Friday, May 3, 2024
Home » பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு

பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு

படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம்

by gayan
April 20, 2024 7:44 am 0 comment

காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது.

காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன.

காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது.

எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது.

எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது.

ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது.

‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார்.

இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.

‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது.

‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார்.

ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT