எம்.பிக்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா? சிறப்பு குழுவினூடாக ஆராயமுடிவு | தினகரன்

எம்.பிக்களின் சிறப்புரிமை மீறப்பட்டுள்ளதா? சிறப்பு குழுவினூடாக ஆராயமுடிவு

பிணைமுறி ஆணைக்குழுவில் எம்.பிக்களின் தொலைபேசி உரையாடல் விபரங்கள் வெளியானமை எம்.பிகளின் சிறப்புரிமையை மீறியுள்ளதா என்பது தொடர்பில் பாராளுமன்ற சிறப்புரிமை குழுவினூடாக ஆராய இருப்பதாக சபாநாயகர் கருஜெயசூரிய நேற்று (21) சபையில் தெரிவித்தார்.

சபாநாயகர் கருஜெயசூரிய கூறியதாவது:

பிணை முறி விவகாரம் தொடர்பில் கடந்த தினங்களில் எம்.பிக்கள் பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர்.சபை முதல்வர் கிரியெல்லவும் எம்.பிக்களின் சிறப்புரிமை மீறப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் இது தொடர்பில் ஆராயும் பொறுப்பை சிறப்புரிமை குழுவுக்கு வழக்குவது உகந்தது என கருதுகிறேன். இது தொடர்பில் கட்சித்தலைவர்களுடன் பேச இருக்கிறேன் என்றார்

பந்துல குணவர்தன எம்.பி

ஜனாதிபதி ஆணைக்குழுவின் உத்தரவிற்கமையவே சி.ஐ.டி விசாரணை நடத்தியது.பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலைபேசி அழைப்புகளை கேட்கவில்லை என ஆணைக்குழு தலைவர் அறிவித்துள்ளார். எனவே எம்.பிகளின் சிறப்புரிமை மீறப்படவில்லை என்றார்.

சபை முதல்வர்

லக்‌ஷ்மன் கிரியெல்ல

ஆணைக்குழு விசாரணை நடத்துவதை எதிர்க்கவில்லை. தனிப்பட்ட ரீதியில் பேசும் ரகசிய தகவல்களை அம்பலப்படுத்தாதீர்கள் என்றே கோருகிறோம். அது தான் தவறு. ரகசிய தகவல்களை வெளியிட்டது யார். என்றார்

வாசுதேவ நாணயக்கார எம்.பி

பிணை முறி தொடர்பில் ஒத்திவைப்பு பிரேரணை விவாதம் நடத்த சபாநாயகரின் அனுமதியை கோரினேன். ஆனால் நிலையியற் கட்டளையின் பிரகாரம் அனுமதிக்க முடியாதென மறுத்துள்ளீர்கள். ஆனால், இந்த விடயம் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.

ரஞ்சித் சொய்சா எம்.பி

எம்.பிகளின் தொலைபேசி உரையாடல் திருட்டுத்தனமாக கேட்கப்பட்டதாக சபை முதல்வர் தெரிவித்தது தவறாகும்.

உதய கம்மம்பில எம்.பி

மக்கள் பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் வெளிப்படையாகவும் செயற்பட வேண்டும்.எமது சொயற்பாடுகளை மக்கள் அறிய வேண்டும்.தகவல் அறியும் சட்டத்தை நிறைவேற்றி விட்டு தகவல் வெ ளியாவதற்கு அஞ்சுவதேன் என்றார்.

சமிந்த விஜேசிறி (ஐ.தே.க எம்.பி)

ஆணைக்குழு முன் பிரதமர் முன்மாதிரியாக ஆஜராகி சாட்சியமளித்தார். எமது அரசாங்கம் திருட்டுகளை மறைக்காது. எதிரணியினர் முடிந்தால் விசாரணைகளுக்கு செல்லட்டும்.

அமைச்சர் கபீர் ஹாசிம்

மோசடி ஒழிப்பு ஆணைக்குழு விசாரணைக்கு அழைத்தால் தலை மறையாகுபவர்கள் எம்மீது குற்றஞ் சுமத்துகின்றனர்.

தகவல் கேட்டால் வெள்ளை வானில் கடத்தியது இவர்களது அரசாங்கம் தான் என்றார். 

ஷம்ஸ் பாஹிம், மகேஸ்வரன் பிரசாத்


Add new comment

Or log in with...