சிங்கப்பூர் ஒப்பந்தம் எவ்வகையிலும் இலங்கையை பாதிக்காது | தினகரன்


சிங்கப்பூர் ஒப்பந்தம் எவ்வகையிலும் இலங்கையை பாதிக்காது

சிங்கப்பூர் ஒப்பந்தம் எவ்வகையிலும் இலங்கையை பாதிக்காது

 

நாட்டின் வர்த்தகக் கொள்கைக்கு அமையவே தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளுடன் இலங்கை வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்திருக்கும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம இதன் பிரகாரமே சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை செய்துகொண்டிருப்பதகாவும் குறிப்பிட்டுள்ளார்.  

அண்மைக் காலத்தில் சிங்கப்பூருடன் இலங்கை செய்துகொண்ட வர்த்தக உடன்படிக்கை தொடர்பில் நாட்டில் பரவலான விமர்சனங்கள் எழுந்துள்ளதால் அதற்கு பதிலளிக்கும் வகையில் அமைச்சர் மலிக் சமரவிக்கிரம அறிக்கையொன்றை விடுத்திருக்கிறார்.  அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :- இலங்கை ஒருபோதும் அதன் வர்த்தக கோட்பாடுகளை மீறி எந்தவொரு உடன்படிக்கையையும் செய்வதில்லை.

வர்த்தக உடன்படிக்கையொன்றை செய்துகொள்வதற்கு முன்னர் அதனால் ஏற்படக்கூடிய நன்மை குறித்தும் பின்விளைவுகள் குறித்தும் உரிய முறையில் ஆராய்ந்ததன் பின்னரே கைச்சாத்திடப்படும். பொருளாதார ரீதியில் எந்தவித பாதகமும் ஏற்படாத நிலையிலே சில நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கிறது. நாட்டின் ஏற்றுமதித்துறை, ஏற்றுமதி வர்த்தகம் இரண்டு விடயங்களிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும்.  

இத்தகைய பொருளாதாரக் கட்டமைப்பு மூலமே எம்மால் பயனுறுதியான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும்.

அரசாங்கத்தின் நோக்கம் கூடுதலான வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்த்தெடுப்பதாகும். சிலவேளைகளில் இலக்கைத் தாண்டி செயற்பட வேண்டியுள்ளது.  

இவ்வாறான வர்த்தக உடன்படிக்கைகள் மூலமாக தொழிலாளர்களும், தொழில் சார் துறையினரும் பெருமளவில் நாட்டுக்குள் கொண்டுவரப்படலாமென சில தொழிற்சங்கங்கள் அநாவசியமான பீதி கொண்டுள்ளனர்.  

ஆனால், தொழில்சார் துறையினர், அல்லது தொழிலாளர்கள் இங்கு அழைத்து வரப்படும் போது இரண்டு வருடகாலத்துக்கு அல்லது ஒப்பந்தக்காலத்துக்கு மட்டுமே விசா வழங்கப்படும். எவ்வாறான போதும் அவர்கள் தங்கும் காலம் ஐந்து வருடங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.  

சிங்கப்பூரினதோ வேறெந்த நாடுகளுடனோ இலங்கை செய்துகொள்ளக்கூடிய வர்த்தக ஒப்பந்தங்களானது எமது நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில்

அமையாதிருப்பதில் அரசு உரிய கவனம் செலுத்தி வருகின்றது.

முதலீடுகள், வரி விதிப்புகள் உள்ளிட்ட சகல விடயங்களிலும் உள்நாட்டுச் சட்டவிதிகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைக்கும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அரசு இந்த உடன்படிக்கையையும் செய்துகொள்கிறது.  

எனவே சிங்கப்பூருடன் செய்துகொள்ளப்பட்டிருக்கும் வர்த்தக உடன்படிக்கையானது எந்த விதத்திலும் எம்மைப் பாதிக்காது என்பதையும் நாட்டுக்கு எவ்விதமான பாதக நிலையையும் ஏற்படுத்தமாட்டாது என்பதையும் உறுதிபடக்கூறுவோம். இது விடயத்தில் தொழிற்சங்கங்களோ வேறு எவருமோ வீண் பீதியோ, சந்தேகங்களோ கொள்ள வேண்டியதில்லை.
 


Add new comment

Or log in with...