பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 46 ஓட்டங்களால் இலகு வெற்றியீட்டியது.
ஒக்லாந்தில் நேற்று (12) நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நியூசிலாந்து அணி 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 226 ஓட்டங்களை விளாசியது.
டெரில் மிச்சர் 27 பந்துகளில் 4 பெளண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 61 ஓட்டங்களை விளாசியதோடு அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 42 பந்துகளில் 9 பெளண்டரிகளுடன் 57 ஓட்டங்களை பெற்றார்.
இதன்போது ஷஹீன்ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியபோதும் அவர் தனது 4 ஓவர்களுக்கும் 46 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார். அப்பாஸ் அப்ரிடியும் 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய பாகிஸ்தான் அணி வெற்றி இலக்கை வேகமாக துரத்தி ஆடியபோதும் முக்கிய இடைவெளிகளில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. இதனால் அந்த அணி 18 ஓவர்களில் 180 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து.
சிறப்பாக துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் 35 பந்துகளில் 6 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 57 ஓட்டங்களை பெற்றார். டிம் செளதி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த வெற்றியுடன் ஐந்து போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் நியூசிலாந்து அணி 1–0 என முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி நாளை ஹமில்டனில் நடைபெறவுள்ளது.