சிரியாவின் இத்லிப் தாக்குதல் அச்சத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றம் | தினகரன்

சிரியாவின் இத்லிப் தாக்குதல் அச்சத்தால் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

மோதலை தடுக்க துருக்கி தலைவர் ஈரான் விரைவு

சிரிய கிளர்ச்சியாளர்களின் கடைசி கோட்டையாக இருக்கும் இத்லிப் மாகாணத்தின் மீது அரச படை தாக்குதல் ஒன்றுக்கு தயாராகி வரும் நிலையில் அந்த மாகாணத்தின் முன்னரங்குகளில் உள்ள கிராமங்களில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற ஆரம்பித்திருப்பதாக கண்காணிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வடமேற்கு மாகாணத்தை நோக்கி ரஷ்ய ஆதரவு சிரிய அரச படை கடந்த சில வாரங்களாக படைகளை குவித்து வருகிறது. இந்நிலையில் இந்த மாகாணத்தில் கடந்த மூன்று வாரங்களாக நிறுத்தப்பட்டிருந்த வான் தாக்குதல்களை ரஷ்யா கடந்த செவ்வாய்க்கிழமை தொடக்கம் ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை பின்னேரமாகும்போது தென்கிழக்கு இத்லிப்பின் அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு நெருங்கிய தூரத்தில் இருக்கும் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் அந்த பகுதிகளை கைவிட்டு வெளியேற ஆரம்பித்துள்ளனர்.

இவர்கள் வடக்கை நோக்கி அண்டைய அலெப்போவில் கிளர்ச்சியாளர் கட்டுப்பாட்டு பகுதிக்குச் செல்வதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

“சுமார் 180 குடும்பங்கள் அல்லது 1000 பேர்” புதன் பின்னேரம் தொடக்கம் வீதிகளுக்கு இறங்கிவிட்டார்கள் என்று அந்த கண்காணிப்பகத்தின் தலைவர் ராமி அப்தல் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.

இத்லிப் மாகாணத்தின் பாதிக்கும் அதிகமான பகுதி ஹயாத் தஹ்ரிர் அல் ஷாம் ஜிஹாத் கூட்டணியின் கட்டுப்பாட்டில் இருப்பதோடு, ஏஞ்சி பகுதிகள் துருக்கி ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் அரச படை மாகாணத்தின் தென்கிழக்கின் கணிசமான பகுதியை கைப்பற்றியது.

இதலிப் மீதான முழு அளவிலான ஒரு போர் 800,000 மக்களை தமது வீடுகளை விட்டு வெளியேற்றக் கூடும் என்று ஐ.நா சபை அச்சம் வெளியிட்டுள்ளது.

“இரத்த வெள்ளம் ஓடுவதை’ தவிர்க்க பிரதான வல்லரசுகள் தலையிட வேண்டும் என்று சிரியாவுக்கான ஐ.நா விசேட தூதுவர் ஸ்டபன் டி மிஸ்டுரா அழுத்தம் கொடுத்துள்ளார்.

ஈரானில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெறும் மாநாட்டில் சிரிய அரசின் கூட்டணிகளான ஈரான் மற்றும் ரஷ்ய தலைவர்களுடன் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் துருக்கி தலைவரும் சந்திக்கவுள்ளார். மறுபுறும் இத்லிப் விவகாரம் குறித்து ஐ.நா பாதுகாப்புச் சபையும் இன்று கூடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.

சிரியாவில் ஏழு ஆண்டுகளுக்கு மேல் நீடித்து வரும் உள்நாட்டு யுத்தத்திற்கு தீர்வுகாணும் பல அமைதி முயற்சிகளும் தோல்வி அடைந்த நிலையில், இதுவரை இந்த யுத்தத்தால் 350,000 பேர் வரை கொல்லப்பட்டு மில்லியன் கணக்கானவர்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.

ஏற்கனவே, மூன்று மில்லியன் சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் வழங்கி இருக்கும் துருக்கி, இத்லிப்பில் ஏற்படும் புதிய போர் மேலும் அகதிகளின் படையெடுப்புக்கு காரணமாக அமையும் என அஞ்சுகிறது.

இத்லிப் தாக்குதலை தடுக்க துருக்கி முயற்சிக்கிறது என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மவ்லுத் கவுசொக்லு நேற்று குறிப்பிட்டா். இத்லிப் மீது ரஷ்யா செவ்வாய்க்கிழமை நடத்திய தாக்குதல்கள் தவறானது என்று அவர்களிடம் நாம் தெளிவாக கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.


Add new comment

Or log in with...