Friday, April 26, 2024
Home » இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்க வேண்டும்

இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்தியா குடியுரிமை வழங்க வேண்டும்

சபையில் வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம்.பி

by gayan
December 6, 2023 7:45 am 0 comment

இலங்கையிலிருந்து இந்தியா சென்றுள்ள இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்தியா கண்டிப்பாக குடியுரிமை வழங்க வேண்டும் என வேலுசாமி இராதாகிருஷ்ணன் எம். பி பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கைக்கு அவர்கள் மீண்டும் அனுப்பப்பட்டால் அவர்கள் பெருந்தோட்டங்களில் குடியமர்த்தப்பட்டு தற்போதைய நிலைமையில் அவர்கள் பிச்சைக்காரர்களாகவே வாழ நேரிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சின் செலவுத்தலைப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

கல்வித் துறையில் மறுசீரமைப்புக்களை ஏற்படுத்த கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த விசேட கவனம் செலுத்தியுள்ளதை வரவேற்கின்றோம். கல்வித்துறையில் மாற்றம் ஏற்படுத்த முன்னாள் கல்வி அமைச்சர்களான பந்துல குணவர்தன, அகிலவிராஜ் காரியவசம் ஆகியோர் முயற்சிகளை முன்னெடுத்த போதும் அந்த முயற்சிகள் எதிர்பார்த்த அளவு வெற்றி யளிக்கவில்லை.

கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த 2007 ஆம் ஆண்டு கல்வியமைச்சராக பதவி வகித்த போது மலையகத்துக்கு 3000 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டன.எதிர்காலத்திலும் 2900 ஆசிரிய நியமனங்களை மலையகத்துக்கு வழங்குவதாக அவர் தெரிவித்துள்ளமை பாராட்டப்பட வேண்டியது. 1972 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிக்காலத்தில் பெருந்தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டன.அதனைத் தொடர்ந்து பெருந்தோட்ட பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்றது.

1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் சௌமிய மூர்த்தி தொண்டமான் அமைச்சராக பதவியேற்றதைத் தொடர்ந்து பெருந்தோட்ட பகுதி பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்பட்டன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கல்வி யமைச்சராக பதவி வகித்த போதும் பெருந்தோட்ட பாடசாலைகளின் அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப் பட்டது.கல்வியியற் கல்லூரிகளை உருவாக்கி,ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தை அவர் அறிமுகப்படுத்தினார். அந்த வகையில் நாட்டின் கல்வித்துறையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பங்களிப்பு இன்றியமையாதது. மலையக பகுதியில் 14500 ஆசிரியர்கள் சேவையில் உள்ளனர்.உதவி ஆசிரியர்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டியது அவசியம். வெளியாகியுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின்படி யாழ். வேம்படி மகளிர் கல்லூரி, யாழ்.இந்துக்கல்லூரி மற்றும் மட்டக்களப்பு வின்சன்ட் கல்லூரி ஆகியன முன்னிலையில் உள்ளன.

அதே போன்று மலையகத்தில் ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரி முன்னிலையில் உள்ளது.மலையகத்தில் பெரும்பாலான பாடசாலைகளில் மாணவர்கள் ஒன்பது ஏ சித்தி பெற்றுள்ளார்கள். உயர் கல்வி க்கான தகுதி உயர்வடைந்துள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT