Monday, April 29, 2024
Home » அரசாங்கத் துறையின் திறனை கட்டியெழுப்ப இலங்கை – இந்திய கூட்டாண்மை பேச்சு

அரசாங்கத் துறையின் திறனை கட்டியெழுப்ப இலங்கை – இந்திய கூட்டாண்மை பேச்சு

உடன்படிக்கைக்கு இரு தரப்பும் இணக்கம்

by gayan
February 12, 2024 9:00 am 0 comment

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நிர்வாக மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கையை விரைவில் உருவாக்க இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்துள்ளனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தும் வகையில், இலங்கையின் அரச துறையின் திறனை கட்டியெழுப்ப இந்திய- இலங்கை கூட்டாண்மை வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படியே இக்குழுவினர் இந்திய அதிகாரிகளை சந்தித்து பேசியுள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத்துறைச் செயலாளர் வி.ஸ்ரீனிவாஸ் மற்றும் பிரதமரின் செயலாளர் அநுர திஸாநாயக்க தலைமையில் நிர்வாக மற்றும் அரசாங்க அதிகாரிகளுக்கு இடையிலான ஒத்துழைப்புத் தொடர்பாக இரு தரப்பு பிரதிநிதிகள் மட்டக் கலந்துரையாடல் நேற்று புதுடில்லியில் நடைபெற்றது. இலங்கையின் சிரேஷ்ட மற்றும் நடுத்தர மட்டங்களைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டங்களை நல்லாட்சிக்கான தேசிய மையத்தின் (NCGG) உதவியுடன் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பாக இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவனத்துக்கும் நல்லாட்சிக்கான தேசிய மையத்துக்கும் இடையில் முன்மொழியப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வழிமுறைகள் தொடர்பாக இரு தரப்பினரும் கலந்துரையாடினர்.

இதன்போது இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தின் (SLIDA) பணிப்பாளர், அடுத்த ஐந்தாண்டுகளில் இலங்கை அதிகாரிகளுக்கான திறன்விருத்தி செயற்றிட்டம், பயிற்சி திட்டங்களை மேம்படுத்தல் மற்றும் ஒத்துழைப்பு, பல்வேறு உயர் மட்டங்களில் 1,000 அதிகாரிகளுக்கு கலப்பு முறையில் பயிற்சிகளை நடத்தல் ஆகிய விடயங்களை முன்வைத்தார்.

மேலும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்ட இந்திய அதிகாரிகள், நிர்வாக மறுசீரமைப்பில் தமது முக்கிய வகிபாகம், பொது நிர்வாகத்துக்கான பிரதமர் விருது திட்டத்தில் தகுதி அடிப்படையில் அங்கீகரித்தல், CPGRAMS இல் AI/ML ஐ பயன்படுத்துவதால் பொது குறைகளை திறம்பட நிவர்த்தி செய்வதன் மூலம் அக்குறைகளை கையாளுதல், ஒன்றிணைந்த சேவைத் தளங்கள், அவசியமான இ-சேவை மற்றும் இலத்திரனியல் கட்டமைப்பினதும் அவற்றின் பெறுபேறுகளினதும் வலுவாக்கல் போன்றவை மூலம் சேவை வழங்கலை மேம்படுத்தல் ஆகிய விடயங்களை முன்வைத்தனர்.

இலங்கையை சேர்ந்த பிரதிநிதிகள் குழுவில் தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் கலாநிதி தர்மஸ்ரீ குமாரதுங்க, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன, இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவக (SLIDA) பணிப்பாளர் நாயகம் நாலக களுவெவே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதேவேளை, இந்திய அரசாங்கத்தின் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறை தீர்ப்புத்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள், என்.பி.எஸ்.ராஜ்புத், புனித் யாதவ், ஜெயா துபே ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT