சிரியாவின் இத்லிப்பில் உக்கிர மோதல்: 39 போராளிகள் பலி

சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அரச ஆதரவுப் படையினர் மற்றும் ஜிஹாத் போராளிகளுக்கு இடையே நேற்று ஏற்பட்ட உக்கிர மோதலில் 39 போராளிகள் கொல்லப்பட்டதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

கிளர்ச்சியாளர் கடைசி கோட்டையான இத்லிப்பில் போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே அதனை பலவீனப்படுத்தும் வகையில் வான் தாக்குதல்கள், செல் வீச்சுகள் மற்றும் தரைவழி மோதல்கள் இடம்பெற்றுள்ளன.

முக்கிய நகரான மராத் அல் நூமானில் முன்னேற்றம் கண்டிருக்கும் அரச ஆதரவுப் படையினர் இரு கிராமங்களை கைப்பற்றியதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

சிரிய அரசின் புதிய இராணுவ நடவடிக்கையின் முக்கிய இலக்காக உள்ள மராத் அல் நூமானின் தெற்கு பகுதியில் புதன் இரவு மோதல்கள் வெடித்ததாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் குறைந்தது 22 அரச எதிர்ப்பு போராளிகள் கொல்லப்பட்டிருப்பதோடு இவர்களில் பெரும்பாலானவர்கள் அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஹயாத் அல் ஷாம் குழுவின் உறுப்பினர்களாவர்.

17 அரச துருப்புகள் மற்றும் அதன் கூட்டணி போராளிகளும் இந்த மோதலில் கொல்லப்பட்டிருப்பதாக மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகத்தின் தலைவர் ரமி அப்தல் ரஹ்மான் குறிப்பிட்டார்.

அரச படை தற்போது மாரத் அல் நூமானில் இருந்து 7 கிலோமீற்றர் நெருங்கி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசுக்கு எதிரான மக்கள் போராட்டம் வெடித்தபோது அதற்கு ஆதரவான முக்கிய நகரங்களில் ஒன்றாக இது இருந்தது.

ஒன்பது ஆண்டுகளை எட்டியிருக்கும் சிரிய உள்நாட்டு யுத்தத்தில் அரச எதிர்ப்பாளர்கள் தொடர்ந்தும் சில மாகாணங்களின் நகரங்களை தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.


Add new comment

Or log in with...