Monday, May 6, 2024
Home » தமிழ் சமூகம் எவரிடமும் கையேந்தாத வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும்

தமிழ் சமூகம் எவரிடமும் கையேந்தாத வெற்றியை நோக்கிச் செல்ல வேண்டும்

அமைச்சர் டக்ளஸ்

by Gayan Abeykoon
April 24, 2024 9:20 am 0 comment

தமிழ் சமூகம் எவரிடமும் கையேந்தாத வெற்றியை நோக்கிச் செல்லும் சமூகமாக உருவாகவேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி விநியோகிக்கும் (2024) வேலைத்திட்டத்தை யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் ஆரம்பித்துவைத்து உரையாற்றும் போதே அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எந்த திட்டமாகவிருந்தாலும் அது தகுதியானவர்களுக்கு கிடைக்க வேண்டும். தகுதியற்றவர்களை இனங்காணப்பட்டு அத்திட்டத்திலிருந்து அகற்றுவதும் அவசியம்.

அதேபோன்றுதான் இத்திட்டத்திலும் அவ்வாறு தவறான தெரிவுகள் இனங்காணப்பட்டால் அதற்கான நடவடிக்கைகள் குறித்து கிராம உத்தியோகத்தர்கள் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வுகளை எட்ட முடியும்.

தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தொடர்ந்து பதவியில் இருக்கவேண்டும் என நான் நினைக்கின்றேன்.

அதுமட்டுமல்லாது இதை நான் பல தடவைகள் பொதுவெளியிலும் கூறிவந்திருகின்றேன் .

அதேநேரம், தென்னிலங்கையில் நாட்டை சீர்தூக்கிச் செல்லக்கூடிய வகையில் வேறு தலைவர்கள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. இதனால் ரணில் தொடர்ந்தும் ஜனாதிபதியாக இருப்பாரானால் நாடு முழுமையாக வளர்ச்சிபெறும் என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை.

இதேநேரம் தமிழ் பொது வேட்பாளர் என்பது தமிழருக்கு தோல்வியான ஒன்றுதான். இது எந்தவிதத்திலும் தமிழ் மக்களுக்கு நலனை பெற்றுத் தராது.

தெற்கே தேர்தலில் போட்டியாளர்களாக இறங்கவிருக்கும் தரப்பினருடன் இணக்கத்தை ஏற்படுத்தி அவர்களுடன் பேரம்பேசி எமது மக்களின் அரசியல் உரிமை உள்ளிட்ட தேவைகளை பெற்றுக்கொள்ளும் வகையில் தான் நகர்வுகள் அமையவேண்டும். ஆனால் தமிழ் தரப்பினர் அவ்வாறு முயற்சிக்கவில்லை. முயற்சிக்கவும் விரும்பவில்லை என்பது வேடிக்கையாக உள்ளது.

இதேநேரம் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தளவில் நடைமுறை சாத்தியமான அரசியல் தீர்வையே கொண்டுள்ளோம். குறிப்பாக இலங்கை இந்திய ஒப்பந்தம் தான் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் என நாம் பல தசாப்தங்களாகக் கூறிவந்துள்ளோம்.

நோய் ஒன்றை குணமாக்க வேண்டும் என்றால் கசப்பான மருந்தானாலும் அதை குடித்தே ஆகவேண்டும். அதுபோன்றுதான் இன்றைய பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் அரசியல் சூழல் என எல்லாம் அமைந்துள்ளது. அதற்கு நாமும் பங்களிப்பு செய்வது அவசியம்.

எமது இளைஞர்கள் எமது உரிமையை பெறுவதற்காக தங்களை அர்ப்பணிப்பதற்கு தயாராக இருந்தார்கள்.

ஆனால் கடந்தகால தமிழ் அரசியல்வாதிகளானாலும் சரி ஆயுத வன்முறையாளர்களானாலும் சரி இருப்பதை பாதுகாக்கவும் இல்லை கிடைப்பதை சாதகமாக்கிக்கொள்ளவும் இல்லையென அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT