இலங்கை வளிமண்டலத்தில் பிளாஸ்ரிக் துகள்கள் ஆபத்து!

இலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்டுள்ள நாடான போதிலும், இந்நாட்டு வளிமண்டலத்தில் நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்களின் அளவு அதிகரித்து விடக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக உள்நாட்டு விஞ்ஞானிகள் சுட்டிக் காட்டியுள்ளனர். இது ஆரோக்கியமான விடயமல்ல.

அதேநேரம், கடந்த நவம்பர் (2019) மாத நடுப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களின் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் அளவு பெரிதும் அதிகரித்துக் காணப்பட்டதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலை இரண்டு நாட்கள் வரை நீடித்தது. வட இந்திய நகரங்களில் ஏற்பட்டுள்ள வளி மாசுதான் இந்நிலைக்குக் காரணம் எனச் சுட்டிக் காட்டிய இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம், வளிமண்டலக் காற்றோட்டத் திசையில் திடீரென ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகவே கொழும்பு உள்ளிட்ட பிரதேசங்களது வளிமண்டலத்தின் தூசு துகள்களது அளவு அதிகரித்தது எனவும் குறிப்பிட்டிருந்தது.

இத்தூசு துகள்களின் அளவு இரண்டொரு தினங்களில் வழமை நிலைக்குத் திரும்பிய போதிலும், இந்நாட்டின் வளிமண்டலத்தின் நிலை குறித்து உள்நாட்டு விஞ்ஞானிகள் தொடர்ந்தும் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பேராதனை பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீட பட்டப்பின் படிப்பு கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில், கண்டி மற்றும் கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களது வளிமண்டலத்தில் நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்களின் அளவு அதிகரித்து விடக் கூடிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

இது தொடர்பிலான அதிரச்சிகரத் தகவல்களை அந்நிறுவனத்தின் பணிப்பாளர் பேராசிரியர் எச்.எம்.பி.ஜி.ஏ பிட்டவல தெரிவித்திருக்கின்றார். அதேநேரம் ஏற்கனவே சர்வதேச மட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகளின்படி, கடல்நீர், கடலுணவு, மீன், குடிநீர் என்பவற்றிலும் நுண்பிளாஸ்ரிக் துகள்கள் கலந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. அத்தோடு சில மாதங்களுக்கு முன்னர் தண்ணீர் போத்தல்கள் தொடர்பில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலும் தண்ணீரில் பிளாஸ்ரிக் நுண்துகள்கள் கலந்திருப்பது தெரியவந்துள்ளது.

இதன்படி, பிளாஸ்ரிக் தூசு துகள்கள் வளிமண்டலத்தில் மாத்திரமல்லாமல் கடல்நீரிலும் கலந்திருப்பது தெளிவாகின்றது. பிளாஸ்ரிக் மனிதன் உள்ளிட்ட உயிரினங்களது ஆரோக்கியத்திற்கு ஆபத்தானதாகும். அதிலும் மனிதனதும் ஏனைய உயிரினங்களதும் இருப்புக்கு தூய காற்று இன்றியமையாததாகும். அவ்வாறு முக்கியத்துவம் மிக்க வளியில் பிளாஸ்ரிக் துகள்கள் கலப்பது உயிரினங்களின் சுவாசத்துக்கு பெரும் சவாலாக அமையும். அதன் விளைவாக பல்வேறு விதமான உபாதைகள் ஏற்படலாம் என மருத்துவர்கள் ஐயம் தெரிவிக்கின்றனர்.

அதனால்தான் வளிமண்டலத்தில் பிளாஸ்ரிக் துகள் கலப்பதைக் கட்டுப்படுத்துவதிலும் குறைப்பதிலும் விஷேட கவனம் செலுத்தப்பட வேண்டும் என விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர். சர்வதேச மட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அளவுகோலின்படி, நுண்ணிய பிளாஸ்ரிக் துகள்கள் கண்ணுக்குத் தெரியாதவையாகும். இவ்வாறான துகள்கள் வளிமண்டலத்தில் கலப்பது பெரும்பாலும் வெற்றுக் கண்களுக்கும் தென்படாது.

அதனால் பிளாஸ்ரிக் துகள் தொடர்பில் பொதுவாக எடுத்து நோக்கும் போது, கடந்த இரண்டொரு தசாப்தங்களாக மக்கள் மத்தியில் நோய்கள் அதிகரித்துக் காணப்படுவதற்கு உணவுப் பழக்கவழக்கம் முக்கிய காரணமாகக் கூறப்பட்டாலும் பிளாஸ்ரிக் துகள்கள் வளி, நீர் மற்றும் உணவுப் பொருட்களில் கலப்பதும் கூட காரணமாக இருக்கலாம். என்றாலும் இதுதொடர்பில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் விஞ்ஞானிகளின் கருத்தாக உள்ளது.

பிளாஸ்ரிக் மனிதனின் உடலாரோக்கியத்திற்கு பொருத்தமானதாக இல்லாவிட்டாலும் அதனை குறைந்த விலையில் பெற்றுக் கொள்ள முடிவதும், வசதியாக எடுத்துச் செல்ல முடிவதும், இலகுவாக பயன்படுத்த முடிவதும் அவற்றின் உற்பத்தியையும், பாவனையையும் பெரிதும் அதிகரித்திருக்கின்றது. இவ்வகைப் பொருட்களின் பாவனை காணப்படாத வீடுகளை விரல் விட்டு எண்ணி விட முடியும். அந்தளவுக்கு நி​ைலமை வளர்ச்சி பெற்றிருக்கின்றது.

ஆனால் பிளாஸ்ரிக் காரணமாக ஏற்படும் தாக்கங்களும் பாதிப்புக்களும் குறித்து மக்களிடம் போதிய தெளிவு இருப்பதாக தெரியவில்லை. இவற்றின் பாதிப்பு மற்றும் தாக்கம் தொடர்பில் இடம்பெற்று வரும் ஆய்வுகளின் அடிப்படையில் பிளாஸ்ரிக் உற்பத்திகளையும் அவற்றின் பாவனைகளையும் கட்டுப்படுத்துமாறு உள்நாட்டிலும் உலகலாவிய ரீதியிலும் வலியுறுத்தப்படுவதோடு அழுத்தங்களும் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சூழலில் இலங்கையின் வளிமண்டலத்தில் பிளாஸ்ரிக் துகள்கள் அதிகரிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பது ஆரோக்கியமானதல்ல. அதனால் பிளாஸ்ரிக் பொருட்களின் உற்பத்தியையும் பாவனையையும் தவிர்த்துக் கொள்வதில் மக்கள் கவனம் செலுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஆரோக்கியத்தின் பாதுகாப்புக்கு இது இன்றியமையாதாகும். பிளாஸ்ரிக் பாவனையையும் உற்பத்தியையும் கட்டுப்படுத்தும் போது அதன் மூலம் வளிமண்டலத்திற்கு பாதிப்பு ஏற்படாது. அப்போது ஆரோக்கிய மனித வாழ்வுக்கு தேவையான தூய்மையான காற்று கிடைக்கப் பெறும்.

ஆகவே வளிமண்டலத்தில் பிளாஸ்ரிக் துகள்கள் சேருவதை குறைப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு மாத்திரமல்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ளது என உறுதிப்பட கூறலாம்.


Add new comment

Or log in with...