Sunday, May 19, 2024
Home » ஐ.நாவின் விருதைப் பெற்ற மறுசீரமைப்பு முயற்சியின் பங்காளர் எனும் பெருமையை பெற்ற Hemas Consumer Brands

ஐ.நாவின் விருதைப் பெற்ற மறுசீரமைப்பு முயற்சியின் பங்காளர் எனும் பெருமையை பெற்ற Hemas Consumer Brands

by Rizwan Segu Mohideen
May 3, 2024 3:21 pm 0 comment

2024 ஆம் ஆண்டுக்கான UN Decade of Restoration (ஐ.நா.வின் தசாப்தத்தின் மதிப்புமிக்க மறுசீரமைப்பு) எனும் முதன்மையான விருதை இலங்கை பெறுவதற்கான, கௌரவத்தின் பங்குதாரர்களின் கூட்டணியில் ஒருவராக Hemas Consumer Brands திகழ்கிறது.

இந்த பாராட்டானது, சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதற்கான கூட்டு முயற்சிகளை பிரதிபலிக்கிறது. வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் (WNPS) முன்னோடியான பங்காளி எனும் வகையில் நிறுவனம் பெருமை கொள்வதோடு, ஆனைவிழுந்தான் ரம்சார் இயற்கை சதுப்பு நில மறுசீரமைப்பு துரிதப்படுத்தல் திட்டத்தில், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களத்தின் (DWC) முதன்மைப் பங்காளியாக நிறுவனம் விளங்குகின்றது.

2021 ஆம் ஆண்டில், WNPS விடுத்த அழைப்பிற்கு, Hemas Consumer Brands சாதகமான பதிலை வழங்கியதன் மூலம், தங்கொட்டுவையில் உள்ள நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலைக்கு அருகில் காணப்படும், தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள சதுப்புநில சூழல் தொகுதிகளை மீளுருவாக்குவதன் அவசியத்தை நிறுவனம் புரிந்துகொண்டது. சூழலைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அர்ப்பணிப்புடன் உள்ள ஒரு நிறுவனம் வகையில், உயிர்ப்பல்வகைமைப் பாதுகாப்பு, கரையோரப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்தைத் தணிப்பதில் சதுப்புநிலங்கள் வகிக்கும் முக்கிய பங்கை நன்கு அறிந்துள்ளது.

இந்த மதிப்புமிக்க விருது குறித்து கருத்துத் தெரிவித்த, Hemas Consumer Brands முகாமைத்துவப் பணிப்பாளர் சப்ரினா யூசுபலி, “2024 ஆம் ஆண்டிற்கான ஐக்கிய நாடுகள் சபையின் மதிப்புமிக்க மறுசீரமைப்புக்கான முதன்மை விருது மூலம் இலங்கைக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரத்தில், Hemas ஆகிய நாம் ஒரு முக்கிய பங்கை ஆற்றியுள்ளோம் என்பதில் மிகுந்த பெருமையடைகிறோம். சுற்றாடல் அமைச்சு, WNPS, மற்றும் ஒத்த எண்ணம் கொண்ட கூட்டாளர்களுடன் இணைந்து, எமது கூட்டு அர்ப்பணிப்பான, எமது இயற்கை பாரம்பரியத்தைப் பாதுகாப்பதிலும் எதிர்கால சந்ததியினருக்காக எமது சூழல் தொகுதியில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதிலும் உறுதியான மாற்றத்தை நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது என்பதை அறிந்து நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

சதுப்புநில மறுசீரமைப்பின் முக்கியத்துவமானது மிகவும் இன்றியமையாததாகும். குறிப்பாக இலங்கையில், பல ஆண்டுகளாக இந்த சூழல் தொகுதிகள் குறிப்பிடத்தக்க சரிவை எதிர்கொண்டுள்ளன. இந்நிலைமையின் அவசரத்தைப் புரிந்துகொண்டு, ஒரு பொறுப்புள்ள பெருநிறுவனம் எனும் வகையில் Hemas Consumer Brands ஆனது, அதன் வளங்கள், நிபுணத்துவம், மனிதவளம் ஆகியவற்றை பயன்படுத்தி இந்த மறுசீரமைப்புச் செயன்முறைக்கு ஆதரவளித்தன.

இலங்கையின் வயம்ப பல்கலைக்கழகத்தின் விவசாயம் மற்றும் மீன்பிடி பிரிவின் தலைவர் பேராசிரியர் செவ்வந்தி ஜயகொடி இது பற்றி கருத்துத் தெரிவிக்கையில், “ஐ.நா. தசாப்த மறுசீரமைப்பு தொடர்பான முதன்மை விருதைப் பெறுவதில் Hemas நிறுவனம் கொண்டுள்ள பங்கு பாராட்டுக்குரியதாகும். பல்வேறு நிச்சயமற்ற நிலைமைகள் காணப்பட்ட போதிலும், இந்தத் திட்டத்தை ஆதரித்தவர்களில் முதலாவது பெருநிறுவனம் அவர்களே. அத்துடன் இந்த முயற்சியைத் தொடர, அவர்களின் ஆதரவும் உறுதியான அர்ப்பணிப்பும் எமக்கு நம்பிக்கையை வழங்குவதில் முக்கியமானதாக அமைந்தன.” என்றார்.

இத்திட்டத்தில் Hemas Consumer Brands இன் ஈடுபாடானது, வெறுமனே மீள்நடுகை முயற்சிகளுக்கு அப்பாற்பட்டதாகும். இத்திட்டத்தின் நிதியுதவியில் கணிசமான பகுதியானது விஞ்ஞான ஆய்வுகள், தற்போது முன்னெடுக்கப்படும் பகுப்பாய்வு மற்றும் சூழல்தொகுதியின் விரிவான அளவீடு ஆகியவற்றிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மையக் கவனமானது, உரிய விஞ்ஞான ஆய்வு மற்றும் புரிதலை கொண்டிருக்க வேண்டும் என்பதை இது எடுத்துக்காட்டுகிறது. மேலும், விழிப்புணர்வுத் திட்டங்கள் மற்றும் சமூகங்களின் ஈடுபாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் மூலம், குடியிருப்பாளர்களிடையே இது தமக்குரிய பொறுப்பு எனும் உணர்வைத் தூண்டுவதையும், தாம் இயற்கைச் சூழலின் பொறுப்பாளர்கள் என்பதை அவர்களுக்கு வலுவூட்டுவதையும் Hemas Consumer Brands நோக்கமாகக் கொண்டிருந்தது.

ஆனைவிழுந்தான் சதுப்புநில மறுசீரமைப்புத் திட்டத்தின் வெற்றியானது, அரச மற்றும் தனியார் துறைகளின் ஒத்துழைப்பின் பலத்திற்கு ஒரு சான்றாகும். WNPS இன் முன்னணி பங்காளியான Hemas Consumer Brands, இலங்கை வயம்ப பல்கலைக்கழகத்தின் மேற்பார்வையின் கீழ் சுற்றாடல் அமைச்சு, வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம், வனப் பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு பங்காளிகள் இணைந்து செயற்படும்போது, சூழல் தொடர்பான அச்சுறுத்தும் சவால்களை எதிர்கொண்டாலும், ஒரு இலக்கை அடைவதில் அர்த்தமுள்ள ஒரு மாற்றம் சாத்தியமானது என்பதை நிரூபித்துள்ளது. ஒரு உண்மையான இலங்கை நிறுவனமான Hemas, இலங்கையில் உள்ள 50 இற்கும் மேற்பட்ட உள்நாட்டு உயிரினங்களைப் பாதுகாப்பதற்கான மற்றுமொரு பாரிய முயற்சிக்காக WNPS உடன் இணைந்துள்ளது. பூமிக்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் ஒத்திசைவான வகையில், ஆழமான பொறுப்புணர்வு மூலம் வழிநடத்தப்படும் சூழல் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பில் தங்கள் முயற்சிகளைத் தொடர்ந்தும் முன்னெடுப்பதில் Hemas உறுதியாக உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT