சிவனொளிபாதமலை உச்சியிலிருந்து பாய்ந்ததாக தேடி வந்த இளைஞன் ஆறு நாட்களுக்கு பின் உயிருடன் கண்டு மீட்கப்பட்டுள்ளதாக நல்லத்தண்ணீர் பொலிஸாரர் தெரிவித்துள்ளனர்.
கடந்த 19 ஆம் திகதி இரண்டு பெண்களுடன் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில் மலையில் உச்சியில் இருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த சூரியவௌ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லதண்ணி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் நேற்று (24) காலை இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டு தோட்ட தொழிலாளர்கள் குழுவினால் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அங்கு, பொலிஸ் உத்தியோகத்தர்கள் இளைஞனை சிகிச்சைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதித்து பின்னர் நேற்று இரவு டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இளைஞரைத் தேடுவதற்காக 3 நாட்களாக விசேட நடவடிக்கையை மேற்கொண்டு பின்னர் அதனை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
குறித்த நபர் தனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை என்று மட்டுமே நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மலைவாஞ்ஞன் ஹட்டன் விசேட நிருபர்
மஸ்கெலியா நிருபர் செ.தி.பெருமாள்