பாரிய நிதி மோசடி; காமினி செனரத் உட்பட மூவர் தலைமறைவு | தினகரன்


பாரிய நிதி மோசடி; காமினி செனரத் உட்பட மூவர் தலைமறைவு

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டமை தொடர்பில் கைதுசெய்வதற்காக தேடப்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி ஆளணியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உட்பட மூன்று பேர் தலைமறைவாகியுள்ளனர்.

நேற்றைய தினம் அவர்களை கைதுசெய்வதற்காக நிதி மோசடி விசாரணைப்பிரிவு அதிகாரிகள் அவர்களின் வீடுகளுக்கு சென்றிருந்த போதும் அங்கிருந்து அவர்கள் தப்பிச்சென்றுள்ளதாக அவ்வதிகாரிகள் தெரிவித்தனர். எவ்வாறாயினும் காமினி செனரத் உட்பட மேற்படி மூவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை நிதி மோசடி விசாரணைப்பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளதாகவும் அவர்கள் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லாத வகையில் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னாள் ஜனாதிபதி ஆளணியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உட்பட மூன்று பேரை கைதுசெய்வதற்கு நேற்று நிதி மோசடி விசாரணைப்பிரிவு அதிகாரிகள் சென்ற போது அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றிருந்ததுடன் அங்கிருந்தோர் அவர்கள் பற்றி ஏற்றுக்கொள்ளக்கூடிய தகவல்களை வழங்கவில்லை என்றும் நிதி மோசடி விசாரணைப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்றைய தினம் நிதி மோசடி விசாரணைப்பிரிவு அதிகாரிகள் காமினி செனரத் மற்றும் பணிப்பாளரான நீல் ஹப்பவின்ன மற்றும் பியதாஸ குடாபாலகே ஆகிய மூவரையும் கைதுசெய்வதற்கே அதிகாரிகள் வீடு தேடிச் சென்றனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் கொழும்பு கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள 100 கோடிக்கும் மேற்பட்ட பெறுமதியான கிரான்ட் ஹயாட் ஹோட்டல் செயற்திட்டம் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டு வந்த நிர்மாணப் பணிகளில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி தொடர்பிலேயே இவர்கள் கைதுசெய்யப்படவுள்ளனர்.

இவர்கள் தொடர்பில் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகளையடுத்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. இந்த விசாரணைகளின் முடிவில் மேற்படி மூவரிடமிருந்தும் வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளும் வகையில் நேற்று முன்தினம் (30) அவர்கள் நிதி குற்றத் தடுப்பு பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தனர். எனினும் அத்தினத்தில் அவர்கள் சமுகமளிக்கவில்லை. எனினும் நேற்றைய தினம் சட்டத்தரணி ஒருவர் மூலமாக அவர்கள் நிதி மோசடி விசாரணைப்பிரிவுக்கு சமுகமளிப்பதாக அறிவித்திருந்தனர்.

ஆயினும் நேற்றைய தினம் அவர்கள் நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு சமுகமளிக்காததால் அதனையடுத்து நிதி மோசடி விசாரணைப்பிரிவு அதிகாரிகள் குழுவினர் அவர்களிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு அதன்பின்னர் அவர்களைக் கைது செய்வதற்கென அவர்களுடைய இருப்பிடங்களுக்குச் சென்றிருந்தனர்.

இது தொடர்பில் அந்த அதிகாரிகள் கொழும்பு கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்திற்கு அறிவித்துவிட்டு நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே அங்கு சென்றிருந்தனர். எனினும் அவர்கள் மூவரும் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக அந்த அதிகாரிகள் தெரிவித்தனர். மூவரையும் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை நிதி மோசடி விசாரணைப்பிரிவு அதிகாரிகள் முடுக்கிவிட்டுள்ள நிலையில் வெளிநாட்டுக்கு அவர்கள் தப்பிச்செல்ல முடியாத வகையில் சட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (ஸ)


Add new comment

Or log in with...