இந்து மதத்தவரை ஒன்றிணைக்க தேசிய இந்து மகாசபை உருவாக்கம் | தினகரன்


இந்து மதத்தவரை ஒன்றிணைக்க தேசிய இந்து மகாசபை உருவாக்கம்

நாட்டிலுள்ள இந்து மதத்தவரை கட்டுக்கோப்பிற்குள் கொண்டு வரும் வகையில் நாட்டின் அனைத்துப் பாகங்களிலுமுள்ள இந்து மக்களை ஒன்றிணைத்து இலங்கை தேசிய இந்து மகா சபை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

இந்து சமய விவகார அமைச்சின் ஏற்பாட்டில் தெய்வீக சேவைத் திட்டமொன்றை யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பித்து வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 225 இந்து ஆலயங்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறுகையில்,

இலங்கையிலுள்ள இந்துக்களை கட்டுக்கோப்புக்குள் கொண்டுவரும் முகமாக இலங்கை தேசிய இந்து மா சபை என்று கொண்டு வந்து இந்து சமயத்தை நாடு முழுவதும் கட்டுக் கோப்பான மதமாக நிறுவனமயப்படுத்தப்பட்ட மதமாக கொண்டு வர முடிவு செய்திருக்கிறோம்.

எமது அமைச்சில் சட்ட ரீதியாக பல விடயங்களை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம். இந்து சமய விவகார அமைச்சராக நான் பதவியேற்ற பின்பு தான் இந்து சமய கலாச்சார திணைக்களம் சட்டவலுவற்ற திணைக்களம் என்பதை ன் அறிந்து கொண்டேன்.

நாளை எந்த அமைச்சர் இங்கு வந்தாலும் இந்தத் திணைக்களத்தைக் கலைத்துவிடலாம்.

எனது அமைச்சில் பல நிறுவனங்கள் இருக்கின்றது.  இதில் உள்ள இந்து கலாச்சார திணைக்களம் தவிர ஏனையவை பதியப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஆனால் இந்து கலாச்சார திணைக்களம் தான் அவ்வாறு ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதை நான் கண்டு கொண்டிருப்பதால் அதனையும் பதிவு செய்யப்பட்டு ஏற்றுக் கொள்ளும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றேன்.

இந்து என்பது ஆதியும் அந்தமுமற்ற ஒரு சமயம். இது சமயம் மட்டுமல்ல. ஒரு மார்க்கம். தரிசனம் என்றும் நினைக்கிறேன். இதை வெறுமனே ஒரு மதம் என்று சொல்லி எங்கள் மதத்தைச் சிறுமைப்படுத்த நான் விரும்பவில்லை. அதற்கும் அப்பாற்பட்ட பரந்த தரிசனம். மார்க்கம். அது இந்த நாட்டிலே எங்களைச் சிறுமைப்படுத்த பலருக்கு வாய்ப்பாக இருந்து விடுகிறது.

ஏனைய மதங்கள் எல்லாம் கட்டுக் கோப்பான மதங்களாக மதத் தலைவர்களின் வழிநடத்தலின் கீழே மாவட்டங்களாக பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நிர்வகிக்கும் போது எங்களது மதம் இந்து சமயம் அப்படியொரு நிர்வாகத்திற்குள் வரவில்லை. அதன் காரணமாக எங்களை எவருமே வம்புக்கு இழுக்கலாம். எம்மவர்களை எவருமே அதிலும் வறியவர்களை அறியாமையை பயன்படுத்தி விலைக்கு வாங்கலாம் மதம் மாற்றலாம் என்ற நிலைமை இருக்கிறது.

அது தடுக்கப்பட வேண்டுமென்றால் எங்கள் மதம் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட மதமாக இருக்க வேண்டுமென்று நான் நினைக்கின்றேன்.

ஆலய அறங்காவலர்களையும் அறநெறிப்பாடசாலைச் செயற்பாட்டாளர்களையும், மதத் தலைவர்களைம் அதே போல் இந்து மன்றங்களையும் செயற்பாட்டாளர்களையும் இந்துக் கல்லூரிகளையும் ஒரு முகப்படுத்தும் நிறுவனப்படுத்தப்பட்ட மகா சபையாக அச் சபை விளங்கும் என்றார்.

பருத்தித்துறை விசேட நிருபர்


Add new comment

Or log in with...