Thursday, May 16, 2024
Home » உம்ரா, ஹஜ் யாத்திரிகர்களுக்கு அளப்பரிய சேவையாற்றும் சவுதி

உம்ரா, ஹஜ் யாத்திரிகர்களுக்கு அளப்பரிய சேவையாற்றும் சவுதி

by mahesh
April 10, 2024 7:00 am 0 comment

‘புனித மக்கா, மதீனாவையும் ஹஜ், உம்ரா விடயங்களைக் கவனிப்பதிலும் அங்குள்ள புனிதஸ்தலங்களை நிர்வகிப்பதிலும் சவுதி அரேபியாவை ஆட்சி செய்வதிலும் உலக முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குவதிலும் சங்கைக்குரிய ஆல் ஸஊத் பரம்பரை தான் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே அனைத்து முஸ்லிம்களதும் எமதும் விருப்பமாகும். குறிப்பாக புனித மக்கா, மதீனா மற்றும் ஏனைய புனிதஸ்தலங்கள் எப்போதும் அவர்களது நிர்வகிப்பில் இருக்க வேண்டும் என்பது தான் அனைவருடையதும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆல் ஸஊத் பரம்பரையினர் மக்கா, மதீனா மற்றும் புனிதஸ்தலங்களை தற்போது போன்றே தொடர்ந்தும் சிறப்பாக தலைமை தாங்கி சேவை செய்ய வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பும் பிரார்த்தனையும் ஆகும். அதுவே உலக முஸ்லிம்களுக்கும் எமக்கும் பெருமை.

உலகெங்கிலுமுள்ள ஒவ்வொரு முஸ்லிமும் விரும்பும், பெரிதும் ஆசை கொள்ளும் இடங்கள் தான் மக்காவும் மதீனாவும் ஆகும். சவுதி அரேபியாவில் அமைந்துள்ள இவ்விடங்களுக்கு சென்று தான் தம் ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். அதுவே அந்த ஆசைக்கும் விருப்பத்திற்கும் அடித்தளமாக அமைந்துள்ளது.

இந்த மார்க்கக் கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள விரும்பாதோர் உலகில் எவரும் இருக்க மாட்டார்கள். அவர்களிடம் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அப்புனித தளங்களை வாழ்வில் ஒரு தடவையேனும் தரிசிக்க வேண்டும், அங்கு இறைவழிபாடுகளில் ஈடுபட வேண்டும் என்ற அவா கொண்டவர்களாகவே ஒவ்வொருவரும் உள்ளனர்.

அவர்கள் தங்களது பொருளாதார வசதிகளை ஓரளவாவது சரி செய்து கொண்டு மக்கா, மதீனா சென்று தம் ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதைப் பரவலாக அவதானிக்க முடிகிறது. இவ்வாறு கடும் முயற்சிகளின் ஊடாகவும், ஆசை விருப்பத்துடனும் ஹஜ், உம்ராவை நிறைவேற்றவரும் யாத்திரீகர்களுக்கு சவுதி அரேபியா அனைத்து விதமான வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதற்கென விசாலமான கட்டமைப்புக்களைத் தன்னகத்தே கொண்டிருக்கிறது சவுதி.

இக்கடமைகளை நிறைவேற்றவரும் ஒவ்வொருவரும் தங்களது இறைவணக்கங்களை எவ்வித குறைபாடுகளும் இன்றி சிறப்பாகவும் மன நிம்மதியோடும் நிறைவேற்றுவதற்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் அன்று தொட்டு சவுதி செய்து கொடுத்து வருகிறது.

அந்த வகையில் உலகின் பல பாகங்களில் இருந்தும் ஒவ்வொரு நாளும் மக்கா, மதீனாவுக்கு யாத்திரிகர்கள் வருகின்ற போதிலும் ரமழான் மற்றும் ஹஜ் காலங்களில் வருவோரின் எண்ணிக்கை மிக அதிகமாகும். அப்படியிருந்த போதிலும் அந்த மில்லியன் கணக்கான யாத்திரிகள்களையும் வரவேற்று அவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுப்பதற்கு சவுதி ஒரு போதும் பின்நிற்பதில்லை.

ஹஜ், உம்ரா கடமைகளை நிறைவேற்றவரும் ஒவ்வொரு முஸ்லிமும் பாதுகாப்பான சூழலில் சகல வசதிகளையும் பெற்றவர்களாக மனநிறைவோடு தங்களது இறைவணக்கங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில் சவுதி மிகுந்த அர்ப்பணிப்போடு உறுதியாக செயல்பட்டு வருகிறது. இதன் விளைவாக உலகையே வியப்பில் ஆழ்த்துகின்ற அளவுக்கு யாத்திரிகர்களுக்கு தங்களது சேவைகளை செய்து கொடுத்து வருகிறது.

இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலன் என்ற பெயரை சவுதியை ஆட்சி செய்கின்ற ஒவ்வொரு மன்னரும் பெற்றுக் கொள்கின்றனர்.

இதை மக்களுக்கு சேவை செய்யும் ஒரு பதவிப் பெயராக அவர்கள் பயன்படுத்துகின்றனர். இரு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் என்ற பெயர் உண்மையில் மிகச்சிறந்த பெயர். அந்த நாட்டை ஆளும் மன்னர்கள இப்பெயரைப் பெற்றுக்கொள்கின்றனர்.

சவுதி அரேபியாவை ஆட்சி செய்யும் அனைத்து மன்னர்களும் குறிப்பாக மன்னர் அப்துல் அஸீஸ் தொடக்கம் தற்போதைய ஆட்சியாளர்கள் சல்மான் மற்றும் முஹம்மத் பின் சல்மான் வரைக்கும் ஹஜ், உம்ராவை நிறைவேற்ற வரும் யாத்திரிகர்களுக்கு பெரும் அர்ப்பணிப்புக்களுடன் உச்சளவில் சேவையாற்றி வருவதை அனைவரும் அறிவர்.

உண்மையில் இது பெரிதும் பாராட்டப்பட வேண்டிய விடயம் மாத்திரமல்லாமல் அவர்களுக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டிய விடயமும் ஆகும். இவர்கள் அளித்துவரும் சேவைகளையிட்டு முழு உலகமும் வியந்து பார்க்கிறது என்றால் அவர்கள் ஆற்றுகின்ற சேவைகள் எவ்வளவு அளப்பரியது என்பதை எவராலும் இலகுவாகப் புரிந்து கொள்ளலாம்.

அந்த வகையில் 2024ஆம் ஆண்டு ரமழான் மாதத்தில் குறிப்பாக இம்மாதத்தின் கடைசிப் பத்து நாட்களிலும் அதிலும் குறிப்பாக 27ஆம் நோன்பின் நிமித்தம் 35 இலட்சம் (மூன்றரை மில்லியன்) யாத்திரிகர்கள் மக்கா, மதீனாவில் உம்ராவுக்காக கூடினார்கள். அவ்வளவு தொகை யாத்திரிகர்களுக்கும் எதுவித குறைபாடுகளும் இன்றி அனைத்து வசதிகளையும் சவுதி செய்து கொடுத்துள்ளது. இது மாபெரும் சாதனையாகும்.

சவுதி மன்னர், இளவரசர், இஸ்லாமிய விவகார அமைச்சர், ஹஜ் உம்ரா விவகார அமைச்சர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர், வெளிவிவகார அமைச்சர் உட்பட சவுதியின் அனைத்துப் பாதுகாப்புப் படையினர், இரு புனித ஹரம் ஷரீபுகளின் பொறுப்பாளர்கள், அதே போன்று சவுதி அரேபியாவின் வெளிநாட்டு தூதுவர்கள் என அனைத்து தரப்பினரும் ஹஜ், உம்ராவுக்காக வருகின்றவர்களுக்கு தம்மாலான பங்களிப்புக்களை உச்சளவில் நல்கி சேவையாற்றுகின்றனர்.

பொதுவாக ரமழானின் கடைசிப் பத்து நாட்களிலும் குறிப்பாக 27,28,29 ஆகிய இரவுகளிலும் முஸ்லிம்கள் அதிக ஆர்வத்துடனும் ஈடுபாட்டுடனும் இறைவணக்கங்களில் ஈடுபடுவது வழமையானதாகும். அதிலும் மக்கா, மதீனா என்பது அதைவிட பல மடங்கு விஷேடமானதாகும். அந்த வகையில் மக்கா, மதீனாவில் கூடிய 35 இலட்சம் யாத்திரிகர்களுக்கும் உச்சபட்ச சேவை அளித்திருக்கிறது சவுதி என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

சாதாரணமாக சில ஆயிரம் பேரை வைத்து ஒரு கூட்டம் நடத்துவதே சிரமங்கள் நிறைந்த காரியமாகும். அப்படியிருக்கையில் உலகின் பல பிராந்தியங்களையும் சேர்ந்த, பல மொழிகள் பேசும், பல கலாசாரங்களைக் கொண்ட யாத்திரிகர்கள் ஒரிடத்தில் கூடும் போது எவ்வாறு இருக்கும் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. இருப்பினும் அனைத்து யாத்திரிகர்களும் எவ்வித சிரமங்கள் குறைபாடுகளுமின்றி அமைதியான சூழலில் முழுமையான பாதுகாப்புடன் தங்களது இறை வணக்கங்களை மன நிறைவோடு மேற்கொள்ள வசதி அளிக்கிறது சவுதி.

அந்த வகையில் சவுதி ஆட்சியாளர்கள் பெரும் பாராட்டுக்குரியவர்களாவர். அத்தோடு சவுதியின் பாதுகாப்பு படையினரும் அதிக பாராட்டுக்குரியவர்கள் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆட்சியாளர்களின் கட்டளைகள், வழிகாட்டல்களுக்கு அமைய தம் சேவைகளை இரவு பகல் பாராது அர்ப்பணிப்புக்களுடன் அவர்கள் செய்து வருகின்றனர். அவர்களுக்கு இறையருள் கிடைத்திட பிரார்த்திப்பது எமது கடமையாகும்.

இவை இவ்வாறிருக்க, சவுதியின் ஆட்சியாளர்களும் குறிப்பாக அனைத்து பொறுப்பாளர்களும் ரமழானுடைய கடைசி பத்து நாட்களிலும், ஹஜ் உடைய காலங்களிலும் மக்கா, மதீனாவில் இருந்து யாத்திரியர்களுக்கான சேவைகளை நேரடியாகவே கண்காணித்து தேவையான உதவி ஒத்துழைப்புக்களை நல்கிவருவது வழமையாகும். இந்த நடைமுறை சவுதியை நிறுவிய மன்னர் அப்துல் அஜீஸ் (ரஹ்) காலம் முதல் இன்று வரைக்கும் நீடித்து வருகிறது. அந்த வகையில் மன்னர் சல்மானும் இளவரசர் முஹம்மது பின் சல்மானும் ஏனைய அரச அமைச்சர்களும் அரச ஊழியர்களும் அரச இயந்திரங்களும் புனித மக்காவில் முகாமிட்டு யாத்திரிகர்களுக்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் இம்முறையும் செய்து கொடுத்துள்ளார்கள். குறிப்பாக இளவரசர் முஹம்மத் பின் சல்மான் நேரடியாகவே களத்தில் இருந்து சேவைகளை முன்னெடுத்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

பொதுவாக சவுதியின் வரலாற்றை நோக்கும் போது மன்னர் அப்துல் அஸீஸுடைய காலம் முதல் இன்று வரைக்கும் ரமழானுடைய காலங்களிலும் ஹஜ் காலங்களிலும் உம்ரா, ஹஜ் கடமைகள் நிறைவேற்ற வெளிநாடுகளில் இருந்துவரும் முக்கியஸ்தர்கள், அமைச்சர்கள் மற்றும் முஸ்லிம் தலைவர்களை சவுதி ஆட்சியாளர்கள் சந்தித்து உலக முஸ்லிம்களுடைய விவகாரங்கள் குறித்து கலந்துரையாடி அவர்களுக்கு தங்களால் என்னென்ன செய்யலாம் என்ற அடிப்படையில் கவனம் செலுத்தி தங்களால் முடிந்த மனிதாபிமான சேவைகளை முன்னெடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் இம்முறையும் கூட பாகிஸ்தான் பிரதமர், சோமாலியா ஜனாதிபதி, பஹ்ரைன் மன்னர் உள்ளிட்ட உலகின் பல நாடுகளது தலைவர்களையும் முக்கியஸ்தர்களையும் இளவரசர் புனித மக்காவில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்நாடுகளுக்கு தம்மாலான மனிதாபிமான உதவிகளை வழங்கவும் சவுதி முன்வந்திருக்கிறது.

எனவே புனித மக்கா, மதீனாவையும் ஹஜ், உம்ரா விடயங்களைக் கவனிப்பதிலும் அங்குள்ள புனிதஸ்தலங்களை நிர்வாகிப்பதிலும் சவுதி அரேபியாவை ஆட்சி செய்வதிலும் உலக முஸ்லிம்களுக்கு தலைமை தாங்குவதிலும் சங்கைக்குரிய ஆல் ஸஊத் பரம்பரை தான் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என்பதே அனைத்து முஸ்லிம்களதும் எமதும் விருப்பமாகும்.

குறிப்பாக புனித மக்கா, மதீனா மற்றும் ஏனைய புனிதஸ்தலங்கள் எப்போதும் அவர்களது நிர்வகிப்பில் இருக்க வேண்டும் என்பது தான் அனைவருடையதும் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆல் ஸஊத் பரம்பரையினர் மக்கா, மதீனா மற்றும் புனிதஸ்தலங்களை தற்போதைப் போன்றே தொடர்ந்தும் சிறப்பாக தலைமை தாங்கி சேவை செய்ய வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பும் பிரார்த்தனையும் ஆகும். அதுவே உலக முஸ்லிம்களுக்கும் எமக்கும் பெருமை.

அஷ்ஷைக் எம்.எச்.
ஷேஹுத்தீன் மதனி
பணிப்பாளர், அல் ஹிக்மா நிறுவனம்,

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT