Friday, April 26, 2024
Home » ஏற்றுமதித் துறையை மேம்படுத்த பட்ஜட்டில் ரூ. 50 பில்லியன் ஒதுக்கீடு

ஏற்றுமதித் துறையை மேம்படுத்த பட்ஜட்டில் ரூ. 50 பில்லியன் ஒதுக்கீடு

இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்யவும் எதிர்பார்ப்பு

by Gayan Abeykoon
November 15, 2023 1:07 am 0 comment

ற்றுமதித்துறையை மேம்படுத்துவதற்காக வரவு செலவுத் திட்டத்தின் மூலம் 50 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர், நளின் பெர்னாண்டோ பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

சிறு தொழில் முயற்சியாளர்களையும் ஏற்றுமதித் துறையில் ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என தெரிவித்த அவர், இந்தியா போன்ற நாடுகளுடன் தற்போது முன்னெடுக்கப்படும் பொருட்கள் தொடர்பான வர்த்தக ஒபபந்தங்களை பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான ஒப்பந்தங்களாக மேம்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான முதல் நாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர், முக்கிய இரண்டு மூன்று நிறுவனங்களே அரசாங்கத்திற்கான பாரிய வருமானத்தை ஈட்டிக் கொடுக்கின்றன.

அரசாங்கத்திற்கான வருமானம் 60 வீதம் என்ற வகையிலேயே அறவிடப்பட்டு வரும் நிலையில், வருமானத்தை முறையாக அறவிடும் வகையிலான யோசனைகளும் இந்த வரவு செலவு திட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளன.

சீனி மோசடி தொடர்பில் எதிர்க்கட்சியில் பலரும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். அந்த வகையில் அரசாங்கத்தின் நிதி தொடர்பான தெரிவிக்குழுவில் அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும். உண்மையில் இவ்வாறான மோசடி இடம் பெற்றிருந்தால் அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

எந்தப் பொருளும் எப்போதும் இறக்குமதியாளர்களிடம் கையிருப்பில் காணப்படும். அதனை நாம் நிறுத்த முடியாது.

சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை ஏற்றுமதியாளர்களாக உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். நாட்டில் தற்போது 13 பில்லியன் ரூபா ஏற்றுமதி வருமானமாக கிடைக்கின்றது.

இலங்கையயைப் பொறுத்தவரை நாட்டில் 65 வீதமானவர்கள் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களே. அந்த வகையில் அவர்களுக்கு ஏற்றுமதி தொடர்பான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. இது தொடர்பில் வேலைத் திட்டமொன்றை முன்னெடுப்பது அவசியமாகும்.

இதனைக் கவனத்திற் கொண்டே அவர்களுக்கான விஷேட கடன் திட்ட யோசனை இந்த வரவு செலவுத் திட்டத்தில் முன் வைக்கப்பட்டுள்ளது. அதற்காக 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த கடன் உரியவர்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதால் வங்கிகள் மூலம் அதனை பெற்றுக் கொடுப்பது தொடர்பில், நான் யோசனைகளை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளேன். ஏனைய கடன்கள் 15 வீத வட்டியில் வழங்கப்படும் நிலையில் இந்தக் கடனை ஆறு அல்லது ஏழு வீத வட்டியில் வழங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை பாரிய வர்த்தகர்களோடு சம்பந்தப் படுத்துவது எவ்வாறு என்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT