கள்ளக் காதலன் மற்றொரு பெண்ணுடன்; கத்திக் குத்து | தினகரன்

கள்ளக் காதலன் மற்றொரு பெண்ணுடன்; கத்திக் குத்து

 
தனது சட்டரீதியற்ற கணவருக்கும் அவரோடு கள்ளத் தொடர்பை ஏற்படுத்திய பெண்ணுக்கும் கத்தியால் குத்தி காயமேற்படுத்திய பெண் ஒருவரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். 
 
முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி வீரபுர பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
 
கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சில வருடங்களுக்கு முன்னர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளதோடு, அதன் பின்னர்  இப்பெண் தனது பிரதேசத்தைச் சேர்ந்த திருமணமான நபர் ஒருவருடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
இந்நிலையில் தனது கள்ளக்காதலன் மற்றொரு பெண்ணுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை அறிந்து கொண்ட சந்தேகநபரான இப்பெண் அவர்களிருவரையும் கையும் களவுமாகப் பிடிப்பதற்கு முயற்சித்துள்ளார். 
 
அவர்களை ஒன்றாகப் பிடிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த வேளை கடந்த ஞாயிற்றுக்கிழமை (05) தனது கள்ளக்காதலனும் அவரது புதிய கள்ளக்காதலியும் ஒன்றாகப் பயணிப்பதைக் கண்டு கொண்ட சந்தேகநபரான இப்பெண், அவர்கள் செல்லும் வழியில் மறைந்திருந்து அவ்விருவரும் வந்ததும் அவர்கள் முன்னால் பாய்ந்து தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவர்களிருவரையும் தாக்கியுள்ளார். 
 
இதில் காயமடைந்த இருவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
இச்சம்பவத்தையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட முந்தல் பொலிஸார் சந்தேகநபரான பெண்ணைக் கைது செய்துள்ளதோடு அவரிடமிருந்த கத்தியையும் கைபற்றியுள்ளனர்.
 
கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண்ணை புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ள முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
(புத்தளம் விஷேட நிருபர் - எம். எஸ். முஸப்பிர்)
 
 

Add new comment

Or log in with...