இந்திய-சீன நல்லிணக்கத்துக்கு பெர்னாண்டஸ் வழங்கிய பங்களிப்பு | தினகரன்


இந்திய-சீன நல்லிணக்கத்துக்கு பெர்னாண்டஸ் வழங்கிய பங்களிப்பு

கடந்த மாத இறுதியில் தனது 88வயதில் புதுடில்லியில் காலமான சீற்றக் குணம் கொண்ட இந்திய அரசியல் தலைவரான ஜோர்ஜ் பெரனாண்டஸிடம் இருந்த கடுமையான தேசியவாதக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில், இந்தியா அதன் நீண்ட கால பகைமை நாடான சீனாவுடன் மீண்டும் உறவுகளைப் புதுப்பிப்பதில் அவர் முக்கியமான பாத்திரமொன்றை வகித்திருப்பார் என்று நம்பியிருக்க மாட்டார்கள்.  

ஆனால், வெளியுறவு அமைச்சினதும், முதுகில் குத்துவதை சீனா வழக்கமாகக் கொண்டிருக்கிறது என்ற காரணத்தால் அதனுடன் எந்தவொரு அனுசரிப்பையும் விரும்பாத இந்திய ஊடகங்களினதும் கடுமையான எதிர்ப்பையும் மீறி அவர் உறவுகளைப் புதுப்பிப்பதற்கு உதவினார்.  

ஜோர்ஜின் கொந்ததளிப்பானதும் சர்ச்சைக்குரியதுமான அரசியல் வாழ்வில் சீனா தொடர்பான அம்சம் குஜராத்தில் சர்தார் பட்டேல் பல்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞான ஆராய்ச்சி மாணவராக இருந்த செல்வி ராங் லூவுக்கு 2005ஆம் ஆண்டில் அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் வெளிக்கொணரப்பட்டிருந்தது. அந்த நேர்காணல் சீனாவில் மிகப் பெரிய விற்பனையைக்கொண்ட 'கான் காவோ சியாவோ ஸி' என்ற தினசரியில் பிரசுரமாகியிருந்தது.  

அதைப் படித்துப் பார்த்தால் பாரம்பரியமான குறுகிய சிந்தனைவசப்பட்டிருந்த சக்திகளிடமிருந்து ஜோர்ஜ் எதிர்நோக்கிய சவால்களைப் புரிந்து கொள்ள முடியும். சீனாவை கடுமையாக எதிர்த்த ஒருவர் என்ற நிலையில் இருந்து பரஸ்பர இணக்கத்துடனான இருதரப்பு ஒத்துழைப்பை விரும்பியவராக அவர் அடைந்த மாற்றத்தை நேர்காணல் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.  

அயல்நாடுகள் தொடர்பில் இந்தியாவின் கொள்கை பற்றிய கருத்தரங்கொன்றில் சீனாவைக் குறித்து ஜோர்ஜ் வெளியிட்ட சினேகபூர்வமான கருத்தைத் தொடர்ந்தே அவரை நேர்காணல் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ராங் லூவுக்குப் பிறந்தது. அயலகத்தில் உள்ள மற்றைய நாடுகள் தொடர்பில் ஒரு பொருதல் போக்கை வெளிப்படுத்திய அதேவேளை, சீனாவைப் பற்றி இங்கிதமான பல விடயங்களை அந்த கருத்தரங்கில் ஜோர்ஜ் சொன்னார்.  

அவரது கருத்துக்கள் இந்தியாவின் சீனக் கொள்கையைப் பிரதிபலிக்கிறதா என்று கேட்கப்பட்டபோது, "இந்திய_ -- சீன விவகாரத்தை அகவுணர்வுக்கு அப்பாற்பட்ட முறையிலேயே நான் நோக்குகிறேன். 1962போர் ( இந்திய_ -- சீன எல்லைப் போர் ) தலாய் லாமாவை ஆதரிக்குமாறு என்னைத் தூண்டியது.1962நிகழ்வுகள் சீனாவில் இருந்து என்னைத் தூரவிலக்கி வைத்திருந்தன.ஆனால், 1999மே மாதத்தில் யூகோஸ்லாவியாவில் உள்ள சீனத் தூதரகம் மீதான அமெரிக்க விமானக்குண்டுத் தாக்குதல் என்னை சீனாவுக்கு நெருக்கமாக்கியது. நான் உடனடியாக புதுடில்லியில் இருந்த சீனத் தூதுவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமெரிக்காவைக் கண்டனம் செய்வதற்கு மகாநாடொன்றை ஏற்பாடு செய்தேன். சீனா உட்பட 8நாடுகளை அந்த மகாநாட்டுக்கு நான் அழைத்தேன்" என்றார்.  

 சர்ச்சைக்குரிய போலிச்செய்தி:  

சீனா இந்தியாவின் முதல் எதிரி என்று தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் ஜோர்ஜ் கூறியதாக பரவலாக வெளியான செய்தி குறித்து ராங் லூ அவருக்கு நினைவுபடுத்திய போது அவ்வாறு தான் ஒருபோதும் கூறவில்லை என்று திட்டவட்டமாக மறுத்தார்.

"சீனா இந்தியாவுக்கு முதலாந்தர அச்சுறுத்தல் என்று நான் ஒருபோதும் கூறவில்லை.நான் அவ்வாறு கூறியதாக இந்திய பத்திரிகைகளுக்கு எழுதிய கட்டுரைகளில் சிலர் கூறியிருந்தார்கள்.

1998ஆம் ஆண்டில் நான் இந்திய பாதுகாப்பு அமைச்சராக வந்தபோது என்னை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்றுவதற்கு சிலர் சதி செய்தார்கள். அவர்களில் இரு இந்தியச் செய்திப் பத்திரிகைகளின் ஆசிரியர்களும் அடங்குவர்" என்று அவர் கூறினார்.  

"நான் பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்பதற்கு சில தினங்கள் முன்னதாக தொலைக்காட்சி நிலையம் ஒன்றின் நிருபரான நண்பர் ஒருவர் என்னை நேர்காணல் செய்ய விரும்பினார். நான் இணங்கிக் கொண்டதையடுத்து பாதுகாப்பு அமைச்சில் நேர்காணல் நடத்தப்பட்டது.  

'மிஸ்டர் பெர்னாண்டஸ், பொலிவூட் திரைப்படங்களில் எப்போதும் ஒரு பிரதான கதாநாயகனும் வில்லனும் இருப்பார்கள்.சீனா இந்தியாவின் பிரதான அல்லது முதல்தர எதிரி என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?' என்பதே அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி. அதற்கு நான்,'இல்லை, நான் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன்.சீனாவும் இந்தியாவும் இராஜதந்திர உறவுகளையும் வாணிப உறவுகளையும் கொண்டிருக்கின்றன.உண்மையில், எல்லைப் பிரச்சினை போன்ற சில பிரச்சினைகள் எமக்கிடையே இருக்கின்றன.ஆனால் அவை தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன என்று பதிலளித்தேன்."  

அதையடுத்து நேர்காணல் செய்தவர் "ஓ.கே. அப்போ நீங்கள் சீனா இந்தியாவுக்கு முதல்தர அச்சுறுத்தல் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?" என்று கேட்டார். நான் அதற்கு " சீனா முதல்தர அச்சுறுத்தல் எனறு நான் கூற மாட்டேன்.ஆனால், முதல்தர அச்சுறுத்தலைத் தோற்றுவிக்கக் கூடிய சாத்தியத்தைக் கொண்ட நாடு சீனா" என்று பதிலளித்தேன்.  

சீனா தொடர்பிலான ஜோர்ஜின் பதிலை அந்த நேர்காணல் பற்றிய ஊடகச் செய்திகள் முற்றுமுழுதாக திரிபுபடுத்தி அவர் ஒருபோதும் சொல்லாததற்கு ( அதாவது சீனா இந்தியாவின் முதல்தர எதிரி என்று) முக்கியத்துவம் கொடுத்திருந்தன. சீனாவுடன் உறவுகளைச் சீர்செய்ய திரைமறைவில் நகர்வுகளை செய்து கொண்டிருந்த பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் கலவரமடைந்து, அவ்வேளையில் அந்தமான் தீவுகளில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த ஜோர்ஜுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டார்.  

சீனா முதல்தர எதிரி என்று ஒருபோதும் சொல்லவில்லை என்று ஜோர்ஜ் மறுத்தார். டில்லி திரும்பியதும் அவர் ஊடகங்கள் தான் சொன்னதை பிழைபட எடுத்துக் கூறி விட்டன என்று சகலரையும் நம்ப வைக்க கடுமையாக முயற்சித்தார்.ஆனால், தான் சொன்னதை எவருமே கேட்கவில்லை என்று அவர் கூறினார்.  

நீங்கள் கூறியதை இந்தியப் பத்திரிகைகள் ஏன் அலட்சியம் செய்தன என்று ஜோர்ஜிடம் கேட்ட போது, "நிச்சயமாக அது ஒரு சதித் திட்டமே.என்னை அரசாங்கத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருந்தது.இந்திய_ -- சீன உறவுகளைச் சீர்குலைக்கும் கெட்ட எண்ணத்துடன் ஒரு பெரிய அதிர்ச்சி அலையை உருவாக்கவும் அவர்கள் விரும்பினார்கள்" என்று அவர் கூறினார்.  

"உண்மையை ஆராயாமல் சீனாவும் இந்திய ஊடகங்களின் திரிபுபடுத்தலை நம்பி விட்டது. நான் அந்த வார்த்தைகளைக் கூறினேன் என்பதை சீனா முதலில் நம்பவில்லை.ஆனால், பிறகு அவர்களும் கூட அந்த பிரசாரங்களை நம்பி இந்தியப் பிரதமருக்கும் இந்தியத் தரப்பில் வேறு மட்டங்களுக்கும் ஆட்சேபக் கடிதங்களை அனுப்பினார்கள்.இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே தப்பபிப்பிராயம் ஆழமாகியது" என்று ஜோர்ஜ் கவலையுடன் சொன்னார்.  

சீனாவுக்கு பரபரப்பான விஜயம்:  

2003ஆம் ஆண்டு உறவுகளைப் புதுப்பித்துக் கொள்ள சீனா விரும்பிய போது பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.ஆனால், 1998ஆம் ஆண்டில் தனது கூற்று தொடர்பாக மூண்ட சர்ச்சையை கருதிற் கொண்டு ஜோர்ஜ் தயக்கம் காட்டினார். தனக்கு அழைப்பு விடுக்க வந்த சீனத் தூதுவரிடம் காரணத்தை அவர் விளக்கினார்.அதாவது 1959ஆம் ஆண்டு தலாய்லாமாவுக்கு இந்தியாவில் வழங்கப்பட்ட தஞ்சத்துக்கு தான் அளித்த ஆதரவையும், திபெத் பிரச்சினையில் தனது நிலைப்பாட்டையும் சீனா அறிந்திருந்தது என்று கூறிய ஜோர்ஜ், சீனா தொடர்பில் தனக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றும் தெரிவித்தார்.  

மேலும், தொலைக்காட்சி நேர்காணலில் இந்திய_ -- சீன உறவுகள் பற்றி ஜோர்ஜ் வெளிப்படுத்தியதாகத் கூறப்பட்ட கருத்துகள் தொடர்பில் சீன அரசாங்கம் இந்தியப் பிரதமருக்கு இரு கடிதங்களை அனுப்பி வைத்தது. பெர்னாண்டஸின் தவறை 100வருடங்களுக்குப் பின்னரும் கூட சீனாவினால் மன்னிக்கவே அல்லது மறைக்கவோ முடியாது என்று கூறுகின்ற அளவுக்கு அரசாங்கத்துக்கான சீனாவின் இரண்டாவது கடிதம் சென்றது.அத்தகைய குழப்பகரமான பின்புலத்தில் எவ்வாறு தன்னால் எவ்வாறு சீனாவுக்கு விஜயம் செய்ய முடியும் என்று ஜோர்ஜ் கேட்டார்.ஆனால், கடந்தகால விடயங்கள் எல்லாம் கடந்து போய் விட்டன என்று கூறிய சீனத்தூதுவர், அழைப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று ஜோர்ஜிடம் வலியுறுத்தினார்.  

அதற்குப் பிறகு ஜோர்ஜ் அழைப்பை ஏற்றுக் கொள்ள இணங்கினார்.ஆனால் இந்திய, -- சீன உறவுகளைப் புதுப்பிக்கும் முயற்சிகளில் பிரதமர் வாஜ்பாயின் அந்தரங்க ஆதரவுடன் ஈடுபட்ட அன்றைய பெய்ஜிங்கிற்கான இந்தியத் தூதுவர் சிவ் சங்கர் மேனன் ஜோர்ஜின் சீன விஜயத்தில் அக்கறை காட்டிய போதிலும் இந்திய வெளியுறவு அமைச்சு அதனை விரும்பவில்லை.  

"சீனாவுக்கு விஜயம் செய்வதற்கு விரும்புகிறீர்களா என்று மேனன் என்னைக் கேட்ட போது சீனாவுக்குச் செல்வதற்கு நான் எப்போதும் விரும்பினேன் என்று கூறினேன்.வெளியுறவு அமைச்சுக்கு வேறு அபிப்பிராயம் இருப்பது போல் தெரிந்தது என்றும் அவரிடம் சொன்னேன்.

அதையடுத்து பிரதமரின் வாசஸ்தலத்துக்கு நேரடியாகச் சென்ற மேனன் வெளியுறவு அமைச்சு ஏன் குறுக்கே நிற்கிறது என்று வாஜ்பாயிடம் கேட்டார்" என்று ஜோர்ஜ் நினைவுபடுத்தினார்.  

இறுதியில் ஜோர்ஜ் 2003இல் சீனாவுக்கு விஜயம் செய்தார்.அங்கு அவருக்கு செங்கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  

வரவேற்பை ஞாபகப்படுத்தி ஜோர்ஜ் பின்வருமாறு கூறினார்;  

"சீனாவில் எனக்குத் தரப்பட்ட வரவேற்பு நான் எதிர்பார்த்ததற்கு மேலானதாக இருந்தது.பிரதமர் வென் ஜியாபாவோவுடனான சந்திப்பு மறக்க முடியாததாக அமைந்தது. இந்தியாவும் சீனாவும் உலகில் வளமான கலாசாரப் பாரம்பரியங்களைக் கொண்ட நாடுகள் என்று அவர் சொன்னார்.இரு நாடுகளுமே 2000வருடங்களுக்கும் அதிகமான காலமாக நட்புறவைப் பேணி வந்துள்ளன.அதில் 0.01சதவீத காலகட்டமே பிரச்சினைகளை எதிர்நோக்கியது. எமக்கிடையே 2000வருடங்களுக்கும் கூடுதலான நட்புறவு இருந்து வருவதனால் நாம் 0.01சதவீத பூசலை மறந்து விட வேண்டும் என்றும் சீனப் பிரதமர் சொன்னார்.நான் ஜனாதிபதி ஜியாங் செமினையும் பாதுகாப்பு அமைச்சர் கவோ காங்ஷுவானையும் சந்தித்த வேளையில் அவர்களும் இந்த 0.01சதவீதத்தை குறிப்பிட்டார்கள்."  

சீனா எந்தவொரு அயல்நாட்டுடனும் மோதல் போக்கைக் கடைப்பிடிக்க விரும்பவில்லை என்றும் எந்தவித தப்பபிப்பிராயத்தையும் அல்ல நட்புறவைக் கொண்டிருக்கவே தாங்கள் விரும்புவதாகவும் சீனத்தரப்பினர் தன்னிடம் கூறியதாக ஜோர்ஜ் தெரிவித்தார்.  

கேந்திர முக்கியத்துவ கூட்டுப்பங்காண்மை:  

சீன_ --- இந்திய கேந்திர முக்கியத்துவ கூட்டுப்பங்காண்மை ஒன்று குறித்து சீனப்பிரதமர் வென் ஜியாபாவோ முன்வைத்த யோசனை பற்றி கேட்ட போது, " கேந்திரமுக்கியத்துவம் என்ற பதம் பலவாறாக அர்த்தப்படும். கேந்திரமுக்கியத்துவ கூட்டுப்பங்காண்மை என்று வரும்போது அதன் உண்மையான அர்த்தம் சீனாவும் இந்தியாவும் பரஸ்பரம் திறந்த மனதுடன் பேசுவதேயாகும்.அதற்கு அப்பால் வேறு எதுவுமாக நான் அதை நினைக்கவில்லை.இப்போது நாம் போரைப் பற்றி பேசவில்லை.பொது எதிரியை அடையாளம் காண்பது குறித்தும் நாம் பேசவில்லை.

எனவே, கேந்திர தந்திரோபாயம் தற்போதைய பிரத்தியேகமான சூழ்நிலையில் ஒரேயொரு அர்த்தத்தைக் கொண்டதாக மாத்திரமே இருக்கமுடியும்.அதாவது சீனாவும் இந்தியாவும் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்.எந்த துறையிலும் பிரச்சினைகள் என்று வரும் போது ஒத்துழைத்துச் செயற்படுவதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கும்வரை நாம் ஒத்துழைக்க வேண்டும்" என்று ஜோர்ஜ் விளக்கமளித்தார்.  

வேறுபாடுகள் இருக்கின்ற போதிலும் சீனாவும் இந்தியாவும் இருதரப்பு வாணிபத்தை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன என்று ஜோர்ஜ் குறிப்பிட்டார்.  

"நான் சீனாவுக்கு விஜயம் செய்தபோது, சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வாணிபத்தின் அளவு இரட்டை இலக்கத்தில் மாத்திரமே இருந்தது.அது இப்போது 1350கோடி டொலர்களை எட்டி விட்டது. சீனாவும் இந்தியாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்று இரு நாடுகளின் தலைவர்களும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.இந்தியா ஜனநாயக நாடாக இருக்கிறது.சீனாவும் ஒரு நாள் ஜனநாயக நாடாக மாறும்.இரு நாடுகளும் நண்பர்களாக இருப்பதைப் பற்றி எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது" என்று அவர் சொன்னார்.  

அமெரிக்க எதிர்ப்பு:  

சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் பதற்றம் தொடர்ந்து நிலவ வேண்டும் என்பதில் அமெரிக்காவுக்கு இருக்கும் அக்கறை குறித்து கேட்ட போது, " அமெரிக்காவின் விருப்பங்கள் நடைமுறையில் சாத்தியமாக முடியும் என்று நான் நம்பவில்லை.

சீனாவும் இந்தியாவும் ஒத்துழைத்துச் செயற்பட வேண்டும்.பிராந்தியத்தில் அமைதி, சமாதானம் பேணப்பட வேண்டுமென்பதில் சீனாவும் இந்தியாவும் நம்பிக்கை வைக்க வேண்டும்.எனவே, இருதரப்பும் பரஸ்பரம் முழுமையாக நம்பிக்கை வைக்க வேண்டும். நம்பிக்கை இல்லையென்றால், கேந்திர முக்கியத்துவ கூட்டுப்பங்காண்மை இருக்கப் போவதில்லை. இந்தியாவும் சீனாவும் நம்பிக்கையில்லாமல் பரஸ்பரம் சந்தேகத்தை வளர்த்தால், 1962ஆம் ஆண்டில் நடந்தததைப் போன்ற போர் இன்னமும் கூட மூளலாம்" என்று ஜோர்ஜ் பதிலளித்தார்.  

தாய்வானுடனான உறவுகளை நியாயப்படுத்தல்:  

தாய்வானுக்கு ஜோர்ஜ் ஒரு தடவை விஜயம் செய்திருந்தார்.அந்த விஜயத்தின் பின்புலத்தில் நோக்குகையில் இந்தியா இன்னமும் ' ஒரு சீனா ' கொள்கையில் உறுதியாக இருக்கிறதா என்று அவரிடம் கேட்ட போது, " தாய்வானுக்கான எனது விஜயம் குறத்து சீன அரசாங்கம் கலவரமடைந்திருப்பதை நான் அறிவேன். பெருநிலப்பரப்புச் சீனா இந்தியாவின் ஒரு நட்பு நாடு.தாய்வானும் கூட இந்தியாவின் நட்பு நாடுதான்.சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் எந்தவகையான உறவுமுறை பேணப்படுகின்றது என்பது அவர்களது அலுவல்.தாய்வானுடனான இந்தியாவின் நட்புறவு சீனாவுடனான உறவுமுறையை மதிப்பிறக்கம் செய்ய இந்தியா விரும்புகிறது என்று அர்த்தப்பட்டு விடாது" அவர் கூறினார்.  

தாய்வானுடனான உத்தேச 'கேந்திரக் கூட்டணி' குறித்து ஜோர்ஜிடம் கேட்ட போது அவர் அது ஒரு இராணுவக் கூட்டணி அல்ல, பொருளாதார ஒத்துழைப்பு மாத்திரமே என்று கூறிதுடன் தற்போது தாய்வானிடமிருந்து சீனா பெருமளவு முதலீடுகளைப் பெற்றிருக்கிறது.அது போன்று இந்தியாவிலும் தாய்வான் முதலீடு செய்யும் என்று தாங்கள் எதிர்பார்ப்பதாக நம்பிக்கை வெளியிட்டார்.  

சகிப்புத்தன்மையை வெளிக்காட்ட வேண்டும் என்றும் இந்தியாவுடனான உறவுகளில் நேர்மையற்ற முறையில் வற்புறுத்தல்களைச் செய்யக் கூடாது என்றும் சீனாவைக் கேட்டுக் கொண்ட ஜோர்ஜ், " நான் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவைப் பற்றியே பேசுகின்றேன். ஒரு புறத்தில் கசாப்புக்கடைக்காரனின் கத்தியை வைத்துக் கொண்டு மறுபுறத்தில் நட்புறவைப் பற்றி பேசுவதற்கு என்னால் முடியாது.அந்த வகையான விடயங்கள் எந்தவிதத்திலும் ஏற்புடையவையல்ல" என்று சொன்னார்.  

வெளிப்படைத்தன்மை முக்கியம்:  

நல்ல நட்புறவைக் கட்டியெழுப்புவதற்கு இந்தியாவும் சீனாவும் பரஸ்பரம் ளெிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.


Add new comment

Or log in with...