ஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டம்: நூற்றுக்கும் அதிகமானோர் பலி | தினகரன்


ஈரானில் தொடரும் ஆர்ப்பாட்டம்: நூற்றுக்கும் அதிகமானோர் பலி

பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக ஈரானில் கடந்த வெள்ளிக்கிழமை தொடக்கம் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களில் பலரும் கொல்லப்பட்டிருப்பதாக ஐ.நா மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு உட்பட ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அதிக பலப்பிரயோகத்தை பயன்படுத்த வேண்டாம் என்று வலியுறுத்தி இருக்கும் மனித உரிமைகள் அலுவலகம், இணையதளம் மீதான முடக்குதலை தளர்த்தும்படி அழைப்பு விடுத்துள்ளது.

கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களின்படி 21 நகரங்களில் 106 ஆர்ப்பாட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலகக்காரர்கள் என்று ஈரான் அரசு கண்டித்துள்ளது.

ஈரானில் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த இணைய சேவையும் முடக்கப்பட்டிருக்கும் நிலையில் அங்கு தற்போதைய நிலை தெளிவில்லாமல் உள்ளது. கடந்த சனிக்கிழமை இணையதளம் முடக்கப்பட்டபோதும் பல நகரங்கள் மற்றும் சிறு நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நீடித்தன.

ஈரான் அரசு பெட்ரோல் வாங்குவதற்கு ரேஷன் முறையைக் கொண்டு வந்ததை அடுத்தும், பெட்ரோலுக்கு வழங்கப்பட்ட மானியத்தை நீக்கி, 50 வீதம் வரை விலை உயர்த்தப்பட்டதை அடுத்தும் அந்நாட்டில் வெள்ளிக்கிழமையன்று போராட்டம் வெடித்தது.

இந்த நடவடிக்கைகள் அமெரிக்காவால் விதிக்கப்பட்ட தடைக்கு பின்னர் ஈரான் பொருளாதாரத்தில் ஏற்பட்ட அழுத்தத்தின் சமீபத்திய அறிகுறியாகும்.

எனினும் கடந்த ஞாயிற்றுக்கிழமையாகும்போது ஆர்ப்பாட்டங்கள் சுமார் 100 நகரங்களை எட்டியதாக அந்நாட்டின் பார்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. குறைந்தது 100 வங்கிகள் மற்றும் 57 கடைகள் தீ மூட்டப்பட்டிருப்பதோடு சுமார் 1,000 பேர் கைது செய்யப்பட்டதாக அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.


Add new comment

Or log in with...