ராஜித சேனாரத்ன 18 நாட்களின் பின் வீடு திரும்பினார்

ராஜித சேனாரத்ன 18 நாட்களின் பின் வீடு திரும்பினார்-Rajitha Senaratne Discharged from Lanka Hospitals

தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன 18 நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேறியுள்ளார்.

நேற்று நள்ளிரவு கடந்து 12.25 மணியளவில் அவர் மருத்துவமனையை விட்டு வெளியேறியதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் கடந்த டிசம்பர் 24ஆம் திகதி பிடியாணை வழங்கப்பட்ட நிலையில் அவர் டிசம்பர் 26ஆம் திகதி நாரஹென்பிட்டியிலுள்ள லங்கா ஹொஸ்பிட்டலில் அனுமதிக்கப்பட்டதோடு, இருதய அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து CIDயினரால் டிசம்பர் 27ஆம் திகதி கைது செய்யப்பட்டு, அன்றையதினம் வைத்தியசாலையில் வைத்து அவருக்கு டிசம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டதோடு, டிசம்பர் 30ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டது.

பிணை வழங்கப்பட்ட பின்னரும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன அம்மருத்துவமனையில் தொடர்ந்தும் தங்கியிருந்தார்.

இந்நிலையில் கடந்த 18 நாட்களாக மருத்துவமனையில் தங்கியிருந்த அவர் தற்போது அங்கிருந்து சென்றுள்ளார்.

இதேவேளை, வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பு தொடர்பில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டதை எதிர்த்து சட்ட மாஅதிபரினால் கடந்த ஜனவரி 08ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு விண்ணப்பம் செய்யப்பட்டது.

குறித்த மீளாய்வு மனுவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (17) பரிசீலிப்பதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (13) முடிவு செய்திருந்தது.

அதற்கமைய, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ராஜித சேனாரத்ன எம்.பி. , இவ்வழக்குடன் தொடர்புபட்ட அரச மருந்தாக்க கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் மற்றும் குறித்த வெள்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஏனைய இரு சந்தேகநபர்களுக்கும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் வழங்கிய பிணையானது சட்டத்திற்கு எதிரானது எனத் தெரிவித்து மீளாய்வு மனுவொன்றை சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்தார்.


Add new comment

Or log in with...