மின்னேரிய விபத்தில் சாரதி உள்ளிட்ட இருவர் பலி (UPDATE) | தினகரன்


மின்னேரிய விபத்தில் சாரதி உள்ளிட்ட இருவர் பலி (UPDATE)

மின்னேரிய விபத்தில் சாரதி உள்ளிட்ட இருவர் பலி (UPDATE)-Minneriya Accident-Women and Driver Killed

மின்னேரியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, 42 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

மின்னேரியா, மரதன்கடவல - திரிக்கொண்டியாமடு வீதியில், முவன்பலஸ்ஸ பிரதேசத்தில் நேற்றிரவு (23) இவ்விபத்து சம்பவித்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

கல்முனையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான பேருந்தும் கொழும்பில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கல்முனையை நோக்கி பயணித்துக்   கொண்டிருந்த இலங்கை போக்குவரத்துச் சபையின் கல்முனை சாலைக்கு சொந்தமான பேருந்தும்; நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.

மின்னேரிய விபத்தில் சாரதி உள்ளிட்ட இருவர் பலி (UPDATE)-Minneriya Accident-Women and Driver Killedமின்னேரிய விபத்தில் சாரதி உள்ளிட்ட இருவர் பலி (UPDATE)-Minneriya Accident-Women and Driver Killed

இரண்டு பேருந்துகளும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன்,  கல்முனை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சாரதியான ஓட்டமாவடி மீராவோடையைச் சேர்ந்த எச்.எல். சலீம் (53) என்பவரே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், காரைதீவைச் சேர்ந்த பெண்ணொருவர் வைத்தியசாலையில் வைத்து உயிரிழந்துள்ளார்.

இரண்டு பேருந்தில் பயணித்த ஐம்பதுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அனுமதிக்கப்பட்டவர்களில்  சிலர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதுடன், காயமடைந்தவர்களில் ஐந்து பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்துள்ளது.

இரு பேருந்துகளிலும் பயணித்தவர்களில் காயமடைந்தோரை இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் விரைந்து அவர்களை பொலன்னறுவை மற்றும் மின்னேரியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

கோரமான இவ்விபத்தில் சிக்கி பலரும் படுகாயமடைந்துள்ளமையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் நிலை இருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.

மின்னேரிய விபத்தில் சாரதி உள்ளிட்ட இருவர் பலி (UPDATE)-Minneriya Accident-Women and Driver Killed

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மற்றொரு வாகனத்திற்கு வழி விடும் போது வேகமாக வந்த தனியார் பேருந்து மோதியுள்ளதுடன், விபத்து காரணமாக ஹபரணை மட்டக்களப்பு வீதியில் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.

மின்னேரிய விபத்தில் சாரதி உள்ளிட்ட இருவர் பலி (UPDATE)-Minneriya Accident-Women and Driver Killed

குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் மின்னேரியா பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் பஸ்ஸில் பயணித்தவர்..

"அனைவரும் நித்திரை மயக்கத்திலிருந்தவேளை 'படார்' என்று பாரிய சத்தம் கேட்டது. அதேகணம் கண்ணாடிகள் நொருங்குவதும் கம்பிகள் நொருங்குவதும் உடைவதுமாக  அனைத்தும் நொருங்கி எம்மைநோக்கி நெருங்கி வந்தன. பயணிகள் ஓவென்று அலறத் தொடங்கிவிட்டனர். சில நிமிடங்கள் செய்வதறியாது தலை விறைத்தது."

இவ்வாறு விபரிக்கிறார் மின்னேரிய பஸ் விபத்தில் சிக்கி சிறுகாயங்களுடன் மீண்ட காரைதீவு பிரதேசசபை செயலாளர்  அருணாசலம் சுந்தரகுமார்.

சம்பவம் பற்றி அவர் மேலும் விபரிக்கையில்:

"நானும் எனது மனைவியும் கொழும்பு மட்டு. ரயில் இல்லாதகாரணத்தினால் கொழும்பிலிருந்து கல்முனை பஸ்டிப்போவுக்குச் சொந்தமான கல்முனை பஸ்ஸில் பயணித்தோம்.

மாலை 4.30மணிக்கு செல்லும் அக்கரைப்பற்று பஸ்ஸில் சீற் இல்லாத காரணத்தினால் 6.00 மணிக்கு புறப்பட்ட கல்முனை பஸ்ஸில் பயணித்தோம். நாங்கள் நேரத்தோடு சீற் புக் பண்ணாத காரணத்தினால் பின்னாலிருக்க நேரிட்டது.

சாரதிக்கு பின்னாலிருக்கும் முன்சீற்றில் எமதூரைச் சேர்ந்த மருத்துவ மாதுக்கள் பயணித்ததைக் கண்டேன். அவர்கள் நேரத்தோடு சீற் புக் பண்ணியிருக்கக்கூடும்.. பஸ் நிறைய பயணிகள்.

இடையிடையே சிறுமழை. பஸ் வந்துகொண்டிருந்தது. நேரம் ஆகஆக நித்திரை வந்தது. பலரும் தூக்கத்திலிருந்தோம்.

திடிரென 'படார்' என்ற பாரிய சத்தம்கேட்டது. அதே கணம் கண்ணாடிகள் மளமளவென நொருங்கின. கம்பிகள் தகரங்கள் உடையும் சத்தம் கேட்டன. எம்மை நோக்கி ஏதோ வருவதுபோன்று தெரிந்தது.

மறுகணம் எனது மூக்கினால் இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. பஸ் மோதியதில் அனைத்து பயணிகளும் அவர்களுக்கு முன்னாலுள்ள சீற்றுகளில் முட்டி காயங்கள் ஏற்பட்டன. முன்னாலிருந்தவர்களுக்கு படுகாயங்கள் ஏற்பட்டிருந்தன. பஸ்ஸெல்லாம் இரத்தமயம்.

சாரதி அந்த இடத்திலே மரணித்திருந்தார். பாரிய விபத்து அது. இலேசாக மழைதுமித்துக்கொண்டிருந்தது.

நாம் இறங்கக்கூடியவர்கள் படபடவென இறங்கினோம். சற்று நேரத்தில் அம்புலன்ஸ் வந்தது. பலத்த காயங்களுக்குள்ளானவர்களை ஏற்றிக் கொண்டுபோனார்கள். நான் ஊருக்கு போன்பண்ணி முன்னாலிருந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தேன்.

எனது வாழ்க்கையில் இவ்வாறானதொரு விபத்தைச் சந்தித்தது இதுவே முதற்றடவை. இன்னமும் அந்த பிரம்மை நீங்கவில்லை. அனைவரும் குணம்பெற்று மீளவேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்." என்றார்.

(கல்குடா தினகரன் நிருபர - எஸ்.எம்.எம்.முர்ஷித், காரைதீவு குறூப் நிருபர் சகா)


Add new comment

Or log in with...