பக்கம் சாராத செயற்பாடே ஊடகங்களின் தார்மீகம் | தினகரன்

பக்கம் சாராத செயற்பாடே ஊடகங்களின் தார்மீகம்

 

ஜனநாயக நாடொன்றில் ஊடக சுதந்திரம் மிக முக்கியமான சக்தியாகும். என்றாலும் ஜனநாயகப் பாரம்பரியத்தைக் கொண்ட இலங்கையில் இந்த ஊடக சுதந்திரம் கடந்த ஆட்சிக் காலத்தில் கடும் அடக்குமுறைக்கும் நசுக்குதல்களுக்கும் உள்ளாகின. இந்நாட்டு ஊடகத் துறையைப் பொறுத்த வரை அவ்வாட்சிக் காலம் ஒரு இருண்ட யுகமாகவே இருந்தது.

அவ்வாறான ஊடக அடக்குமுறைக்கு முற்றுபுள்ளி வைக்கப்பட்டு இன்று ஊடக சுதந்திம் உறுதிப்படுத்தப்பட்டு, ஊடகவியலாளர்களின் பாதுகாப்பும் உத்தவாதப்படுத்தப்பட்டுள்ளது.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி நாட்டில் ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தின் பயனாக இந்த நம்பிக்கை அளிக்கும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் பயனாக கடந்த ஆட்சி காலத்தைப் போன்று இப்போது நாட்டில் ஊடக அடக்குமுறை கிடையாது. ஊடகவியலாளர்கள் கடத்தப்படுவதுமில்லை. தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுவதும் இல்லை. அவர்கள் காயப்படுத்தப்படுவதுமில்லை. படுகொலை செய்யப்படுவதுமில்லை. அவர்களது குடும்பத்தினருக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுவதுமில்லை.

இப்போது ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக சிந்திக்கின்றனர், செயற்படுகின்றனர். இவ்வாறு நம்பிக்கை மிக்க சுதந்திர சூழல் இந்நாட்டு ஊடகவியலாளர்களுக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் கிடைக்கப் பெறவில்லை. தற்போது இந்நாட்டு ஊடக சுதந்திரத்தில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டிருக்கின்றது. இம்முன்னேற்றம் மலைக்கும் மடுவுக்குமிடையிலான வித்தியாசத்தைக் கொண்டிருக்கின்றது.

ஆனால், கடந்த ஆட்சிக்காலம் ஊடகத்துறைக்கு ஒரு இருண்ட யுகமாகவே இருந்தது. அந்த இருண்ட யுகத்திலிருந்து இந்நாட்டு ஊடகத்துறையை மீட்டெடுத்த பெருமை தற்போதைய அரசாங்கத்தையே சாரும். இன்று நம்பிக்கை மிக்க பாதையில் இந்நாட்டு ஊடகத்துறை பிரவேசித்திருக்கின்றது. இருந்த போதிலும் இந்நாட்டு ஊடகத்துறை ஆசிரியர்கள் சேர்ந்த சிலரும், சில ஊடக அமைப்புக்களின் தலைவர்களும் கடந்து வந்த இருண்ட யுகத்தை மறந்து செயற்படுகின்றனர். அவர்கள் தற்போதைய அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதிலும், விமர்சிப்பதிலும் தான் குறியாக இருக்கின்றனர். ஆனால், கடந்த ஆட்சிக் காலத்தில் தாம் முகம்கொடுத்த அடக்கு முறைகளையும் நசுக்குதல்களையும் முற்றாக மறந்தவர்களாகவே அவர்கள் செயற்படுகின்றனர்.இது பெரும் கவலைக்குரிய நிலைமையாகும்.

இவர்கள் தற்போது முன்னெடுக்கும் செயற்பாடுகளை நோக்கும் போது கடந்த ஆட்சியாளர்களை மீண்டும் பதவிக்குக் கொண்டு வர முயற்சிப்பதாகவே தெரிகிறது. ஆனால், ஊடகவியலாளர்களின் பாதுகாப்பு குறித்து கவனம் செலுத்தாதவர்களாகவே இவர்கள் இவ்வாறு செயற்படுகின்றனர்.

இவ்வாறான சூழ்நிலையில் யுனிஸ்கோ நிறுவனம் ஊடக அமைச்சுடன் இணைந்து கொழும்பு தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்றுமுன்தினம் முக்கிய கருத்தரங்கொன்றை நடத்தியது. 'ஊடகவியலாளருகளுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் தண்டனைகளில் இருந்து தப்பும் செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கருத்து வெளிப்பாட்டு சுதந்திரத்தையும் சட்ட ஆட்சியையும் ஆசியாவில் மேம்படுத்துவதற்கான பிராந்திய ஒத்துழைப்பை பலப்படுத்துதல்' என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட இக்கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க "ஜனநாயகத்தை நசுக்க முனைவோருக்கு எதிராக முதலில் குரல் எழுப்ப வேண்டியவர்கள் ஊடகவியலாளர்கள் தான். ஆனால், இந்நாட்டில் ஏற்பட்ட இவ்வகை கொடுமைக்கு எதிராக இந்நாட்டு ஊடகவியலாளர்கள் காத்திரமான முறையில் குரல் எழுப்பாது மௌனம் காக்கின்றனர். ஆனால், சமூகங்களைப் பிரிப்பதற்கு இன்னும் ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.

அதுதான் உண்மை. ஜனநாயகத்தை நசுக்குவோருக்கும், ஊடகங்கள் மீது அடக்கு முறைகளை பிரயோகிப்பவர்களுக்கும் எதிராக உலகில் முதலில் குரல் எழுப்புபவர்கள் ஊடகவியலாளர்களாகத் தான் இருக்கின்றனர். ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட்டதால் தான் ஜனநாயகம் தலைத்தோங்கும். இருந்தும் இந்த நிலமையை இங்கு காண முடியாதுள்ளது.

ஆனால், பல்லின மக்கள் வாழும் இந்நாட்டில் இனங்களுக்கிடையில் சந்தேகங்களையும், ஐயங்களையும் தோற்றுவித்து, அவர்களை தூரப்படுத்துவதற்கும், பிரிவினைகளை விரிவுபடுத்துவதற்கும் ஊடகங்கள் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. இவ்வகைச் செயற்பாடுகளினால் சமூகங்களுக்கோ, நாட்டுக்கோ எவ்வித நன்மையுமே கிடைக்கப் போவதில்லை. அவை நாட்டை வீழ்ச்சிப் பாதையிலேயே இட்டுச் செல்லும். அவ்வாறான பாதையைத்தான் இந்நாடு கடந்து வந்திருக்கின்றது. இதன் பின்னரும் அப்பாதையில் இந்த நாட்டினால் பயணிக்க முடியாது.

ஆகவே ஊடகங்கள் பக்கம் சாராது நடுநிலையாக செயற்பட வேண்டும். நாட்டினதும், மக்களினதும் முன்னேற்றத்திற்காகவும் சுபீட்சத்திற்காகவும் ஊடகங்கள் உழைக்க வேண்டும்.

இன்றைய அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்தி விமர்சிப்பது போன்று, கடந்த ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளையும், ஜனநாயக விரோத செயற்பாடுகளையும் விமர்சிக்கவும் குற்றஞ்சாட்டவும் தவறக்கூடாது. அதுவே நடுநிலை தவறாமைக்கான வெளிப்பாடாக அமையும். அவ்வாறான நடுநிலைத் தன்மையைத் தான் இந்நாட்டு மக்கள் எதிபார்க்கின்றனர். அதுவே நாட்டை சுபீட்சம் மிக்க முன்னேற்றப்பாதையில் இட்டுச் செல்லக்கூடியதாக இருக்கும்.


Add new comment

Or log in with...