தமிழ் அரசியல்வாதிகள் எங்களிடம் வாக்குக் கேட்டு வரத் தேவையில்லை! | தினகரன்


தமிழ் அரசியல்வாதிகள் எங்களிடம் வாக்குக் கேட்டு வரத் தேவையில்லை!

கதிரவெளி விவசாயிகளை வாழ வைத்த மானாவெளி குளம் வரட்சியின் பிடிக்குள்!

 நஞ்சற்ற வேளாண்மைச் செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இன்று நடுத்தெருவில்!  மானாவெளி குளத்தைப் புனரமைக்குமாறு கடந்த காலத்தில் விடுத்த வேண்டுகோள்களை எமது அரசியல்வாதிகள் சற்றேனும் கவனத்தில் கொள்ளாததால்தான் இன்று இந்த அவலம் 

வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கதிரவெளி மானாவெளிக் கண்டத்தில் 'ஜனாதிபதியின் நஞ்சற்ற உணவு உற்பத்தி' வேலைத் திட்டத்தில் விவசாயச் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கதிரவெளி கிராமத்திலுள்ள விவசாயிகள் 55 பேர் எண்பத்து நான்கு ஏக்கர் விவசாய நிலத்தில் நஞ்சற்ற வேளாண்மைச் செய்கை மேற்கொண்டு வந்த நிலையில், நாட்டில் தற்போது நிலவும் கொடிய வரட்சியினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

நூறு ஏக்கர் விவசாயம் செய்யும் நிலப்பரப்பில் இம்முறை எண்பத்து நான்கு ஏக்கரில் நஞ்சற்ற வேளாண்மைச் செய்கையை மேற்கொண்டுள்ளனர். நஞ்சற்ற முறையில் விவசாயம் செய்வதால் நீர்ப் பாசனம் இன்மையால் வேளாண்மையோடு சேர்த்து புற்களும் அதிகம் படர்ந்து காணப்படுகின்றன.

கதிரவெளி மானாவெளி கண்டத்தின் விவசாயிகள் தங்களது விவசாய நடவடிக்கைக்கு மானாகுளத்தின் மூலம் கிடைக்கும் நீரைப் பயன்படுத்தி வந்தனர். கடந்த பதினைந்து வருடங்களாக குளம் புனரமைக்கப்படாததன் காரணமாக குளத்தில் நீரின் தேக்கம் குறைந்து காணப்படுகிறது. விவசாய நடவடிக்கைக்கு நீர் இன்மையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் 'நஞ்சற்ற உணவு உற்பத்தி' வேலைத் திட்டத்தில் விவசாயச் செய்கையில் ஈடுபட்ட எங்களுக்கு அரசாங்கம் உதவிகளை வழங்க முன்வரவில்லை.அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளிடம் முறையிட்டால் அதனை அவர்கள் இதனை செவிமடுப்பதில்லை என்று இவ்விவசாயிகள் கூறுகின்றனர்.

"கதிரவெளி கிராமத்திலுள்ள 55 விவசாயிகள் எண்பத்து நான்கு ஏக்கரில் விவசாயம் செய்துள்ளோம். நாங்கள் எங்களது மனைவி, பிள்ளைகளின் நகைகளை அடகு வைத்தும், கடன் பெற்றும் விவசாயம் செய்துள்ளோம். தற்போது நீர் இன்மையால் விவசாய நிலம் வரண்டு காணப்படுவதுடன், வேளான்மையை விட புற்கள் அதிகம் காணப்படுகின்றன. அத்தோடு விளைந்து வரும் கதிர்கள் பதர்களாக காணப்படுகின்றன" என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

"கதிரவெளி மானாகுளத்தை நம்பி விவசாயம் செய்த நாங்கள் தற்போது வறுமையின் பிடியில் சிக்கியுள்ளோம்" என கதிரவெளி விவசாயிகளில் ஒருவரான மு.நவரெட்ணராசா கவலையுடன் தெரிவித்தார்."கதிரவெளி மானாக் கண்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்துள்ளோம். ஆனால் எங்களது பகுதியிலுள்ள மானா குளம், தாம​ைரக்கட்டு குளம் என்பன புனரமைப்பு செய்யப்படவில்லை. இதுவிடயமாக பல தடவை அரச அதிகாரிகளுக்கு மகஜர்கள் வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் இது விடயத்தில் கவனம் செலுத்தி ஏழை விவசாயிகளின் வாழ்வின் ஒளியேற்ற குளத்தை புனரமைப்பு செய்ய வேண்டும். தண்ணீர் இல்லாததால் எங்களது வயல் கதிர்கள் கருகிக் காணப்படுகின்றன.'நஞ்சற்ற உணவு உற்பத்தி' வேலைத் திட்டத்தின் கீழ் நஞ்சற்ற விவசாய செய்கையை மேற்கொண்டுள்ளோம். எமது மானா கண்ட வயல் நிலத்தில் இலகுவாக நஞ்சற்ற விவசாயத்தினை மேற்கொள்ள முடியும். எமது வயலில் எந்தவித இரசாயன மருந்துகளோ, உரங்களோ பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை.வயல் விதைத்து ஒழுங்கான முறையில் தண்ணீர் பாய்ச்சி வந்தால் அமோக விளைச்சல் கிடைக்கும். மானாகுளம் புனரமைக்கப்படும் பட்சத்தில் கதிரவெளி விவசாய அமைப்பின் கீழ் உள்ள அனைத்து விவசாயிகளும் நன்மை பெறுவார்கள்.

அவ்வாறின்றேல் விவசாயிகள் அனைவரும் பிச்சை எடுக்கும் நிலையில் தான் உள்ளோம். விவசாயிகள் இலட்சக்கணக்கில் பணத்தை செலவழித்துள்ளனர்.நகைகளை அடகு வைத்தும், கால்நடைகளை விற்றும் வேளாண்மை செய்துள்ளனர்.நாங்கள் கைவிடப்பட்ட நிலையில்தான் உள்ளோம். இனிவரும் காலங்களில் எவ்வாறு நாங்கள் வேளாண்மை செய்வது? நஷ்டஈடு தருவோம் என்பார்கள். ஆனால் எந்தவித நஷ்ட ஈடும் தருவதில்லை.மானா குளத்தை நம்பி ஐயாயிரத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் உள்ளன.குடிநீரின்றி கால்நடைகள் இறந்து கொண்டு வருகின்றன.விவசாயிகள் மற்றும் பண்ணையாளர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த விடயத்தில் அரச அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார் அவர்.

"மானாகுளத்தை புனரமைப்பு செய்து தராவிட்டால் தமிழ் அரசியல்வாதிகள் எங்களிடம் வாக்கு கேட்டு இங்கு வர வேண்டாம்" என கதிரவெளி விவசாயியான ஏ.சுவேந்திரராஜா தெரிவித்தார்.

"நான் இங்கு பதினைந்து வருடங்களாக விவசாயம் செய்து வருகின்றேன். ஆனால் கடந்த வருடமும், இவ்வருடமுமே தண்ணீர் இன்மையால் வேளாண்மை அனைத்தும் அழிந்து விட்டன.நாங்கள் நஞ்சற்ற விவசாயச் செய்கையை மேற்கொண்டுள்ளோம்.மாட்டெரு மாத்திரம் பயன்படுத்தி விவசாயம் செய்கின்றோம். நஞ்சற்ற விவசாயம் செய்வதால் எங்களுக்கு விவசாயத் திணைக்களத்தினால் உதவிகள் வழங்கப்படவில்லை.மானாகுளம் புனரமைப்பு இன்மையால் எமது வேளாண்மை அழிந்து கொண்டு வருகின்றது. இது விடயமாக பல தடவை அதிகாரிகள் மற்றும் தமிழ் எம்.பிக்களான யோகேஸ்வரன், வியாழேந்திரன், ஸ்ரீநேசன் ஆகியோரிடம் தெரியப்படுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.அவர்கள் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவுமில்லை, வருகை தந்து பார்க்கவும் இல்லை. வாகரைப் பிரதேசத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பைத்தான் நாங்கள் நம்பியுள்ளோம். இவ்விடயமாக அவர்களிடம் தெரிவித்தோம். பார்ப்பதாகத் தெரிவித்தார்கள். ஆனால் இன்னும் இல்லை. வாகரை பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் தெரிவித்தோம். இன்னும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. எங்களது பிரச்சனைகளைத் தீர்ப்பார்களென்று அவர்களுக்கு தேர்தலில் வாக்களித்தோம்.அவர்கள் எங்களைக் கவனிப்பதில்லை. இனிமேல் இவர்கள் வாக்குக் கேட்டு எங்கள் பகுதிக்கு வர தேவையில்லை" என்றார் அவர்.

 

 


Add new comment

Or log in with...