Home » மலையகத்தில் கடும் பனிப்பொழிவினால் மக்கள் அவதி; மரக்கறிச் செய்கை பாதிப்பு

மலையகத்தில் கடும் பனிப்பொழிவினால் மக்கள் அவதி; மரக்கறிச் செய்கை பாதிப்பு

by mahesh
January 17, 2024 9:00 am 0 comment

மலையகத்தில் தொடர்ச்சியாகப் பெய்த கடும்மழை காரணமாக பசறை, படல்கும்புர பிரதேச செயலகத்திற்குட்பட்ட வரடோல கிராமத்தின் நீரேந்து பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இம்மண்சரிவு கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.

இதன் காரணமாக இப்பிரதேசத்தில் மூன்று தோட்ட வீடுகள் முற்றாக மண்மேடுகளால் மூடப்பட்டுள்ளன. இத்தோட்டத்தில்12 குடும்பங்கள் வசிக்கும் வரிசை வீடுகளும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுதவிர இப்பிரதேசத்தில் சுமார் 30 ஏக்கர் வயல் நிலம் மண்சரிவினால் தாழிறங்கியுள்ளதாகவும், அப்பகுதியில் அவ்வப்போது பெய்யும் மழையினால் கிராம மக்கள் இருப்பிடத்துக்குச் செல்ல தயங்குவதாகவும் படல்கும்புற பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட மக்களுக்குத் தேவையான நலன்புரி விடயங்களை மேற்கொண்டு வருவதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

மண்சரிவினால் இடம்பெயர்ந்த 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் வரதொல பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக மொனராகலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த மண்சரிவினால் 3 வீடுகள், பல காய்கறி தோட்டங்கள், பப்பாளி, பலா, வாழை, மிளகு உள்ளிட்ட விளை பொருட்கள், பல ஏக்கர் வயல் நிலங்கள் மண் மற்றும் கற்களால் மூடப்பட்டுள்ளதாக மொனராகலை அனர்த்த முகாமைத்துவ பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

சீரற்ற காலநிலை காரணமாக மலையகத்தின் ஊவா மாகாண தோட்டம் மற்றும் நகரப் பிரதேசங்களில் மழையுடன் கூடிய கடும் குளிரும் பனிப்பொழிவும் நிலவுவதால் தோட்டங்களில் வேலை செய்து வரும் தோட்டத் தொழிலாளிகளும் பாடசாலை செல்லும் மாணவர்கள் மற்றும் ஏனைய தொழில் செய்பவர்களும் வெகுவாக பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த ஒரு வாரகாலமாக ஏற்பட்ட வரும் கடும் பனிப்பொழிவினால் மலையகத்தில் விளையும் மரக்கறி வகைகளிலும் தேயிலைச் செடிகளிலும் ஒரு வகை கரும்புள்ளிகள் தோன்றி இலைவாடல் நோய் ஏற்பட்டு வருவதாக விவசாயிகளும்,தேயிலைப் பயிர் செய்வோரும் கவலை தெரிவித்துள்ளனர். இது தவிர பகல் வேளையிலும் மலையக வீதிகளில் செல்லும் வாகனங்கள் பனிமூட்டம் காரணமாக மஞ்சள் நிற வெளிச்ச விளக்குகளுடன் செல்வதை அவதானிக்க முடிகிறது.

மலையகத்தின் பல பிரதேசங்களில் இரவு நேரம் கடும் குளிரும் அதிகாலை பனிப்பொழிவும் ஏற்பட்டு வருவதால் காலையில் பாடசாலை செல்லும் மாணவகள், ஆசிரியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளிகள் உட்பட பலரும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

கடும் குளிர் காரணமாக கைகால் விறைப்பு ஏற்பட்டு தோல் வெடிப்புக்களும் ஏற்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எம்.ஏ.எம்.ஹசனார் (ஊவா சுழற்சி நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT