Friday, April 26, 2024
Home » அரச சேவையை மிக வினைத்திறனாகவும் நட்பு ரீதியாகவும் மாற்றும் வழிகாட்டலை முன்வைக்க உப குழு

அரச சேவையை மிக வினைத்திறனாகவும் நட்பு ரீதியாகவும் மாற்றும் வழிகாட்டலை முன்வைக்க உப குழு

- 7 எம்.பிக்கள்; 14 நிபுணர்கள் உள்ளடக்கம்

by Rizwan Segu Mohideen
November 21, 2023 2:49 pm 0 comment

இலங்கையின் அரச சேவையை மிகவும் வினைத்திறனான மற்றும் நட்பு ரீதியான சேவையாக மாற்றுவதற்கான வழிகாட்டலை முன்வைப்பதற்கு வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

இந்த பாராளுமன்ற உப குழு (சட்டத்தரணி) உதயன கிரிந்திகொட தலைமையில் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த வீரசிங்க, ஜே. சீ. அலவத்துவல, மொஹமட் முஸம்மில், சமிந்த விஜேசிறி, சஞ்சீவ எதிரிமான்ன, குணதிலக ராஜபக்ஷ ஆகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 14 நிபுணர்களையும் உள்ளடக்குகின்றது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் எச்.டீ . கருணாரத்ன, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் பேராசிரியர் பிரியங்க துனுசிங்க, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வியாபார வணிக துறையின் தலைவர் கலாநிதி ஜானக பிரனாந்து , கெபிடல் மகாராஜா குழுமத்தின் பணிப்பாளர் அசோக டயஸ், பப்ரல் அமைப்பின் தலைவர் ரோஹண ஹெட்டியாராச்சி, சர்வோதய சிரமதான அமைப்பின் தலைவர் வைத்தியர் வின்யா ஆரியரத்ன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க, ஜனநாயக மறுசீரமைப்பு மற்றும் தேர்தல் கல்விக்கான நிறுவனத்தின் (IRES) நிறைவேற்றுப் பணிப்பாளர் மஞ்சுல கஜநாயக, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் வசந்த பெரேரா, பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்ற அமைச்சின் செயலாளர் கே.டீ.ஏ. ரஞ்சித் அஷோக, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் வியானி குணதிலக, வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனுஷ பெல்பிட்ட மற்றும் துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவரின் ஆலோசகர் கலாநிதி கே.ஏ. திலகரத்ன ஆகியோர் இந்த நிபுணர்கள் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உப குழு அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய வேளையில் இது தொடர்பாக நீண்ட காலந்துரையாடல் நடைபெற்றதுடன், நிபுணத்துவக் கருத்துக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழுவானது பாராளுமன்ற குழுக் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருந்தது.

இலங்கையின் அரச சேவையை மிகவும் வினைத்திறனான மற்றும் நட்பு ரீதியான சேவையாக மாற்றுவதற்கான வழிகாட்டல் முன்மொழிவை தயாரிப்பது தொடர்பில் அடிப்படை முன்மொழிவுகளை கருத்துக்களும் இதன்போது முன்வைக்கப்பட்டன.

கடந்த காலங்களில் வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவினால் அழைக்கப்பட்ட பல்வேறு அரச நிறுவனங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள் ஊடாக முன்வைக்கப்பட்ட இந்நாட்டின் அரச சேவையை வினைத்திறனான மற்றும் நட்புரீதியான சேவையாக மாற்றுவதற்கான முன்மொழிவுகள் உப குழுவின் தலைவர் ஊடாக நிபுணர் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டது. அந்த முன்மொழிவுகளையும் கவனத்திற் கொண்டு பொருத்தமான முன்மொழிவுகளை இவ்வருடத்திற்குள் நிறைவு செய்வதற்கு நிபுணர் குழு சம்மந்தம் தெரிவித்தது.

நாட்டின் அரச சேவை தொடர்பாக பொது மக்கள் மத்தியில் நிலவும் மனப்பாங்கு குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது. வினைத்திறனற்ற நிலை, உரிய பொறுப்பாற்றல் இல்லாமை, இலஞ்சம் மற்றும் ஊழல், மதிப்பாய்வுக்கு சரியான முறைமை இல்லாமை, முறையான ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் அரசியல் தலையீடுகள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

அதற்கமைய, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக் கூறல், வினைத்திறன், நட்புரீதியான தன்மை ஆகிய 4 விடயங்கள் ஊடக இந்நாட்டின் அரச சேவையை பொது மக்களுக்கு மிகவும் நெருங்கும் வகையில் வழிகாட்டல் முன்மொழிவுகளை தயாரிப்பதற்கு குழு இணக்கம் தெரிவித்தது. அத்துடன், அந்த முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு ஒழுங்குபடுத்தும் தேவை குறித்தும் குழுவினால் சுட்டிக்காட்டபட்டது.

வெளிப்படையான மற்றும் பொறுப்புக்கூற வேண்டிய அரசாங்கமொன்று பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார சுமித்ராரச்சி இதில் கலந்துகொண்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT