Monday, May 6, 2024
Home » அபிவிருத்தியில் இணைந்தது போன்று அரசியலிலும் கூட்டமைப்பினர் இணைவர்

அபிவிருத்தியில் இணைந்தது போன்று அரசியலிலும் கூட்டமைப்பினர் இணைவர்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நம்பிக்கை

by Gayan Abeykoon
April 24, 2024 9:50 am 0 comment

நாட்டை அபிவிருத்தியால் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் கைகோர்த்ததை போன்று அரசியல் தீர்வு விடயத்திலும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இணைந்து செயற்படுவார்கள் என  ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்றையதினம் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டை அபிவிருத்தி பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு தன்னுடன் இணைந்து பயணிப்பவர்களுக்கு தனக்காக ஒதுக்கப்பட்ட விசேட நிதியிலிருந்து ஒதுக்கீட்டை செய்து கொடுப்பதற்கு தயாராகவிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இக்கூற்றை ஏற்று தற்போது அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீட்டை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர்.

ஈ.பி.டி.பியினரின் கோட்பாட்டையொத்த இவர்களது இந்த மாற்றம் வரவேற்கத்தக்கது. இதேநேரம் அவர்கள் அபிவிருத்தி தொடர்பில் எடுத்த தீர்மானத்தை அரசியல் தீர்வு விடயத்திலும் எடுக்க வேண்டும்.

ஏனெனில் நாம் பாராளுமன்ற ஜனநாயக அரசியலில் காலடியெடுத்து வைக்க ஆரம்பித்த காலத்திலிருந்து மக்களின் அத்தியாவசிய தேவைகள் முதலில் தீர்க்கப்பட வேண்டும். அதனூடாக படிப்படியாக அரசியல் உரிமை விடயத்தில் முன்னேற்றமடைய முடியுமென வலியுறுத்தி வருகின்றோம்.

ஆனால் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தி தேவையில்லை. அரசியல் உரிமை கிடைத்தால் அபிவிருத்திகள் தானாக கிடைத்துவிடும் என ஊர்ஊராக முழக்கி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு சேறுபூசி விமர்சித்து வந்தனர். இதேபோன்று கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மீளமுடியாதென கைவிடப்படும் நிலைக்கு சென்றுகொண்டிருந்த இலங்கை தீவை ஜனாதிபதி ரணில் பொறுப்பெடுத்தார். அதையும் பலர் விமர்சித்தனர்.

ஜனாதிபதி ரணில் தேசியப் பட்டியல் உறுப்பினராக வந்தவர், இவர் மக்களின் ஆணையுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படவில்லை என்றெல்லாம் பல்வேறு கருத்துக்களை சொல்லி விமர்சித்து தமது அரசியலை முன்னெடுத்திருந்தனர்.

தங்களுடைய கூட்டுக்குள் இருக்கின்ற குழப்பங்களால் மக்களால் ஒதுக்கப்படுவோம் என்ற அச்சத்தில் விமர்சனங்களை முன்வைத்தார்களோ அந்த ஜனாதிபதியிடம் சென்று நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு இணைந்து செயற்படுவதாகவும் தமக்கும் அபிவிருத்திக்கான பங்கை தருமாறு கோரியிருப்பதும் வரவேற்கக்கூடிய விடயமாகும். எனவே அரசியல் தீர்வு விடயத்திலும் எம்மைப் போன்றே அவர்களும் தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

பருத்திதுறை விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT