Saturday, May 11, 2024
Home » 2 ஆண்டுகளில் இலங்கை கால்பந்து அணிக்கு முதல் சர்வதேச வெற்றி

2 ஆண்டுகளில் இலங்கை கால்பந்து அணிக்கு முதல் சர்வதேச வெற்றி

ஓய்வு பெற்றார் மொஹமட் பஸால்

by mahesh
March 27, 2024 6:00 am 0 comment

சர்வதேச கால்பந்து சம்மேளத்தினால் முதல் முறை நடத்தப்படும் பிஃபா தொடரில் பூட்டானுக்கு எதிராக நேற்று முன்தினம் (25) நடைபெற்ற போட்டியில் இலங்கை அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

கொழும்பு, குதிரைப்பந்தய திடல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் புகுத்த தவறின. எவ்வாறாயினும் இரண்டாவது பாதி ஆரம்பித்த நிலையில் இலங்கைக்காக தனது முதல் கோலை பெற டிலோன் டி சில்வாவினால் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து இலங்கை சார்பில் இரண்டாவது கோலை ஒலிவர் ஜேம்ஸ் புகுத்தி இலங்கை அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

குறிப்பாக இரண்டாவது பாதி முழுவதும் இலங்கை அணி போட்டியில் ஆதிக்கத்தை முழுமையாக தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. பூட்டான் கோல் கம்பத்தை பல முறை ஆக்கிரமித்த இலங்கை அணி மேலும் கோல் புகுத்தும் வாய்ப்புகளை தவறவிட்டது. எவ்வாறாயினும் ஆட்ட நேர முடிவின்போதும் இலங்கை அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற முடிந்தது.

இது இலங்கை கால்பந்து அணி இரண்டு ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் சர்வதேச கால்பந்து போட்டி ஒன்றில் பெறும் முதல் வெற்றியாகும். இதற்கு முன் 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நான்கு நாடுகள் கால்பந்து தொடரில் பங்களாதேஷுக்கு எதிராக 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியதன் பின் இலங்கை அணி பெறும் முதல் வெற்றி இதுவாகும். அதேபோன்று இலங்கை அணி பூட்டானுக்கு எதிரான கால்பந்து போட்டி ஒன்றில் வெற்றியீட்டியது பத்து ஆண்டுகளில் இது முதல் முறையாகும்.

இந்தப் போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி சர்வதேச கால்பந்து தரப்படுத்தலில் 204 ஆவது இடத்தில் இருப்பதோடு, இலங்கையிடம் தோல்வியை சந்தித்த பூட்டான் தரப்படுத்தலில் 184 ஆவது இடத்தில் உள்ளது.

இதேவேளை இந்தப் போட்டியுடன் தனது 16 ஆண்டு சர்வதேச கால்பந்து வாழ்வில் இருந்து ஓய்வுபெற முன்னாள் இலங்கை அணித் தலைவர் மொஹமட் பஸால் தீர்மானித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டு இலங்கை கால்பந்து அணிக்காக முதல் முறை களமிறங்கிய பஸால் இலங்கைக்காக 53 சர்வதேச போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.

அதேபோன்று 2018–19 காலப்பகுதியில் அவர் இலங்கை கால்பந்து அணியின் தலைவராகவும் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. போட்டி முடிவுக்கு பின்னர் அவருக்கு பிரியாவிடை நிகழ்வு இடம்பெற்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT