ஆண்பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்து வந்த சந்தேகநபர்கள் கைது | தினகரன்

ஆண்பிள்ளைகளை துஷ்பிரயோகம் செய்து வந்த சந்தேகநபர்கள் கைது

 

முகப்புத்தகத்தை பயன்படுத்திய சந்தேகநபர்கள்

முகப்புத்தகம் மூலம் பலாங்கொடை பிரதேசத்திலுள்ள வயது குறைந்த. ஆண் பிள்ளைகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களை நாட்டின் வேறு பிரதேசங்களுக்கு கூட்டிச் சென்று  பணம் மற்றும் கையடக்க தொலைபேசியினை வழங்கி, குடிபோதை பருகக் கொடுத்து  பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தி வந்த இரண்டு நபர்களை பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகள் மஹியங்கன நகரில் வைத்து கைது செய்துள்ளனர்.

அண்மையில் பலாங்கொடை பெலிஹுல்ஓயா, கிரின்திகலை ஆகிய பிரதேசங்களில் வசித்து வந்த 14 வயது பிள்ளைகளை ஏமாற்றி கூட்டிச் சென்று பல நாட்கள் தங்க வைத்து பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்திய பின்னர் பலாங்கொடை பிரதேசத்திற்கு கொண்டு வந்து விட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீடுகளைவிட்டு வெளியேறிச் சென்றுள்ளனர் என்று குறித்த சிறுவர்களின் பெற்றோர்கள் பிரதேச கிராம சேவகர்களிடமும், பலாங்கொடை பொலிஸ் நிலையத்திலும் புகார் செய்துள்ளனர். அதே சமயம் இது சம்பந்தமாக கிராம சேவக அதிகாரிகள் இரத்தினபுரி வலய பொறுப்பு சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி புத்திக சிரிவர்தனவுக்கு புகார் செய்துள்ளனர்.

குறித்த பிள்ளைகள் இருவரும் இரத்தினபுரி நீதிமன்ற வைத்திய அதிகாரியிடம் பரிசோதனைக்கு உற்படுத்திய போது மிகவும் மோசமான முறையில் பாலியல் வல்லுறவுக்குற்படுத்தப்பட்டுள்ளனர் என வைத்திய அறிக்கை கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி புத்திக சிரிவர்தன இது விடயமாக இரத்தினபுரி வலய சிறுவர் மற்றும் மகளிர் பிரிவுக்குப் பொறுப்பான பிரிவின் பொறுப்பதிகாரிக்கு விசாரணைகளை மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கினார்.

இதனையடுத்து பலாங்கொடை பொலிஸ் அதிகாரி எஸ்.டி. எஸ்.பீ. சன்தனாயக்க, பலாங்கொடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும், பொலிஸ் பரிசோதகருமான உதயன பண்டாரதென்னகோன், பலாங்கொடை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவின்பொறுப்பதிகாரி ஜே.டி. பி.ஜயக்கொடியின் ஆலோசனையின் பிரகாரம்,பலாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளான சமரரத்ன (17485) தர்மபால (76632) ஆகியோர் சந்தேக நபர்கள் முச்சக்கர வண்டியிலே பயணித்துக் கொண்டிருத்த சமயம் மஹியங்கனை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர். சந்தேக நபர்கள் பலாங்கொடை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் படவுள்ளனர்.

 

(பலாங்கொடை தினகரன் நிருபர்)


Add new comment

Or log in with...