Thursday, May 9, 2024
Home » வெடுக்குநாறி ஆலய சம்பவம்; கைதான 8 பேருக்கும் விளக்கமறியல்

வெடுக்குநாறி ஆலய சம்பவம்; கைதான 8 பேருக்கும் விளக்கமறியல்

- வரட்சியான நேரத்தில் யாகத்தால் காட்டில் தீ ஏற்பட வாய்ப்பு

by Rizwan Segu Mohideen
March 9, 2024 8:16 pm 0 comment

– நீதிமன்ற உத்தரவை மீறியதாகவும் பொலிஸார் தெரிவிப்பு

நெடுங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வவுனியா வடக்கு, வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் நேற்றிரவு (08) இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட 8 பேருக்கும் விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

வவுனியா வடக்கு, வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் மார்ச் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வவுனியா நீதிமன்று இன்று (09) உத்தரவிட்டுள்ளது.

சிவராத்திரி தினத்தன்று வவுனியா வடக்கு வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலயத்தில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்ற போது ஆலயத்திற்குள் நுழைந்த பொலிசார் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரை கைது செய்திருந்தனர்.

குறித்த 8 பேரையும் வவுனியா நீதவான் நீதிமன்றில் நெடுங்கேணி பொலிசார் இன்று (09) மாலை முன்னிலைப்படுத்தினர். இதன்போது ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் சார்பாக சட்டத்தரணிகளான க.சுகாஸ், தி. திருஅருள், அ. திலீப்குமார் உள்ளிட்ட குழுவினர் மன்றில் ஆஜராகியிருந்தனர்.

வெடுக்குநாறி ஆலயத்தில் கைது செய்யப்பட்ட 8 பேரையும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டது. குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைகள் இடம்பெறுவதால் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளமை தொடபில் மன்றுக்கு தெரிவித்தமையால் சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துவதற்காகவும் திகதியிடப்பட்டது எனத் தெரிவித்தார்.

குறித்த வழக்கு விசாரணை இடம்பெற்ற போது நீதிமன்றம் முன்பாக வேலன்சுவாமிகள், ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நேற்றையதினம் (08) இடம்பெற்ற குறித்த சம்பவத்தின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிஸார் அங்கிருந்து வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி உற்சவம் நடைபெற்ற வேளையில், மாலை ஆறு மணியுடன் அனைத்து வழிபாடுகளையும் முடிவுக்கு கொண்டு வருமாறும், பொலிஸாரின் கட்டளையை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள் என பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இருப்பினும் ஆலய நிர்வாகத்தினர் பூஜை நிகழ்வுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வந்த நிலையில் அன்னதானம், பொங்கல் மற்றும் பூஜை பொருட்களை என சுமார் 10 இலட்சம் பெறுமதியான பொருட்களை பொலிஸார் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து பூஜை வழிபாடுகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டு, அங்கு குவிக்கப்பட்ட கலகம் அடக்கும் பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் ஆலயத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இதில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனையும் பொலிசார் கைது செய்ய முயன்ற நிலையில், அவர் பாராளுமன்ற உறுப்பினர் என தெரியவந்ததையடுத்து தூக்கிச் சென்று ஆலய முன்றலில் விட்டுச் சென்றனர்.

இதன்போது ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட வழிபாடுகளில் கலந்து கொண்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்னர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா விசேட நிருபர்


பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கை
இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளதாவது,

நீதிமன்றத்தில்‌ தற்போது வழக்கு விசாரணைகள்‌ நிலுவையிலுள்ள போதிலும்‌ நெடுங்கேணி பொலிஸ்‌ பிரிவில்‌ உள்ள வெடுக்குநாறி மலையில்‌ தொல்பொருள்‌ நிலையப்‌ பிரதேசத்இனுள்‌ சிவராத்திரி பூஜையை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டும்‌ என தொல்பொருள்‌ பிரதேசத்தில்‌ உள்ள இந்து ஆலய பூசகர்‌ உள்ளிட்ட குழுவினர்களினால்‌ வவுனியா நீதவான நீதிமன்றத்தில்‌ இலக்கம்‌ B 540/23 இன்‌ கீழ்‌ மனுதாக்கல்‌ செய்யப்பட்டு அனுமதி கோரப்பட்ட போதிலும்‌, அவ்வாறான விஷேட பூஜைகள்‌ நடாத்துவதற்கு அனுமதி வழங்க முடியாது என நீதிமன்றம்‌ கடந்த 2024 மார்ச் 04 ஆம்‌ திகதியன்று தீர்ப்பு வழங்கியது.

மேலும்‌, தொல்லியல்‌ பிரதேசத்தில்‌ பகல்‌ நேரத்தில்‌ சாதாரணமாக. நடாத்தப்படும்‌ வழிபாட்டு பூஜைகளுக்கு மேலதிகமாக விஷேட பூஜைகள்‌ நடாத்துவதை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்‌ என 2024 மார்ச் 06ஆம்‌ திகதி தொல்பொருள்‌ பதில்‌ பணிப்பாளரினால்‌ வட மாகாண சிரேஷ்ட பொலிஸ்‌ மா அதிபரிடம்‌ விடுக்கப்பட்ட கோரிக்கையின்‌ பிரகாரம்‌ நேற்று (08) சட்டம்‌ மற்றும்‌ ஒழுங்கை பாதுகாப்பதற்காக பொலிஸ்‌ உத்தியோகத்தர்கள், தொல்லியல்‌ பிரதேசத்தில்‌ பணியில்‌ அமர்த்தப்பட்டனர்.

எவ்வாறாயினும்‌, தொல்லியல்‌ பிரதேசத்தில்‌ மஹா சிவராத்தரி தினத்தன்று 500 இற்கும்‌ மேற்பட்ட பொதுமக்கள்‌ வருகை தந்து சாதாரணமாக பூஜை வழிபாடுகள்‌ செய்தனர்‌. இரவு நேரத்தில்‌ தொல்லியல்‌ பிரதேசத்தில்‌ பூசகர்கள்‌ மற்றும்‌ 40 பேரை கொண்ட குழுக்களால்‌ நீதிமன்ற தீர்ப்பையும்‌ மீறி தொல்பொருள்‌ இணைக்களம்‌ அல்லது வனப்‌ பாதுகாப்பு இணைக்களத்தின்‌ அனுமதியின்றி நேற்று (08) இரவு நேரத்தில்‌ யாகம்‌ செய்து விஷேட சிவராத்திரி பூஜைகள்‌ நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இரவு கடமையிலிருந்த பொலிஸ்‌ உத்தியோகத்தர்களால்‌ அவ்வாறு செய்ய வேண்டாம்‌ என தெரிவித்தபோதிலும்‌ அவர்கள்‌ அதனையும்‌ மீறி தொடர்ந்து செயற்பட்டதுடன்‌, நீதிமன்ற தீர்ப்பையும்‌ மீறி நாட்டில்‌ நிலவும்‌ வரட்சியான காலநிலை காரணமாக வனப்‌ பிரதேசத்தினுள்‌ யாக பூஜைகள்‌ நடாத்துவதன ஊடாக வனப்‌ பிரதேசத்தில்‌ தீ ஏற்பட்டு, அழிவடைவதற்கான சந்தர்ப்பம்‌ உள்ளதால்‌ வனப் பிரதேசத்தில்‌ அத்துமீறி பிரவேசித்தமை மற்றும்‌ சட்ட முரணற்ற வகையில்‌ ஒன்று கூடிய மக்கள்‌ கூட்டத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ எனும்‌ குற்றத்தின்‌ கீழ்‌ பிரதான பூசகருடன்‌ 08 பேரை பொலிஸார்‌ கைது செய்துள்ளனர்‌.

அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் நெடுங்கேணி, புளியங்குளம், கனகராயன்குளம், மாமடுவை ஆகிய பிரதேசத்தில் வசிக்கும் 24, 29, 30, 34, 37 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Vedukkunari-Temple-8-Suspects-Arrested-2024.03.09

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT