அரச ஊடகத் தலைவர்களை சபாநாயகர் அழைத்தமை சட்டத்துக்கு முரண் | தினகரன்


அரச ஊடகத் தலைவர்களை சபாநாயகர் அழைத்தமை சட்டத்துக்கு முரண்

அரசியலமைப்பையும் நிலையியற் கட்டளையையும் மீறும் செயல்

அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்களை சபாநாயகர் பாராளுமன்றத்துக்கு அழைத்துள்ளமை சட்டத்துக்கு முரணான மோசமான செயலாகுமென பாராளுமன்ற உறுப்பினர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இந் நாட்களில் இடம்பெறும் நடவடிக்கைகள் அனைத்துமே சட்டதிட்டங்களுக்கும் சம்பிரதாயங்களுக்கும் முரணானது என்பதுடன் அவை அரசியலமைப்பையும் நிலையியற் கட்டளையையும் மீறும் செயலென்றும் ரம்புக்வெல்ல எம்.பி தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்துக்கு தலைவணங்குகின்றோம். நீதிமன்றத்தை மதிக்கின்றோம் எனக் கூறிக்கொண்டு சபாநாயகர் தமக்கு இல்லாத அதிகாரத்தை இருப்பதாகக் காட்டிக்கொண்டிருக்கிறார். அதேபோன்று நாட்டு மக்களுக்கும் தவறான தகவல்களை வழங்குகின்றாரென்றும் அவர் தெரிவித்தார். மேல் மாகாண அழகியற் கலை நிறுவனத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும்போது கெஹலிய ரம்புக்வெல்ல எம்.பி இவ்வாறு தெரிவித்தார். அவர் இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

சபாநாயகர், தமது அதிகாரத்தை மீறி செயற்படுவதாலேயே அவர் ஊடகங்களுக்கு இந்தளவு அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றார். இக்காலங்களில் பாராளுமன்றத்தில் எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை. எனினும் அவர் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை அழைத்துள்ளார். பாராளுமன்றத்தைக் கூட்டியமை சபையை ஒத்திவைத்தமை விசேட யோசனைகளை முன்வைக்கவுமே. எனினும், சபாநாயகர் விருப்பமானவர்களுக்கு விருப்பமான முறையில் பாராளுமன்றத்தில் உரையாற்றுவதற்கு இடமளித்துள்ளார். அவர்கள் அனைவருமே ஊடக செயற்பாடுகள் பற்றியே பேசுகின்றனர். ஊடக செயற்பாடுகளை தடைசெய்யுமாறு அவர்கள் கோருகின்றனர். இதனால் சபாநாயகர் அனைத்து அரச ஊடகங்களின் தலைவர்களையும் பாராளுமன்றத்திற்கு அழைப்பதற்கு உத்தரவிட்டுள்ளார். இதுதான் இவர்களது ஊடக சுதந்திரமாகும்.

நேற்றைய தினம் பாராளுமன்ற நடவடிக்கைகளும் ஏனைய நாட்கள் போன்றே அமைந்திருந்தன. அந்த செயற்பாடுகள் சட்டவிரோதமானவை. சட்டவிரோதமாக செயற்படுகின்ற பாராளுமன்றத்திலேயே அனைத்து உரைகளும் இடம்பெறுகின்றன. பாராளுமன்றத்தை கூட்டுவது மற்றும் யோசனைகளை அங்கு ஒத்திப்போடுகின்றனர். ஒத்திவைப்பு வேளை பிரேரணை என்ற பெயரில் உறுப்பினர்கள் தொடர்ச்சியாக உரையாற்றுகின்றனர்.

எனக்குத் தெரிந்தவகையில் அரச ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் நேற்று மதியம் 12.00 மணிக்கு பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளனர். எமது ஆட்சிக்காலத்தில் அரச ஊடகங்களின் செயற்பாடுகள் எந்தவித தடையுமின்றி சுதந்திரமாக இடம்பெற்றன. அதற்கு நாம் இடமளித்திருந்தோம். அதில் தலையிடுவதற்கோ அழுத்தம் கொடுப்பதற்கோ நாம் இடமளிக்கவில்லையென்பதை சகலரும் அறிவர்.

இரண்டு நாட்களுக்கு முன் அவர்களின் குழுவொன்று அரச ஊடக நிறுவனங்கள் சிலவற்றுக்கு சென்றிருந்தன. அதனையடுத்து நேற்று சபாநாயகர் முறையற்ற விதத்தில் ஊடக நிறுவனங்களின் தலைவர்களை பாராளுமன்றத்திற்கு அழைத்துள்ளார். பாராளுமன்றம் தற்போது சம்பிரதாயங்கள் மற்றும் நிலையியற் கட்டளையை மீறியே செயற்படுகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)


Add new comment

Or log in with...