Thursday, May 2, 2024
Home » மக்களுக்காக பொதுநலம் கருதி செயற்பட முன்வர வேண்டும்
தமிழ் அரசியல்வாதிகள் சுயலாப நோக்கின்றி

மக்களுக்காக பொதுநலம் கருதி செயற்பட முன்வர வேண்டும்

- சபையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு

by mahesh
February 10, 2024 6:50 am 0 comment

தமிழ் அரசியல்வாதிகள் சுயலாப நோக்கில் செயற்படாமல் எமது மக்களுக்காக பொது இலாபம் என்ற ரீதியில் செயற்படுவதற்கு முன்வர வேண்டும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அரசாங்கத்தின் செயற்பாடுகளை எதிர்த்துக்கொண்டு தாங்கள் மட்டும் அரசாங்கத்தின் பின்பக்கக் கதவினால் சுய இலாபம் பெறுகின்றார்கள் என்பதை சபையில் சுட்டிக்காட்டிய அமைச்சர், அந்த வகையில் எமது மக்களுக்கான அரசாங்கத்தின் முன்பக்கக் கதவினை அடைத்துக் கொண்டு நிற்பது வேதனைக்குரியது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியின் கொள்கை பிரகடன உரை மீதான 2 ஆம் நாள் சபை ஒத்திவைப்பு வேளை விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இந்த நாட்டின் மீட்பர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்கள் பட்ட துன்ப துயரங்களையும் இனிமேல் அனுபவிக்கப் போகின்ற நன்மைகளையும் ஒரு வரலாற்று அறிக்கையாக தமது கொள்கைப் பிரகடன உரையில் முன்வைத்தார். நாடு பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து இன்னமும் முழுமையாக மீட்சி பெறவில்லை. முழுமையான மீட்சியை நோக்கி தற்போது முன்னேறிக் கொண்டிருக்கின்றது.

இதன்போது வலிகள், வேதனைகள் என்பன தவிர்க்க முடியாதவை. கரடு முரடான பாதையைக் கடக்க வேண்டுமென்றால் இவற்றையெல்லாம் எதிர்கொண்டாக வேண்டும். அந்த வகையில் இன்றும் எமது மக்களுக்கான வேதனைகள் இல்லாமலில்லை.

‘கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்’ என்ற அருணாசலக் கவிராயரின் பாடலைப் போல் எமது ஜனாதிபதியின் நிலைமை மட்டுமல்ல, எம் அனைவரதும் நிலைமை இவ்வாறுதான் இருந்து வருகிறது. நாம் பெற்ற கடனையும்அடைக்க வேண்டும். பெறுகின்ற கடன்களையும் அடைக்க வேண்டும் என்ற நிலையே காணப்படுகிறது. இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை மிக அதிகளவில் வலியுறுத்தி வருகின்றவர்களில் நாமும் உள்ளடக்கம். நல்லிணக்கத்தின் மூலமே எமது அன்றாட பிரச்சினை முதல் அரசியல் பிரச்சினை வரையில் அனைத்துப்

பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதில் நம்பிக்கை வைத்து இலங்கை – இந்திய ஒப்பந்தத்திற்குப் பின் நாம் தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்தோம். அந்த வகையில் எமது அனைத்துப் பிரச்சினைகளையும் சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளக்கூடியதொரு காலம் மீண்டும் கனிந்துள்ளதாகவே எனது அனுபவத்தில் நான் உணர்ந்து கொண்டுள்ளேன். அண்மையில் வடக்கு மாகாணத்திற்கு வருகை தந்திருந்த ஜனாதிபதிஎமது மக்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளைத் தீர்த்துவைப்பது தொடர்பில் காட்டிய அக்கறையினை நாம் மறந்துவிட முடியாது.

மாகாண சபைகளுக்கான அதிகாரப் பகிர்வு குறித்து அதீத அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றவர் அவர். நாட்டில் வாழுகின்ற அனைத்து இன,மத மக்களின் பிரச்சினைகள் குறித்தும் அவர் மிக நன்றாகவே அறிந்து வைத்திருப்பவர். சர்வதேச உறவுகள் தொடர்பில் இறுக்கமான பிணைப்பைக் கொண்டவர்.

பிரச்சினைகளை தீர விடாமல் வழி பார்த்துக் கொண்டு அதையே ஊதி, ஊதிப் பெருப்பித்துக் கொண்டிராமல்அவற்றை தீர்ப்பதற்கான வழிமுறைகள் இருக்கின்ற நிலையில் அவற்றைத் தீர்த்துக் கொள்வதற்காக முன்வர வேண்டும்.

போகின்ற வழி கடுமையானது. எனினும் போய்ச் சேர்கின்ற இடம் இனிமையானது. இதில் நாம் அனைவரும் பங்கேற்றால் நமக்கு நாமே விளக்காவது போல் இந்த நாடு நமக்கு விளக்காகும். இந்த வெளிச்சமான பயணத்தில் கறுப்புக் கொடிகளைக் காட்டி மீண்டும் இருளுக்கே வித்திடுவது வரலாற்றில் அவரவர் தத்தமக்கே கரி அள்ளிப் பூசிக்கொள்வது போன்ற செயலாகும்.

எமது மக்கள் நலன் கருதிய இலக்கானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலத்திலேயே நிறைவேற வேண்டும். அது எமது மக்களின் அன்றாடப் பிரச்சினைகளாக இருந்தாலும் சரி, அரசியல் தீர்வுப் பிரச்சினையாகஇருந்தாலும் சரி அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும்.

இந்த காலகட்டத்ததை நாம் தவற விடுவோமானால் மீளவும் இத்தகையதொரு பொன்னான காலத்தை நினைத்துப் பார்க்கவும் முடியாது. பல சாதனையை நிகழ்த்திக் காட்டி வருகின்ற ஜனாதிபதியால் எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முடியாது என்றில்லை.

அவருக்கு எமது அனைத்துத் தரப்பினரதும் ஒத்துழைப்புகள் முழுமையாக கிடைக்கின்ற சந்தர்ப்பத்தில் அவை சாத்தியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT