Wednesday, May 8, 2024
Home » பங்களாதேஷ் ரி20 தொடர்: ஹசரங்க, நிஸ்ஸங்க இன்றி இலங்கை இன்று முதல் போட்டியில்

பங்களாதேஷ் ரி20 தொடர்: ஹசரங்க, நிஸ்ஸங்க இன்றி இலங்கை இன்று முதல் போட்டியில்

by Rizwan Segu Mohideen
March 4, 2024 8:09 am 0 comment

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ரி20 தொடரின் முதல் போட்டி இன்று (04) பி.ப. 5.30 மணிக்கு சில்ஹட்டில் நடைபெறவுள்ளது.

முழுமையான கிரிக்கெட் சுற்றுப்பயணம் ஒன்றாகவே இலங்கை அணி பங்களாதேஷ் பயணித்துள்ளது. இதில் ஆரம்பத்தில் மூன்று ரி20 போட்டிகளில் ஆடும் இலங்கை அணி தொடர்ந்து மூன்று ஒருநாள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. எனினும் எதிர்வரும் ஜூன் மாதத்தில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்காவில் ரி20 உலகக் கிண்ணப் போட்டி நடைபெறவுள்ள நிலையில் அதற்கு முன் இலங்கை அணி ஆடும் கடைசி ரி20 தொடர் இதுவென்பதால் முக்கியமானதாக உள்ளது.

சர்வ மத ஆசியின் பின் இலங்கை அணி பங்களாதேஷ் பயணம்

ரி20 அணித் தலைவர் வனிந்து ஹசரங்க இலங்கை அணியுடன் பங்களாதேஷ் சென்றபோதும் போட்டித் தடை காரணமாக முதல் இரு ரி20 போட்டிகளிலும் ஆடவில்லை. இதனால் உப தலைவர் சரித் அசலங்க அணித்தலைவராக செயற்படவுள்ளார். எனினும் ஹசரங்க மூன்றாவது போட்டியில் களமிறங்க எதிர்பார்த்துள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அண்மையில் நடந்த ரி20 தொடரில் ஹசரங்கவின் சகலதுறை ஆட்டமே இலங்கை அணி தொடரைக் கைப்பற்ற உதவியது. இந்நிலையில் அவர் இல்லாதது அணிக்கு பெரும் இழப்பாக அமையும்.

ஹசரங்கவின் இடைவெளியை நிரப்பும் வகையில் ஜெப்ரி வன்டர்சேவை ரி20 குழாத்துக்கு தேர்வுக் குழுவினர் அழைத்துள்ளனர். வன்டர்சே கடைசியாக இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே ரி20 சர்வதேச போட்டி ஒன்றில் ஆடினார். அதேபோன்று முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களாக அகில தனஞ்சய மற்றும் மஹீஷ் தீக்ஷன இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளது.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடரில் சோபித்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பத்தும் நிஸ்ஸங்கவும் பங்களாதேஷுக்கு எதிரான ரி20 தொடரில் காயம் காரணமாக இடம்பெறவில்லை என்பதோடு அவருக்கு பதில் அணியில் இடம்பெற்றிருக்கும் அவிஷ்க பெர்னாண்டோ இன்றைய போட்டியில் களமிறங்க வாய்ப்பு உள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் சோபித்த அவிஷ்க இலங்கைக்காக கடந்த ஓர் ஆண்டுகளில் ரி20 போட்டிகளில் ஆடியதில்லை. என்றாலும் அவர் ஆரம்ப வரிசையில் அதிரடியாக ஆடக் கூடியவராவார்.

ரி20 குழாத்தில் இடம்பெற்றிருந்த குசல் ஜனித் பெரேரா சுகவீனம் காரணமாக விலகிய நிலையில் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் திக்வெல்ல இடம்பெற்றுள்ளார். எனினும் இன்றைய போட்டியில் கமிந்து மெண்டிஸ் அழைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இலங்கை அணியின் பந்துவீச்சு வரிசையில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் துஷ்மன்த சமீரவும் உபாதை காரணமாக அணியில் இடம்பெறாத சூழலில் டில்ஷான் மதுஷங்க, பினுர பெர்னாண்டோ இன்று களமிறங்கலாம்.

மறுபுறம் பங்களாதேஷ் குழாத்தில் இடம்பெற்றிருந்த புதுமுக வீரர் அலிஸ் இஸ்லாம் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளார். நடந்து முடிந்த பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரிலேயே அவரது மர்மப்பந்து வீச்சு தேர்வாளர்களின் அவதானத்தை பெற்றது.

எனினும் தனது சொந்த மண்ணில் ஆடுவதால் பங்களாதேஷ் அணிக்கு மேலதிகமான சாதகத்தை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டி இலங்கை நேரப்படி மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT