Sunday, May 12, 2024
Home » படகை கடத்தி 3 பேர் கொலை; 7 பேருக்கு மரண தண்டனை

படகை கடத்தி 3 பேர் கொலை; 7 பேருக்கு மரண தண்டனை

- 11 பேருக்கு எதிரான வழக்கில் மூவர் மரணம்; ஒருவர் விடுதலை

by Rizwan Segu Mohideen
January 24, 2024 2:12 pm 0 comment

மீன்பிடி படகொன்றை கடத்தி அதிலிருந்த 3 மீனவர்களை கொன்ற வழக்கில் 7 மீனவர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

கடந்த 2012 ஒக்டேபார் 15ஆம் திகதி இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய பட்ட பெந்திகே இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.

இலங்கைக் கடற்கரையில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டவர்களை ஏற்றிச் சென்ற ‘தேஜான்’ எனும் மீன்பிடிப் படகில் இருந்த 3 மீனவர்களைக் கொன்றமை, மேலும் சில மீனவர்களைக் கடுமையாக தாக்கி காயப்படுத்தியமை, படகை கடத்தி அவுஸ்திரேலியா செல்ல முற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து நீதவான் குறித்த தீர்ப்பை வழங்கினார்.

இதன்போது வழக்கின் 10ஆவது பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த நபரை அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுவிக்குமாறும் மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மரணதண்டனை விதிக்கப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளுக்கு மேலதிகமாக, ஏனைய ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் பிரதிவாதிகளுக்கு 29 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்த நீதிபதி, தலா ரூபா 20 இலட்சத்து 8 ஆயிரத்து 500 (ரூ. 2,008,500)அபராதத்தை செலுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மரண தண்டனைக்கு மேலதிகமாக விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் 11 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்ட மாஅதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இவ்வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

மூன்று பிரதிவாதிகள் வழக்கு விசாரணையின் போது மற்றும் விசாரணை ஆரம்பிக்கும் முன்னர் இறந்துவிட்டதால், 8 பிரதிவாதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு இடம்பெற்று வந்த நிலையில் இது தொர்பான தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT