Wednesday, May 8, 2024
Home » சர்ச்சைகளை தூண்டாமல் என்றும் நிதானமான பயணத்தில் தினகரன்

சர்ச்சைகளை தூண்டாமல் என்றும் நிதானமான பயணத்தில் தினகரன்

by damith
March 18, 2024 8:12 am 0 comment

நாட்டின் தேசிய நாளிதழான தினகரனின் வரலாறு 92 வருடங்களைத் தொட்டு நிற்கும் இந்நாளில், இப்பத்திரிகையின் பயணம் எவ்வாறு அமைகிறது என்பதை சமூகநோக்கில் ஆராய்வது அவசியம். வாசகர்கள் மத்தியில் இது பற்றிய புரிதல்கள் இருப்பது அவசியம்.

தார்மீகப் பொறுப்புடன் சகலரையும் ஒரே குடும்பத்தினர் என்ற கோணத்தில் தினகரன் நோக்குகிறது. ஊடக தர்மத்தின் குறிக்கோள்களை உயிரூட்டி வளர்க்கும் தினக ரின் பணிகளுக்கு வாசகர்களின் ஒத்துழைப்புக்களே உற்சாகமாக அமைகின்றன.

பல்லின சமூகங்கள், பல்வேறு சமயங்கள் மற்றும் கலாசார நம்பிக்கைகள் உள்ள மக்கள் வாழும் நாடு இலங்கை.இம்மக்களின் நம்பிக்கைகளைப் பாதுகாக்கும் பணிகளை தினகரன் நேர்த்தியுடன் செய்கிறது. தினகரன் பத்திரிகையின் 92 வருடப் பயணங்களை பின்னோக்கிப் பார்ப்போர் இதைப் புரிந்து கொள்வர்.

அபிமான வாசகர்களாலும், தினகரனின் கடந்த காலச் செய்திகளை வாசித்து உணர்வோராலும் இந்த உண்மையை உணர முடியும்.

திறமையான ஆசிரியர்களுடன், பொறுப்புமிக்க ஊழியர்கள் பத்திரிகையின் உன்னத நோக்கை உயிரூட்டுவதற்கு உழைப்பதும் தினகரனின் சமூக நோக்கிலான பயணம் வெற்றியளிக்கப் பங்களித்துள்ளது.

பத்திரிகையின் ஆரம்பத்தில் கட்டமைக்கப்பட்ட சமூக நோக்கிலான பத்திரிகையின் பார்வை, இன்றளவும் அதே இலக்கில் உச்சந்தொட உழைத்துக் கொண்டிருக்கிறது. கல்வி, கலாசார மற்றும் சமூக முன்னோடிச் செயற்பாடுகள் தொடர்பில் விசேட கட்டுரைகள், ஆசிரியர் தலைப்புச் செய்திகள் மற்றும் முன்பக்கச் செய்திகள் என செய்திகளைப் பிரசுரித்து, பிரபல்யப்படுத்தி சமூகங்களை விழிப்பூட்டுவதுடன், இத்தகைய எழுத்தாளர்களுக்கும் சிறந்த இடமும்,களமும் இங்கு வழங்கப்படுகின்றன.

இது தொடர்பில், சுவாரஸ்யங்கள் அடங்கிய கட்டுரைகள் ஆக்கங்களை கால, நேரங்கள் கருதி பொருத்தமான சூழலில் வெளியிடுகிறது தினகரன் பத்திரிகை. இதனால், பல அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டும், இன்னும் சில உடன் நிறுத்தப்பட்டும் உள்ளன. போட்டி மனநிலையில் சகலதும் வர்த்தகமயமாகிப் போன இன்றைய உலகில், தினகரன் பத்திரிகை மாத்திரம் சமூக நோக்கிலேயே செயற்படுகிறது.

ஊடக தர்மத்திலிருந்து நெறி பிறழாமல் வாசகர்களை வழிப்படுத்துவதில் தினகரன் பத்திரிகைக்கு தனியிடமுண்டு. பத்திரிகை உலகில் தினகரனின் வகிபாகம் தனித்துவமாக உள்ளமைக்கு காலவோட்டம் கருதிய இதன் கடமைப்பாடுகள், செயற்பாடுகள் களம் அமைத்துள்ளன.

மத நம்பிக்கைகளை அவமதித்தல், சமூகங்களை சீண்டி விடுதல், அரசியலுக்காக மக்களை பிளவுபடுத்தல் மற்றும் கட்சிசார் நிலைப்பாடுகளை ஊக்குவித்தல் போன்ற பக்கச்சார்பான செயற்பாடுகளிலிருந்து விடுபட்டுச் செயற்படுவதால், பலரும் தினகரனின் நம்பகத்தன்மையில் திருப்தியுடன் உள்ளனர்.

தவிர்க்கப்பட வேண்டியவை, தணிக்கைக்கு உட்பட வேண்டியவை மற்றும் தெளிவாக வாசகர்களிடம் சென்றடைய வேண்டியவை என்றெல்லாம் செய்திகளைத் தரம் பிரித்து பொறுப்புடன் செயற்படுவதால்தான், வாசகர்களின் நம்பிக்கையை தினகரன் வென்றுள்ளது. உள்ளதை, உள்ளவாறு வாசகர்களுக்கு எடுத்துச் சொல்வதிலும் ஒரு பக்குவம், நிதானத்தைப் பேணுவதற்கு தினகரன் தவறுவதில்லை.

வெளியிடப்போகும் செய்திகளால் வரவுள்ள விபரீதங்கள் கருதி, சில செய்திகள் சிலேடையாக அல்லது மேலெழுந்தவாரியாக பிரசுரிக்கப்படுவதுண்டு. இதனால்,அரச சார்புப் பத்திரிகை என்ற சாயலுக்குள் இப்பத்திரிகை சிலரால் நோக்கப்படுகிறது .

வியாபாரப் போட்டிகளால் எழும் வேறுபாடுகளால் ஒரு சிலர், இச்சாயத்தை பூசி விடுகின்றனர். நாட்டை அமைதியாக வழிநடத்துவதில் அரசாங்கத்துக்கு எந்தளவு பொறுப்புள்ளதோ, அதேயளவு பொறுப்புடன் செயற்பட வேண்டிய கடமைப்பாடு தேசிய பத்திரிகையான தினகரனுக்கு உள்ளதை வாசகர்கள் மறத்தலாகாது.

பொறுப்புள்ள அரசாங்கப் பத்திரிகையாகச் செயற்படும் தினகரன் தனியே அரசியல் சார்பு நிலையுடன் செயற்படவில்லை. ஆட்சி மாற்றங்களுக்கு ஏற்ப பத்திரிகையின் போக்கு மாற நேரிட்டாலும், சமூக நோக்கிலிருந்து விடுபடும் தேவைகள் எமக்கு எழுவதில்லை. அரசாங்கத்தின் சமூக நலன் சார்ந்த விடயங்களை பிரதானப்படுத்தியே பத்திரிகை செயற்படுகிறது. சில வேளைகளில், ஜனாதிபதி ஒரு கட்சியைச் சேர்ந்தவராகவும் அரசாங்கம் வேறு கட்சியாகவும் இருந்த சந்தர்ப்பங்களிலும் சமநிலை மற்றும் நடுநிலை பேணப்பட்டே வருகிறது.

சில நேரங்களில், தீர்மானம் எடுப்பது கூட சங்கடமாகத் தோன்றிய காலங்களையும் இப்பத்திரிகை கடந்து வந்துள்ளது. சாமர்த்தியமான ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களின் கடந்தகால அனுபவங்களின் அடிப்படையிலேயே, தர்மசங்கடமான கட்டங்களில் தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. இந்த அனுபவங்களின் பதிவுகளுடன் இன்றும் சில ஊழியர்கள் இங்கு பணியாற்றுவதைக் குறிப்பிட வேண்டும்.

வெளியாரின் அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாது சமூக நோக்கிலான பயணத்தை முன்னெடுப்பதில், தினகரன் ஆசிரியர் குழாம் எடுக்கும் முயற்சிகளே போதுமானவை.

கடந்த 92 வருடங்களில் எதிர்கொண்டதை விடவும் இன்னும் பல மடங்கு சவால்களை இப்பத்திரிகை எதிர்நோக்கவுள்ளது. விஞ்ஞானம்,தொழினுட்பங்களின் அதீத வளர்ச்சி, உள்ளங்கையில் உலகை பார்ப்பதைப் போன்ற பிரமை ஏற்பட்டுள்ள யுகமிது. இதனால், பத்திரிகைகளுடன் மட்டுமல்ல சமூகவலைத்தளங்களிலிருந்தும் சவால்கள் வரவுள்ளன.

ஏற்கனவே வந்த இவ்வாறான சவால்களை சமாளிப்பதில் சில நடைமுறைச் சிரமங்களை எதிர்கொள்ள நேர்ந்ததையும் வாசகர்களின் புரிதலுக்கு விடுகிறோம். இந்நிலையில், பத்திரிகையின் எதிர்கால பயணத்தில் சந்திக்க நேரும் சவால்களை வெல்வதற்கான வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளன. நம்பிக்கையான, நடுநிலையான பத்திரிகை என்ற நற்பெயரின் அடித்தளத்திலிருந்தே, இந்த சவால்கள் தகர்க்கப்படவுள்ளன.

ஏ.ஜி.எம். தெளபீக் தினகரன் ஆசிரியபீடம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT