காதலுக்கும் நாணத்துக்குமிடையில் கரைந்துறுரும் பெண்ணுள்ளம் | தினகரன்

காதலுக்கும் நாணத்துக்குமிடையில் கரைந்துறுரும் பெண்ணுள்ளம்

முத்தொள்ளாயிரம் தரும் மனதுருக்கும் காட்சி!  

மனிதனுக்கு உரிய உணர்ச்சிகளில் நாணமும் ஒன்று. அதிலும் பெண்கள் அணிந்துகொள்ளும் ஆபரணம் போன்றது இந்த நாணம் ஆகவே தான் பெண்களிற்குரிய நான்கு வகை குணங்களில் நாணத்தையும் ஒன்றாக குறிப்பிட்டனர்.  

நங்கையர்க்கு அழகு சேர்க்கும் பிறவிச் செல்வம் நாணம் எனலாம். அதுபோல பெண்களுக்கு அழியாத பெருமையைத் தேடித் தருவதும் நாணமே என்றால் அது மிகையில்லை.  

தமிழ் இலக்கியங்கள் பலவும் மங்கையர் வெளிப்படுத்தும் நாணம் குறித்த கருத்தாடல்களை அழகுற எடுத்துரைத்துள்ளன.  

அவ்வகையில் நங்கை ஒருத்தி வெளிப்படுத்திய நாணத்தை பிறரிடம் இரந்து பிச்சை எடுத்து உண்ணும் இரவலன் ஒருவனின் நாணத்தோடு ஒப்பிட்டு அழகிய நயம் மிக்க காட்சியை தந்திருக்கின்றது முத்தொள்ளாயிர இலக்கியம்.  

மூவேந்தர்களில் ஒருவரான சேர மன்னன் வீதியுலா வருகின்றான். அந்த சேர மன்னன் மீது ஒருதலைப் பட்சமாக காதல் கொண்ட பெண் ஒருத்தி சேரனைக் காண வேண்டும் எனும் ஆசை உள்ளத்தில் வரப் பெற்று வாசல் கதவின் அருகே செல்கின்றாள்.  

ஆனால் அவள் பெண் அல்லவா? தம் மனம் விரும்பும் ஆடவரைக் காணும்போது பெண்களிடம் இயல்பாகவே நாணம் குடிகொள்ளும் தானே.  

சேர மன்னனைக் காணச் சென்ற மங்கையும் நாணம் வரப்பெற்றவளாக கதவினை அடைத்துவிட்டு திரும்புகின்றாள்.  

ஆனால் மீண்டும் சேர மன்னனைக் காண வேண்டும் எனும் ஆசை உள்ளத்தில் வெளிப்படவே திரும்பி வந்து கதவைத் திறக்கின்றாள். மீளவும் நாணம் வந்துவிடுகின்றது. கதவினை அடைத்து செல்கின்றாள். இப்படி பலமுறை ஆசையினால் கதவைத் திறக்கவும், பின் நாணத்தினால் கதவை அடைக்கவும் செய்கின்றாள் அந்த மங்கை.  

இவ்வாறு நங்கை கொண்ட நாணத்தை இன்னொரு நாணம் வெளிப்படும் காட்சியுடன் ஒப்புவமை காட்டிப் பாடியிருக்கின்ற சிறப்பினைக் குறிப்பிட முடியும். 

நேற்று வரை செல்வந்தனாக இருந்த ஒருவர் இன்று வறுமை அடைந்து விடுகின்றார். இதனால் உதவி கேட்டு தன் செல்வந்த நண்பர் ஒருவரின் வீட்டிற்கு செல்கின்றார். ஆனால் அவரது மனதில் நாணம் வந்து வீட்டின் உள்ளே செல்லவிடாமல் தடுக்கின்றது.  

இதனால் வீடடினுள் செல்லாமல் திரும்புகின்றார். ஆயினும் வறுமையின் கொடுமை துரத்தவே மீண்டும் அந்த செல்வந்தர் வீட்டிற்கு செல்கின்றார். மீண்டும் நாணம் வந்து தடைபோட திரும்பி வருகின்றார் அந்த வறியவர்.  

இவ்வாறு வறுமைக்கும், நாணத்திற்கும் நடுவே சிக்கித் தவிக்கின்ற அந்த இரவலனின் நிலையைப் போலவே காதலுக்கும், நாணத்திற்கும் இடையிலே தன் உள்ளமும் சிக்கித் தவிக்கின்றது என அந்த அழகிய மங்கை கூறுகின்றாள். இக் காட்சியைக் காப்பியம் செய்யும் பாடல் இது.  

ஆய்மணிப் பைம்பூண்

அலங்கு தார் கோதையை  

காணிய சென்று

கதவடைந்தேன், நாணிப்  

பெருஞ் செல்வர் இல்லத்து

நல்கூந்தார் போல  

வரும் செல்லும் பேரும்

என் நெஞ்சு  

முத்தொள்ளாயிரம் தந்திருக்கும் அற்புதமான பாடல் இது.  

பெண்கள் தாம் விரும்பும் ஆடவனிடம் தன் காதலை வெளிப்படுத்தவோ அல்லது உரையாடவோ முடியாது தடை செய்து விடுகின்றது நாணம். ஆக பெண்களுக்கு சில சமயம் தீமை செய்வது போல விளங்கினாலும் இயற்கையாகவே பெண்கள் சூடிக்கொள்ளும் ஓர் அழகிய அணிகலன் இந்த நாணம் என்றால் மிகையில்லை.  

ஏன் பெண்களுக்கு மட்டும் தான் நாணம் உள்ளதா? ஆண்களுக்கு நாணம் இல்லையா? என்றெல்லாம் வினாக்கள் எழலாம். இல்லையே ஆடவணிடமும் நாணம் குடிகொண்டுள்ளதே. அண்மையில் வெளிவந்த 96திரைப்படம் அதற்கு ஓர் சான்று.  

இராஜேஸ்வரன் நிஷாந்தன்


Add new comment

Or log in with...