மாய மானாகிப் போன ஆட்சிக் கவிழ்ப்பு | தினகரன்

மாய மானாகிப் போன ஆட்சிக் கவிழ்ப்பு

அரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணி அரசுக்கு பாராளுமன்றில் பெரும்பான்மை பலம் இல்லாதொரு நிலையில் கூட பிரேரணை தோற்கடிக்கப்பட்டதன் காரணத்தை புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து எதிரணித தரப்புகள் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அரசாங்கத்தை தண்டிப்பதற்காகவே இந்த நம்பிக்கையில்லா பிரேரணை சமர்பிக்கப்படுவதாக ஜே.வி.பி. தலைவர் அநுர குமார திசாநாயக்க குறிப்பிட்டிருந்தார். உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலுடன் அரசு மீதான குற்றச்சாட்டையே ஜே.வி.பி. தரப்பு சுமத்தியிருக்கின்றது. இதனை அரசு மீது மட்டும் பழிபோட்டுவிட முடியாத ஒருவிடயம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டில் இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் சூழ்நிலைகளை கவனத்தில் எடுத்துப் பார்க்கின்ற போது அரசாங்கத்தை பலமிழக்கச் செய்து ஆட்சி கவிழ்ப்பொன்றைக் கொண்டு வருவதன் மூலம் எதிரணித் தரப்புகள் எதனை எதிர்பார்க்கின்றனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டியுள்ளது. நாடு அண்மைக் காலமாக பல்வேறு பட்ட நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டுள்ளது அதிலிருந்து மீண்டு வருவதற்காக கடுமையாகப் பாடுபட வேண்டிய நிலையே உருவாகியுள்ளது. பொருளாதார ரீதியில் பலத்த சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில் அரசியல் நெருக்கடிக்கு இடமளிக்க முடியாது.

2015 ல் நல்லாட்சி மலர்ந்த நாள்தொட்டு அரசுக்கு எதிராக மறைமுகமான சதிகள் ஆயிரமாயிரம் முன்னெடுக்கப்பட்ட போதும் அனைத்தையும் சாதுர்யமாக வென்றெடுப்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசு வெற்றி கண்டுள்ளது. அண்மைக் காலத்தில் முஸ்லிம் சமுகத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட இனவாதச் செயற்பாடுகள் கூட அரசாங்கத்தை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டவையாகவே நோக்க முடிகிறது. ஏப்ரல் 21 சம்பவம் உண்மையிலேயே எவராலும் அனுமதிக்க முடியாது என்பதை உறுதியாகக் கூறமுடியும்.

ஆனால் அதனைக் காரணமாக வைத்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு சதித்திட்டம் தீட்டுவதை ஜனநாயக வழியில் பார்க்கும் எவரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் சுயநல அரசியல் நோக்கத்துடன் கூடியதான ஒரு முயற்ச்சிக்கு துணைபோவது நியாயமானதாக அங்கீகரிக்கப்பட முடியாது. எதிர்க்கட்சி என்பதற்காக தொட்டதெல்லாவற்றையும் எதிர்ப்பதாக அமைந்துவிடக் கூடாது. குறைபாடுகளை சுட்டிக் காட்டுவது தப்பென்று கூற முன்வரவில்லை. தவறுகளை குற்றமாக சுமத்தி தண்டிக்க முற்படுவது ஜனநாயக விழுமியமானதாக கொள்ள முடியாது.

ஏப்ரல் 21 சம்பவத்துக்கு அரசு மீது மட்டும் சுட்டுவிரல் நீட்டப்படுவதை ஏற்றுக் கொள்ளவியலாது. ஆனால் அரசும் இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்பதையும் மறுப்பதற்கில்லை. நாட்டின் பாதுகாப்புத் தரப்பிலும் குறைபாடுகள் இருக்கவே செய்கின்றன. எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் கூட பாதுகாப்புத் தரப்பு பொறுப்பற்ற விதத்திலேயே நடந்து கொண்டுள்ளது. இதன் பின்னணியைதான் ஆராய வேண்டும். இது தொடர்பில் கொடுக்கப்பட்ட முறைப்பாடுகள் குறித்து இதுவரையில் உரிய கவனம் செலுத்தப்படவில்லை.

ஜே.வி.பி. தரப்பு என்ன நோக்கத்தோடு அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைத்தாலும் எதிரணியில் உள்ள சில தரப்புகள் எந்த வழியிலாவது ஆட்சியைக் கவிழ்த்தால் போதுமானது என்ற ரீதியிலேயே சிந்தித்துள்ளனர். ஆட்சியைக் கைப்பற்றுவதே அவற்றின் எதிர்ப்பார்ப்பாகும். அதற்காக எந்தப் பேயுடனும் சேர்வதற்கு சிலர் தயாராகவே இருந்தனர். ஜே.வி.பி.யின் பிரேரணை உரிய ஆயுதமாக பயன்பட்டதையே இது உணர்த்தி நிற்கின்றது. பின் விளைவுகள் குறித்து எண்ணிப் பார்க்கப்படவில்லை.

இன்றைய நிலையில் அரசு கவிழ்க்கப்பட்டால் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதை நிதானமாக ஆராய்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு எடுத்த முடிவு பாராட்டத்தக்கதாகும். அரசை தோற்கடிப்பதால் மக்களுக்கு என்ன நன்மை கிட்டப் போகின்றது. நட்டமே தவிர நன்மை எதுவும் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்ந்ததன் காரணமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க மறுத்துவிட்டது. இது அரசாங்கத்துக்கு வக்காளத்து வாங்குவதாக கூற முற்படுவது தவறான கருத்தாகும்.

நாட்டு மக்கள் இந்த ஆட்சிக்கு ஆணை வழங்கியது ஐந்தாண்டுகளுக்காகும். அரசின் பணிகளில் சிறப்பானவை அதிகமாகவே காணப்படுகின்றன. இடையில் சில குறைபாடுகளும் காணப்படுகின்றன. அரசின் செயற்பாடுகள் நூறு வீதம் சரியானவை எனக் கூற முற்படவில்லை. குறை சுட்டிக் காட்டுவது தப்பானதல்ல. இதனை வைத்து ஆட்சிக் கவிழ்ப்புக்கு துணைபோக முடியாது என்பதை 119 பாராளுமன்ற உறுப்பினர்கள் எடுத்துரைத்திருக்கின்றனர்.

பெரும்பான்மை பலமில்லாத அரசு மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாகவே தமிழ், முஸ்லிம் தரப்புகள் அவற்றின் ஆதரவை அரசுக்கு உத்தரவாதப்படுத்தியிருக்கின்றன. அதே சமயம் தமது மனக்குறைகளை வெளிப்படுத்தவும் அவை தவறவில்லை. மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றும் போது தனது நிலைப்பாட்டை உரிய முறையில் வெளிப்படுத்திவிட்டு மனச்சாட்சிக்கு விரோதமாகவே வாக்களிப்பதாக வெளிப்படையாகவே கூறியிருக்கின்றார். தமிழ் தரப்புகளும் சில விடயங்களை வெளிப்படையாக கூறியிருக்கின்றன.

அரசுக்கு ஒரு சிவப்புச் சமிக்ஙை காட்டப்பட்டிருப்பதாகவே பார்க்க முடிகிறது. மீதமுள்ள நாட்களில் அரசுக்கு சவால்கள் காத்திருக்கின்றன. தேர்தலுக்கு முகம் கொடுக்க கூடியதொரு காலகட்டத்தில் நாடு இருக்கும் போது அதனை எதிர்கொள்ளக் கூடிய வகையில் அரசு அதன் பணிகளை முன்னெடுக்க வேண்டும். நம்பிக்கையில்லா பிரேரணையின் போது வெளிப்படுத்தப்பட்ட அழுத்தங்கள் குறித்து ஆளும் தரப்பு மிக அவதானமாகச் செயற்பட வேண்டுமென்பதை வலியுறுத்திக் கூற வேண்டியுள்ளது.


Add new comment

Or log in with...