Tuesday, May 14, 2024
Home » யாழ். பல்கலை மாணவர்களின் ஆவண படங்கள் வெளியீடு

யாழ். பல்கலை மாணவர்களின் ஆவண படங்கள் வெளியீடு

by Prashahini
April 9, 2024 3:50 pm 0 comment

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறை மாணவர்களால் தயாரிக்கப்பட்ட மக்களின் வாழ்வியலைச் சித்திரிக்கும் 10 ஆவணப்படங்கள் இன்று (09) யாழ். பல்கலைக்கழகக் கைலாசபதி கலையரங்கில் திரையிடப்பட்டன.

தமிழரின் பாரம்பரியமாக விளங்கும் தவில் இசைக்கருவியின் உருவாக்கமும் ,நுட்பமும் பற்றிய பதிவான ‘தவில் கொட்டு’, காரைநகரின் ஊரி கிராமப் பெண்கள் தமது சொந்தக் கால்களில் நின்று மீன்பிடித் தொழிலாற்றுவது பற்றிப் பேசும் ‘அலைமகள்’, தீயில் எரிந்து போன லயன் குடியிருப்புகளுக்குப் பதிலாக மாற்று வீடுகள் கிடைக்கும் எனக் காத்திருக்கும் மலையக மக்களின் துன்பங்களைப் பதிவுசெய்யும் ‘தணல்’, மட்டக்களப்பிலுள்ள வேப்பவெட்டுவானில் செங்கல் கைத்தொழில் தயாரிப்பு மற்றும் அது தொடர்பான பிரச்சினைகளை எடுத்துக்காட்டும்; ‘கல்வாடி’, மலையகப் பெண்கள் மாதவிடாய்க் காலங்களிலும் மலைகளில் ஏறிக் கொழுந்து பறிப்பதில்; எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி பேசும் ‘கசிவு’, தற்சார்பு வாழ்க்கைமுறை ஊக்குவிப்புப் பற்றிச் சிலாகிக்கும் ‘உயிர்மை’, தமிழர் கட்டடமரபின் பொக்கிஷங்களில் ஒன்றைக் கால ஆவணப்படுத்தும் ‘நாற்சார் வீடுகள்’, கண்ணிவெடி அகற்றும் பணியாளர்களின் பணிச்சுமைகளை வெளிக்காட்டும்; ‘காவலின் காயங்கள்’, மலையக மக்களின் நில உரிமை பற்றிய சவால்களைப் பேசும் ‘நிலம்’, வயல்வெளிகளில் இராக்காவல் காக்கும் விவசாயிகளின் வாழ்வியலைப் பதிவுசெய்த ‘உறங்கா விழிகள்’ ஆகிய ஆவணப்படங்கள் திரையிடப்பட்டன

இந்த ஆவணப்படங்கள் ஊடகக் கற்கைகள் மாணவர்களின் எண்மியக் கதைசொல்லல் கற்றலின் பெறுதிகளாக அமைவதும், வருடந்தோறும் ஆவணப்படத் திரையிடலை ஊடகக் கற்கைகள் துறை தொடர்ச்சியாக மேற்கொண்டுவருவதும் குறிப்பிடத்தக்கது.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT