடிகிறது.

பெருந்தோட்டப் பகுதிகளிலுள்ள முக்கிய காடுகள், தேயிலைத் தோட்டங்களுக்கு அருகில் உள்ள மானாப்புற்றரைகள் தீ வைக்கப்படுவதால் இரு வகை நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்கும்நிலை ஏற்படுகின்றது. முதலாவது அப்பகுதிகளில் காணப்படும் வனவிலங்குகளுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. அத்துடன் பிரதேச மக்களும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர்.

வனவிலங்குகள் திணைக்கள ஊழியர் சங்கத் தலைவரும் நல்ல தண்ணி வன விலங்குத் திணைக்கள வன விலங்குப் பாதுகாப்பு அதிகாரியுமான பிரகாஷ் கருணாதிலக்க தெரிவித்திருக்கும் தகவல்களின் படி பெருந்தோட்டப்புற காடுகளுக்குத் தீவைக்கப்படுவதால் நாட்டின் பெறுமதி மிக்க இலங்கைக்கே உரித்தான மலைச்சிறுத்தை, சிறுத்தை போன்ற உயிரினங்கள் உயிராபத்தை எதிர்நோக்குகின்றன. மிருகங்களை வேட்டையாடும் நோக்கில் இந்த விஷமத்தனமான முயற்சிகளில் சிலர் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது நிலவிவரும் வரட்சியான காலநிலையைக் கருத்திற்கொண்டு வனவிலங்குகளை வேட்டையாடும் நோக்கத்துடன் தோட்டப்புறங்களில் வாழுகின்ற சில விஷமிகள் தீவைப்புச் சம்பவங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மனிதாபிமானமற்ற இந்த நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியதாகும். இந்த விஷமத்தனமான செயற்பாடுகளில் ஈடுவோர்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். மத்திய மலைநாட்டில் மோசமான வரட்சி காணப்படுவதால் இந்தச் சூழ்நிலையை விஷமிகள் தமக்குச் சாதகமாக பயன்படுத்திவருகின்றனர்.

காடுகளுக்கு தீ மூட்டுவதால் பாலூட்டிகள், ஊர்வன, பறவைகள் உள்ளிட்ட உயிரினங்கள் தேயிலைத் தோட்டங்களை நோக்கிப் படையெடுக்கின்றன. அப்படி வரும்போது அவற்றை சுலபமாக வேட்டையாடுவதே இந்த விஷமிகளின் திட்டமாகும். இதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கே உரித்தான சிறுத்தை மற்றும் மலைச் சிறுத்தை போன்றவை அழிந்தொழியும் நிலை ஏற்பட்டு வருகிறது. மற்றும் அந்தப் பகுதிகளில் வாழ்ந்த மான், மரை போன்றவையும் வேட்டையாடப்படுகின்றன. இது வனத்திணைக்களத்திற்கு பெரும் தலையிடியாக மாறியுள்ளதென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சில சமயங்களில் தேயிலைத் தோட்டங்களுக்குள் நுழையும் காட்டு விலங்குகளை நல்லுள்ளம் கொண்ட பலர் உயிருடன் மீட்டு வனவிலகாவுக்கு அல்லது பொலிஸ் நிலையத்திற்கு ஒப்படைத்து வருகின்றனர்.

எனவேதான் வனவிலங்குகள் விடயத்தில் ஒவ்வொருவரும் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டுமென்று திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பொதுமக்கள் தங்கள் பிரதேசத்திற்கு அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு உரிய நேரத்தில் தகவல்களை வழங்குவார்களேயானால் இந்த விஷமிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க முடியும் என திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மத்திய மலைநாட்டுக்கப்பால் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இந்த வரட்சி மக்களை பெரிதும் பாதித்துள்ளது. இதற்குப் பிரதான காரணமாக காடழிப்புகளும் மரங்களை தறித்தலுமே அமையப்பெற்றுள்ளது. கடழிப்பைத் தடுப்பதற்காக அரசாங்கம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவை பூரண வெற்றிபெற்றதாக காணமுடியவில்லை.

தெற்கில் பல்வேறு பகுதிகளிலும் காணி விற்பனைகாரர்களால் காணிகள் கொள்வனவுசெய்யப்பட்டு அங்குள்ள மரங்கள் முற்றுமுழுதாக தறிக்கப்படுகின்றன. பெருந்தொகை ஏக்கர் கணக்கில் தென்னை வளர்க்கப்பட்ட தோட்டங்கள் இன்று வெறும் கட்டாந்தரையாக மாறிப்போயுள்ளது. அவற்றில் பெருமளவு குடியேற்றங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. இதனால் இயற்கையான வளங்கள் அப்பகுதி மக்களுக்கு கிடைப்பதில்லை.

சமீப காலமாக எமது நாட்டில் மழை வீழ்ச்சி மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீர் பிரச்சினை, முக்கியமாக மின்சார உற்பத்தி குறைவடைந்துள்ளது. என்னதான் வரட்சி ஏற்பட்டாலும் மின்சார துண்டிப்புக்கு இடமளிக்கப் போவதில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் நீர்மின்சாரத்திற்கு பதிலாக அனல் மின்சாரத்தை உற்பத்திசெய்வதற்கு ஏற்படக்கூடிய செலவினம் பெருமளவு அதிகமாகக் காணப்படுவதால் எவ்வளவு காலத்திற்கு இதனைத் தாக்குப்பிடிக்க முடியுமென்பது கேள்விக்குரியதாகும்.

எனவே எமது இயற்கை வளத்தை சரியாக பேணுவதற்கு மக்கள் அனைவரும் பங்களிப்புச் செய்ய வேண்டியது அவசியமாகும். அதற்கான அறிவுறுத்தல்கள் வழிகாட்டல்களை புத்திஜீவிகளும் வனத் திணைக்கள அதிகாரிகளும் பரந்தளவில் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் இன்று ஏற்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் அவசரமாக முன்னெடுக்க வேண்டியதன் தேவையை உணர்த்த விரும்புகின்றோம்.


Add new comment

Or log in with...