Home » மக்கள் சேவைகளுக்கே முன்னுரிமை; அதன் பின்னரே மக்களை நாடுவேன்

மக்கள் சேவைகளுக்கே முன்னுரிமை; அதன் பின்னரே மக்களை நாடுவேன்

- சமூக சேவையாளர் எஸ். நிரோஷ்குமார்

by Rizwan Segu Mohideen
February 29, 2024 8:51 am 0 comment

வடக்கில் தற்பொழுது அபிவிருத்தியே முக்கியமான தேவையாகவுள்ளது.குறிப்பாக வடமாகாணத்திலுள்ள இளைஞர், யுவதிகள் அபிவிருத்தியை நோக்கியும் தங்களது எதிர்காலத்தை அடைந்துகொள்வதிலும் கரிசனை காட்டி வருகின்றனர்.

அந்தவகையில் வடக்கில் வாழும் மக்களுக்கு தேவையான அடிப்படை அபிவிருத்திகளை அவர்களிடத்தில் கொண்டு சேர்ப்பதை நோக்காகக் கொண்டுசெயற்படு ஒரு சமூக சேவையாளரான எஸ். நிரோஷ்குமார், தான் எதிர்காலத்தில் முன்னெடுக்க திட்டமிட்டுள்ள விடயங்கள் தொடர்பில் தினகரனுக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல்…..

கேள்வி : சமூக சேவைகளை அடிப்படையாகக் கொண்டு சமூகத்தை வழிநடத்துவது என்பது மிகவும் கடினமான விடயம். அதற்கு பாரிய பங்களிப்பு அவசியம். குறிப்பாக பொருளாதார ரீதியிலான பாரிய பலம் அவசியம். அதிலும் நீங்கள் நீண்டகாலமாக இந்த சமூக சேவைகளை செய்து வருகிறீர்கள். அது பற்றிய உங்கள் கருத்துகள் என்ன?

பதில் : 10 வருடங்களுக்கு மேல் நான் சமூக சேவையில் ஈடுபட்டு வருகின்றேன். ‘சாந்திகுமார் அறக்கட்டளை’ என்ற என் தந்தையின் பெயரிலேயே இதை செய்து வருகிறேன். வவுனியாவில் பிறந்த நான் இரண்டாம் ஆண்டு வரையே கல்வி கற்றேன். அதன் பின்னர் யுத்தம் காரணமாக கொழும்புக்கு இடம்பெயர்ந்து எனது கல்வி நடவடிக்கைகளை கொழும்பு ரோயல் கல்லூரியில் ஆரம்பித்தேன்.

பட்டப்படிப்பை லண்டனில் முடித்துக் கொண்டு என் சொந்த ஊருக்குத் திரும்பிய போது, யுத்தம் முடிந்திருந்தாலும் எங்கள் ஊர் எந்தவித அபிவிருத்தியுமின்றி அதே மாதிரியாகத்தான் காணப்பட்டது. அடிப்படைத் தேவைகள் கூட இன்றி எங்கள் ஊர் இருந்தது. இதை மனதில் வைத்தே நான் என் கல்வி மூலமாகவும் விளையாட்டுத்துறை மூலமாகவும் உதவிகளை செய்து வருகின்றேன்.

கேள்வி : ‘சாந்திகுமார் அறக்கட்டளை’ எப்போது ஆரம்பிக்கப்பட்டது. இதனை ஆரம்பிக்க காரணமான விடயங்கள் என்ன?

பதில் : 2016 இல் ஆரம்பிக்கப்பட்ட இந்த அறக்கட்டளை, மக்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக எங்களால் முடிந்தளவு உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்காக குடும்பங்களினூடாக பெற்ற சிறிய நிதியுதவியை வைத்து அறக்கட்டளையை ஆரம்பித்தேன். தற்போது இந்த அறக்கட்டளையை பெரிய அளவுக்கு எடுத்துச் சென்றுள்ளேன். இதில் முதலாவதாக மக்களுக்கு தேவையான கல்வி வசதிகளை செய்து கொடுத்தோம். பாடசாலைகளுக்கு தேவையான சேவைகள், கல்வி கற்றல் உபகரணங்கள், பாடசாலை விளையாட்டுத் துறைகள், சுகாதாரத் துறையிலும் பல சேவைகளை செய்து வருகின்றோம். அத்துடன் சுயதொழில் வாய்ப்புகளையும் அறிமுகப்படுத்தவுள்ளோம். இதற்காக பாரிய கைத்தொழிற்சாலையொன்றையும் அமைத்துள்ளோம். அதனூடாகவும் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கவுள்ளோம்.

கேள்வி : நீங்கள் செய்துவரும் சமூக சேவைகளில் பாரியளவு திட்டமாக எதனைக் குறிப்பிடுவீர்கள்?

பதில் : பாடசாலை மாணவர்களுக்கு பைகளை வழங்குவதில் இருந்து தற்போது தொழிற்சாலையொன்றை நிறுவி அதில் 30 பேருக்கு வேலைவாய்ப்பை பெற்றுக் கொடுத்துள்ளோம். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 200 ஆக வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

கேள்வி : தற்சமயம் உங்கள் சமூக சேவைகளினால் பயனடைந்தவர்கள் எத்தனை பேர் என அண்ணளவாக குறிப்பிட முடியுமா?

பதில் : எண்ணிக்கை அடிப்படையில் கூறமுடியாது. குறிப்பிட்டு சொல்வதானால் வவுனியாவில் 150 – 200 கிராமங்களுக்கு சேவைகளை செய்துள்ளோம். அண்ணளவாக இரண்டாயிரம் தொடக்கம் மூவாயிரம் குடும்பங்களுக்கு உதவிகளை செய்து வருகின்றோம். இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்றே நினைக்கின்றேன்.

கேள்வி : வவுனியாவை அடிப்படையாகக் கொண்டு சேவை செய்து வரும் நீங்கள் வட மாகாணத்துக்கும் உங்கள் சமூக சேவைகள் சென்றடைய திட்டங்கள் ஏதும் உள்ளனவா?

பதில் : ஆம் நிச்சயமாக, வட மாகாணத்திலும் சேவைகளை விஸ்தரிக்க இருக்கிறோம். தற்போது மட்டக்களப்பு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலும் எங்கள் சேவைகளை விஸ்தரித்து வருகின்றோம்.

கேள்வி : நீங்கள் அமைத்த பாரிய தொழிற்சாலையின் முதலீடுகள், அதன் பணியாளர்கள், அத்துடன் அத்தொழிற்சாலை தற்போது எவ்வாறு இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது பற்றி கூறுங்கள்?

பதில் : வட மாகாணத்தில் விவசாயம் பாரிய அளவில் மேற்கொள்ளப்படுவதால், யூரியா உரப் பைகளுக்கான ஒரு தொழிற்சாலை உருவாக்கியுள்ளோம். தற்போது அங்கு 30 தொழிலாளர்கள் காணப்படுகின்றனர். வடக்கில் இவ்வாறான ஒரு தொழிற்சாலையை நாங்கள் தான் முதன் முதலில் நிறுவியுள்ளோம்.

கேள்வி : உங்கள் சமூக சேவைப் பணிகளில் நீங்கள் எதிர்நோக்கிய தடங்கல்கள் யாவை?

பதில் : பல தடைகள் வந்தன. ஒருவன் முன்னேறுவது இன்னொருவருக்கு பிடிப்பதில்லை. ஒருவரை தட்டிக் கொடுத்து வாழ்த்தி அனுப்புபவர்கள் அரிது. எங்களுக்கும் நிறைய தடைகள் வந்தன.எங்கள் தொழிற்சாலையை திறக்க விடாமல் பலர் முட்டுக்கட்டைகளையிட்டனர். இதனால் 02 வருடங்கள் தாமதித்தே ஆரம்பிக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இவ்வாறான தடைகளை முறியடித்தே நான் ஒரு வெற்றியாளனாகியுள்ளேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தருகிறது. அத்துடன் முன்னேறிச் சென்று, மக்களுக்கான சேவையை எந்தத் தடைகள் வந்தாலும் தொடர்ந்து மேற்கொள்வோம் எனக் கூறிக் கொள்கிறேன்.

கேள்வி :சமூக சேவையின் அடுத்த கட்டம் அரசியல். சமூகசேவை செய்யும் மனப்பான்மை கொண்டவர்கள் மக்கள் பிரதிநிதிகளாக முன்வந்து மக்களுக்கு சேவைகளை செய்வதற்கான ஒரு விடயமே இந்த அரசியல். மக்களின் தேவைகளுக்கான அடுத்த கட்டமாக ஏன் நீங்கள் அரசியலுக்கு வரக்கூடாது?

பதில் : அரசியல் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் ஐக்கிய மக்கள் சக்தியில் வவுனியா அமைப்பாளராக கடமையாற்றுகின்றேன். அரசியல்வாதிகள் அரசியலுக்கு வருவது சமூக சேவை. நம் நாடு எந்த நிலையில் இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. மக்கள் ஆணையும் ஆதரவும் இருந்தால் நான் நிச்சயமாக அரசியலில் ஈடுபடுவேன்.

கேள்வி : உங்களுக்கு அரசியலில் ஈடுபடும் ஆர்வத்தைத் தூண்டியது உங்கள் தந்தை சாந்திகுமாரின் அரசியலில் ஈடுபாடா? அல்லது தனிப்பட்ட ரீதியாக மக்களுக்கு சமூக சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வமா?

பதில் : என்னுடைய தந்தை 1970 – 80 களில் யாழ்.நகர சபை உறுப்பினராக இருந்தார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக குமார் பொன்னம்பலமும் என் தந்தையாரும் தான் அதை ஆரம்பித்திருந்தனர். என் பாட்டனார் துரைராஜா யாழ்ப்பாண மேயராக இருந்தார். என் அம்மாவின் பிறப்பிடம் ஓமந்தை வவுனியா. எனது அம்மாவின் தகப்பனார் Chairman சிதம்பரம்பிள்ளை உடையார், ஓமந்தையில் 60 களில் கடமையாற்றி இருந்தார். என் அத்தை திருமதி புலேந்திரன், 1989 – 94 வரை கல்வி இராஜாங்க அமைச்சராக பாராளுமன்றத்தில் இருந்தார். அவருடன் நான் முதன் முதலாக பாராளுமன்றம் போகும்போது எனது வயது 08. என் பரம்பரையில் அரசியல் சாயல் இருந்தது. ஆயினும் அரசியலுக்கு அப்பால் என் மக்களுக்கு சமூக சேவை செய்ய வேண்டுமென்ற ஆவல் என்னுள் இருந்தது. என்றாலும் என் கல்வியை முடித்த பின்னர், மக்களுக்கு சமூக சேவை செய்து, மக்கள் என்னை ஆதரித்து கேட்டுக்கொண்டால் அரசியலில் ஈடுபடுவேன். கஷ்டப்படும் மக்களுக்கு என் சேவைகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் என்னிடம் இருந்தது. ஒரு சமூக சேவையாளனாகவே நான் என்னை மக்கள் முன் அடையாளப்படுத்தியுள்ளேன்.

கேள்வி : அரசியலில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைத்தால் நீங்கள் உங்கள் கடமைகளை சீராக நிறைவேற்றுவீர்களா? அல்லது மற்ற அரசியல்வாதிகளைப் போல் கடமையை தவறவிடுவீர்களா?

பதில் : நான் சற்று வித்தியாசமானவன். நான் என் மக்களுக்கு சொல்வதை செய்து காட்டியுள்ளேன். அதேபோல் என் தலைவர் சஜித் பிரேமதாசவும் நான் கேட்பவற்றை என் மக்களுக்கு செய்து கொடுத்துள்ளார். செயலில் ஈடுபடாமல் பொய்யான பிரசாரங்களை கூறுவதுமில்லை, செய்வதுமில்லை. மக்களுக்கு எப்போதும் வெற்று வாக்குறுதிகளை வழங்கியதில்லை. மக்களுக்கு சேவைகளை செய்வதிலேயே முன்னுரிமை அளிப்போம். அதன் பிறகே மக்களை நாடிச் செல்வோம்.

நேர்காணல்: றிஸ்வான் சேகு முகைதீன்
படம் – ருக்மல் கமகே

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT